Sunday, August 19, 2007

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுத் தலைவருடன் மகிந்த திடீர் சந்திப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007]


அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுத்தலைவரும், அமைச்சருமான திஸ்ஸ விதாரனவை அலரி மாளிகைக்கு நேற்று சனிக்கிழமை மதியம் திடீரென அழைத்த அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவருடன் முக்கிய பேச்சுவார்த்தையினை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் அனைத்துக் கட்சிக்குழு மாநாட்டை மீண்டும் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை கூட்டுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவின் பிரகாரம் நாளை மறுநாள் நடைபெறும் அனைத்துக் கட்சிக்குழு மாநாட்டிற்கு வருகை தருமாறு அனைத்துக் கட்சிக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிக்குழு மாநாடு கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென ஒத்திவைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து இனிமேல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் அந்த கட்சியின் பிரதிநிதியான கே.என்.சொக்சி மாநாட்டில் கலந்து கொள்வாரா என்று உடனடியாக எதுவும் கூறமுடியாது என ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

அனைத்துக் கட்சிக்குழுவின் மாநாட்டை இறுதிக்கட்டத்தில் ஒத்திவைத்ததற்கு வெளிநாட்டுத் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையிலும் சிறுபான்மைக் கட்சிகளின் விசனத்திற்கு மத்தியிலுமே அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகள் குழுத்தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரனவை மகிந்த ராஜபக்ச திடீரென அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் இருவரும் கூட இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தீர்வுத்திட்டத்தில் இணக்கம் காணப்படாத ஒரிரு விடயங்கள் குறித்தே இவர்கள் அனைவரும் ஆராய்ந்துள்ளனர்.

குறிப்பாக இணக்கம் காணப்படாமல் உள்ள ஒரிரு விடயங்களில் இணக்கத்தை எட்டும் வழிவகைகள் குறித்தே இந்த பேச்சுவார்த்தையில் அதிக கவனம் செலுத்தப்பட்டள்ளது.

எனினும் அனைத்துக் கட்சிக் குழுக்கூட்டத்திற்கு முன்னர் நாளை கட்சித்தலைவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து அவர்களிடமும் மேற்படி ஒரிரு விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

கட்சித் தலைவர்களுடன் மகிந்த ராஜபக்ச நடத்தும் பேச்சுக்களின் அடிப்படையிலேயே மேற்படி ஒரிரு விடயங்களுக்கான இணக்கம் நாளை மறுநாள் நடைபெறும் அனைத்துக் கட்சிக்குழு மாநாட்டில் எட்டப்படலாம் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதும் இவ்வார இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கான அனைத்து கட்சிக்குழுவின் தீர்வுத்திட்டம் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.