Friday, August 24, 2007

உலகியே யாழ். குடாதான் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடம்: அனைத்துலக ஊடக அமைப்பு

[வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2007] சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள யாழ்ப்பாண குடாநாடுதான் உலகிலேயே ஊடகவியலாளர்கள் பணிபுரிய மிகவும் ஆபத்தான இடம் என்று அனைத்துலக ஊடக அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக ஊடக ஆதரவு அமைப்பும் தெரிவித்துள்ளன. இந்த இரண்டு அனைத்துலக ஊடக அமைப்புகள் இலங்கை நிலைமைகள் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டன. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் உள்ளது. ஊடகவியலாளர்கள் படுகொலைகள், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தணிக்கைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 2006 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் இரண்டு ஊடகவியலாளர்கள் உட்பட ஆகக்குறைந்தது 7 ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளார். 3 ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஊடகப் பணியை கைவிட்டு பல ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். மிகவும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் 90 விழுக்காடு ஊடகப் பணியாளர்களை ஓராண்டில் இழந்திருக்கிறார்கள். உதயன் தமிழ் நாளிதழின் ஒரு ஊடகவியலாளர் உயிராபத்து காரணமாக 13 மாத காலமாக அலுவலகத்தை விட்டு வெளியேவராமலேயே பணி புரிந்து வருகிறார். சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள், துணை இராணுவக் குழுவினரிடையேயான மோதலில் ஊடகவியலாளர்கள் சிக்கிக் கொள்கின்றனர். ஊடகங்களில் கருத்துக்களோ, கட்டுரைகளோ, கேலிச்சித்திரங்களோ, புகைப்படங்களோ வெளியிட்டால் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையிலேயே ஊடகவியலாளர்கள் உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இத்தகைய ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்படுவதால் அங்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பான சுயாதீன செய்திகள் வெளிவருவதில் சிக்கல்கள் உள்ளன" என்று எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் தலைவர் வின்செண்ட் ப்ரொசெல் குறிப்பிட்டுள்ளார். "ஊடகவியலாளர்கள் பணிபுரிய ஈராக் மிகவும் மோசமான இடமாக உள்ளது. உள்நாட்டுப்பு போர் அல்லது இனப்பிரச்சினை நடைபெறும் இடங்கள் எனில் காசாவிலும் செச்சேன்யாவிலும் இத்தகைய நிலைமை உள்ளது" என்றும் அவர் கூறினார். மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்ற உலகிலேயே மிகவும் ஆபத்தான இடமாக சிறிலங்கா உள்ளது என்று அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி ஜோன் ஹோல்ம்ஸ் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது ஊடகவியலாளர்கள் பணியாற்ற உலகிலேயே மிகவும் ஆபத்தான இடமாக சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள யாழ்ப்பாண குடாநாடு உள்ளதாக அனைத்துலக ஊடக அமைப்புக்களும் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.