Sunday, August 19, 2007

விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் ஏற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும்

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் பேட்டி


-வன்னியூரான்-

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டால் இலங்கைப் பிரச்சினையை இலகுவாக தீர்த்துவிடலாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் `தினக்குரல்'க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

கே : யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் சொந்த மாவட்டத்தில் தமது மக்களோடு நின்று பணியாற்ற முடியாதுள்ள நிலைமை பற்றி?

ப : யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை குவித்து துணை இராணுவக் குழுக்களை சுதந்திரமாக நடமாடவிட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல், மக்களின் பிரதிநிதிகளான எமக்கும் பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசியத்தின் குரலை நசுக்குவதற்கு தொடர்ந்து பல அட்டூழியங்களை செய்து வருகின்றன. யாழ்ப்பாணம் கொலைக்களமாகவுள்ளது. எனவே, மக்களின் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது.

எமது பணியை நாம் அங்கு தொடர்கின்ற போது எம்மோடு தொடர்பு வைக்கும் மக்களின் பாதுகாப்பையும் நாம் கவனிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம். நாம் எமது மக்களின் பாதுகாப்பில் அக்கறையாகவுள்ளோம். மக்களும் எமது பாதுகாப்பில் அக்கறையாகவுள்ளனர். என்னுடைய வீட்டின் ஒருபுற வேலியினை தாண்டினால் அடுத்த வளவில் இராணுவ முகாம். இதேபோன்று பல்வேறு சிக்கல்களினால் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களுடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். என்றாலும் எம்மாலானதை மக்களுக்கு செய்வதற்கு என்றும் நாம் பின்னிற்கப் போவதில்லை.

கே : இந்த மாதிரியான நிலைமை தொடர்ந்தால் மக்களின் பிரதிநிதிகள் என்னதான் செய்யப்போகின்றீர்கள்?

ப : அப்பட்டமான மனித உரிமை மீறலை அரசு செய்து வருகின்றது. எனவே, இவை பற்றி சர்வதேச சமூகத்திடம் எடுத்துரைத்து எமது பக்க நியாயத்தை விளக்க முடியும். அதன் மூலம் பயன் கிட்டுமென நம்புகின்றோம். எம்மால் செய்யக்கூடியதை செய்வதற்குப் பின்னிற்கப் போவதில்லை. இதனைத் தான் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

கே : சர்வதேச சமூகத்தை இன்னும் எவ்வளவு காலத்திற்கு நம்பமுடியும்?

ப : இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த நாளை தமிழினத்தின் சுதந்திரம் பறிபோன நாளாகவே நாம் பார்க்கின்றோம். எமக்கென்றொரு பூர்வீக நிலமுள்ளது. அதில் எம்மை சுதந்திரமாக வாழ விடுங்கள் என சர்வதேசத்தை வலியுறுத்த வேண்டிய தேவையுள்ளது. சர்வதேச சமூகம் எமது விவகாரங்களுடன் தொடர்புபட்டிருக்கின்றது. இன்று எமது பக்க நியாயத்தை புரிந்து கொள்ளக் கூடிய தன்மை அவர்களிடம் வலுத்து வருகின்றது. அகிம்சைப் போராட்டம் செய்த போது, ஆயுதத்தால் அந்த அகிம்சைப் போராட்டத்தை அடக்க நினைத்தவர்களிடம் மண்டியிட மறுத்த தமிழினம் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டத்தை தொடங்கி இராணுவ பலத்தைப் பெற்ற பின்தான் சமாதானம் பேச முற்பட்டனர். இதில் சர்வதேச சமூகமும் பங்காளியானது.

தமிழினத்தின் உரிமையினைப் பெற வழியமைக்கும் என்ற நோக்கத்தில் தான் சர்வதேச சமூகத்தை தொடர்ந்தும் நம்புகின்றோம். இத்தனைக்கும் பின்னர் கூட சர்வதேசம் கண்மூடியிருந்தால் இழப்புகளோடு எமது உரிமையினை பெறுவதற்கு ஆதரவாக இருப்பதைத் தவிர, எமக்கு வேறெதுவும் சரியானதாகப்படவில்லை.

கே : யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தின் நிலைமை என்ன? இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமரவே முடியாதா?

