Thursday, August 23, 2007

ரணிலை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டுமென லண்டனில் சிவாஜிலிங்கம் கூறியதாக பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தினார் ஜெயராஜ்

[வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007] வடபகுதி படையினர் வசமாகாமல் இருக்க வேண்டுமெனில், இந்த வருடம் முடிவடைவதற்குள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வந்து விட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.கே. சிவாஜிலிங்கம் லண்டனில் தெரிவித்திருப்பதாக அரசதரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே கூறியதை அடுத்து நேற்று புதன்கிழமை சபையில் அரச தரப்பினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் இடையில் சர்ச்சை மூண்டது. பாராளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது. சபை கூடியதும் அறிக்கையொன்றை விடுத்த சபாநாயகர், சிங்களப் பத்திரிகை ஒன்றில், தனக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக வெளியான செய்திமூலம் தனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக சிவாஜிலிங்கம் எம்.பி.சமர்ப்பித்திருந்த சிறப்புரிமைப் பிரச்சினையை சிறப்புரிமைக் குழுவுக்கு யோசனையாக சமர்ப்பிக்க முடியுமென தெரிவித்தார். இதன் போது, குறுக்கிட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே, இந்த வருடம் முடிவடைவதற்குள் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டு வந்துவிடவேண்டுமெனவும் இல்லாவிட்டால் வடக்கு முழுவதும் படையினர் வசமாகிவிடுமெனவும் சிவாஜிலிங்கம் லண்டனில் கருத்து வெளியிட்டிருப்பதாகவும் இப்படி தெரிவித்திருக்கும் ஒரு எம்.பி.க்கு இந்த சிறப்புரிமைப் பிரச்சினையும் கொண்டுவரப்பட்டிருப்பதாக தான் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். அமைச்சர் பெர்ணான்டோ புள்ளேயின் கூற்றை மறுத்து எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா, இது எம்.பி. ஒருவரின் சிறப்புரிமையை வைத்து இன்னுமொரு எம்.பி.யின் சிறப்புரிமையை மீறும் செயலெனவும் அமைச்சர் பெர்ணான்டோ புள்ளேயின் மேற்குறித்த கூற்றை ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்க வேண்டுமெனவும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே நினைத்தவாறெல்லாம் சபையில் பேச முடியாதெனவும் அதற்கென்று வரைமுறையொன்று இருப்பதாகவும் ஜோசப் மைக்கல் பெரேரா சாடினார். இருப்பினும் அமைச்சர் பெர்ணான்டோ புள்ளே அவரது கருத்துக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதனால், அவரது கூற்றை ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து அகற்ற முடியாதெனவும் இது குறித்து ஆராய வேண்டுமெனவும் சபாநாயகர் தெரிவித்தார். இதேநேரம், தனது கூற்றுக்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக மீண்டும் தெரிவித்த பெர்ணான்டோ புள்ளே, சிவாஜிலிங்கம் லண்டனில் கூறிய கருத்து "லங்காப்ரூத்" இணையத் தளத்தில் வெளியாகியிருப்பதாகவும் அதன் பிரதியை தன்னால் சமர்ப்பிக்க முடியுமெனவும் தெரிவித்தார். இச் சந்தர்ப்பத்தில் சபைக்குள் பிரவேசித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலின் போது, சிவாஜிலிங்கம் எம்.பி.உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க வேண்டாமென மக்களுக்கு கூறியிருந்ததாக சுட்டிக்காட்டியதுடன் மேற்குறித்த விடயத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையெனவும் கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.