ப : யாழ்ப்பாணத்தில் 25.27 சத வீதமான பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ளது. 34 சத வீதம் இராணுவத்தின் பிடியிலுள்ளது. யாழ். உயர் நீதிமன்றில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ். பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா வழக்குத் தாக்கலொன்றை செய்ததன் பின் மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசும் இராணுவமும் கருத்திலெடுக்கவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர முடியாதநிலையில், இன்னும் உயர் பாதுகாப்பு வலயங்கள் என மக்களின் வாழ்விடங்கள் உருவாக்கப்படுவது தான் இராணுவத்தின் வேலையாகவுள்ளது.

கடந்த அறுபது வருடத்தில் கிழக்கில் மூன்றில் ஒரு பகுதி சிங்கள மயமாக்கப்பட்டுவிட்டது. இந்த வேலை தொடர்கின்றது. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமென்ற போர்வையில் வளமான பூமியில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் தமிழின அழிப்பை நோக்கமாகக் கொண்டவை. இப்படியான நடவடிக்கைகள் தான் அரசை நாம் நம்பமுடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. தமிழரின் பூர்வீக மண்ணிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் வரையில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர வாய்ப்பே இல்லைதான்.

கே : தமிழரின் விவகாரத்தில் சர்வதேச சமூகத்திடம் மாற்றமுள்ளதா?

ப : இலங்கையில் தமிழர்கள் இன அழிப்பிற்குள்ளாகின்றனர் என்பதனை சர்வதேச சமூகம் மறுத்துவிட முடியாத கட்டத்திலுள்ளதை அது வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் செல்லுபடியற்றதாக்கப்பட்டதுடன் சர்வதேச சமூகத்தின் முன் நோர்வேயை சாட்சியாக வைத்து செய்யப்பட்ட ஒப்பந்தமும் அரசினால் மீறப்பட்ட நிலையில் தமிழர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது அரசு.

மனித உரிமை மீறலென சர்வதேசம் குறிப்பிடும் போது உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச சமூகத்தினர் தலையிட முடியாதெனவும் வெளிநாட்டு பிரதிநிதிகளை நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாதெனவும் தென்னிலங்கையிலுள்ளவர்கள் சொல்லுமளவிற்கு நிலைமை வந்துள்ளதென்றால் சர்வதேச சமூகத்திடம் மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டதென நாம் கருதலாம். எனினும், அரசின் பொய்ப் பிரசாரங்களை தொடர்ந்து கேட்காது தமிழினத்தின் உண்மையான நிலையினை கவனியுங்கள். தமிழரை தமிழரின் மண்ணில் சுய நிர்ணய உரிமையுடன் வாழ வழிவகை செய்யுங்கள் என நாம் இன்றிருக்கும் நிலையிலும் சர்வதேசத்தை வலியுறுத்துகின்றோம். அவர்கள் கவனிக்காது போனால் தமிழர் போராடத்தான் வேண்டும்.

ேக : நீங்கள் போராட வேண்டுமென கூறுகிறீர்கள். போராடுவதை வன்முறை, பயங்கரவாதம் என்கின்றனரே?

ப : தமிழர் சுதந்திரமாக வாழ சாத்வீகப் போராட்டம் நடத்தினர். பதிலுக்கு வன்முறை பிரயோகிக்கப்பட்டது. வேறு வழியின்றி வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தமிழரிற்கு ஏற்பட்டது. இதில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கின்றனர். தமிழரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுதமேந்திப் போராடுவதை பயங்கரவாதமென்றால் தமிழின அழிவை செய்யும் பேரினவாத அரசின் நடவடிக்கைகளை எப்படி அழைப்பது? எனவே இதனை சர்வதேசம் புரிந்து கொண்டு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பதை ஏற்றுக் கொண்டால் இலங்கை, பிரச்சினையை இலகுவாக தீர்க்கலாம்.

கே: விடுதலைப் புலிகளுக்கு பயந்துதான் தமிழ் மக்கள் அவர்களை ஏக பிரதிநிதிகள் என கூறுவதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் கூறுகின்றனர். நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

ப: திம்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய இயக்கங்கள் ஆயுதமேந்தி தமிழின விடுதலைக்காக போராடியவர்கள். அரசியல் நீரோட்டத்தில் கலந்துவிட்டனர். இதேபோன்று புலிகளும் அரசியல் நீரோட்டத்தில் கலந்திருந்தால் தமிழினத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருந்திருக்கும். தமிழரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் தான், சர்வதேச சமூகத்தின் கவனம் எம்மீது திரும்பியுள்ளது.

அதுமட்டுமல்லாது, ஆயுதமேந்தி போராடியவர்களும் ஏனைய அரசியல் கட்சிகளுமாக இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக செயற்படுகின்றபோது, புலிகள் தான் ஏனைய அனைவரிலும் பார்க்க தமிழரின் உரிமையினை பெறுவதற்கு பலமாக நின்று பேசக்கூடியவர்களாகவுள்ளனர். எனவேதான், தீய சக்திகளின் பிரித்தாளும் தந்திரத்திற்குள் சிக்கிவிடாது, எமது ஒன்றுபட்ட கோரிக்கையாக புலிகள்தான் தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் எனச் சொல்கின்றோம்.

அத்துடன், புலிகள்தான் எமது பாதுகாவலர் என்ற நிலைமை தமிழர் மத்தியில் வலுப்பெற்றுள்ளது. எனவே, யாரென்ன சொன்னாலும் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் புலிகள் ஏகப் பிரதிநிதிகள் என மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். அதற்கு நாமும் மதிப்பளிக்கின்றோம். பயத்தில் ஏகப்பிரதிநிதிகள் எனச் சொல்கின்றோம் என்பதை எள்ளளவும் ஏற்க முடியாது.

சமாதான முனைப்புகள் நடந்த காலத்தில் திரண்டு வந்த மக்கள் தமது உணர்வை வெளிப்படுத்தினர். எமக்கு வாக்களித்ததன் மூலமும் மக்கள் தமது உயர்வை வெளிப்படுத்தினர். மூதூர் கிழக்கை உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பு போராட்டத்திலும் மக்கள் தமது எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள். அதனைக் கூட இராணுவம் ஆயுத முனையில் தான் அடக்க நினைத்தனர். இவற்றை பார்க்கின்ற போது புரியவில்லையா மக்களின் உணர்வு நீறுபூத்த நெருப்பாகவுள்ளதென.

மக்கள் எந்தப் பக்கம் நிற்கின்றனர் என விளங்குகின்றதல்லாவா? எனவே, மக்களின் பக்கமே நாங்கள் இருப்போம்.

கே: தமிழ் மக்களின் பாதுகாப்பில் புலிகள் பலமாக இருப்பதாக கூறுகின்றீர்கள். இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளின் படை பலத்தை பலவீனப்படுத்தி வருவதாக அரசு கூறுகின்றதே?

ப: கிழக்கை விட்டு புலிகளை வெளியேற்றி விட்டோம் என அரசு கூறுகின்றது. ஆனால், கிழக்கில் புலிகளின் படையணிகள் இன்னும் இருப்பதனை மறைமுகமாக ஒத்துக் கொள்கின்றனர். அங்கே சில மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

புலிகள் கிழக்கின் நிலப்பரப்புகளை விட்டு தந்திரோபாயமாக விலகியுள்ளனர்.

மீண்டும் கிழக்கு மாகாணத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமையை விடுதலைப் புலிகள் உருவாக்குவார்கள்.

கே: இந்த அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சிற்கு சாத்தியமுள்ளதா?

ப: அரசு பேச்சுக்கான அனைத்து விடயங்களையும் புறந்தள்ளிவிட்டு பேசுவதற்கு தயாரென கூறுவது போலியான கூற்றாகும். இன்றிருக்கும் நிலையில் சர்வதேசமும் புலிகளைப் பேச்சுக்கு அழைக்க முடியாத நிலையிலுள்ளது.

எனவே, இயல்பு நிலையினை இல்லாதொழித்து பேச்சுக்கு சாத்தியமே இல்லை... தமிழினத்தை மனிதராகவும் நோக்காமல் படுகொலை செய்து கொண்டு அரசு மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்து விட்டு எந்த முகத்துடன் சமாதானம் பேசமுடியும்.

நன்றி :தினக்குரல்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.