Saturday, August 25, 2007

மோசமான விமர்சனங்களுக்குப் பின்னரும் ஏன் ஐ.நா. பொங்கி எழவில்லை?: இளந்திரையன் கேள்வி

[சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2007]


சிறிலங்கா அரசாங்கத்தின் மோசமான விமர்சனங்களுக்குப் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை பொங்கி எழாமல் உறுமாமல் பூனை போல் இருப்பது ஏன்? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.08.07) ஒளிபரப்பாகிய "நிலவரம்" நிகழ்ச்சியில் இராசையா இளந்திரையன் கூறியதாவது:

அண்மையில் இலங்கை வந்து சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்சின் வருகை என்பது கொழும்பால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம். மனித உரிமை தொடர்பாக நிச்சயமாக அவர் ஏதாவது கூறுவார், அதனை எதிர்க்க வேண்டும், அத்துடன் மனித உரிமை தொடர்பாக யார் வந்து கதைத்தாலும் எதிர்ப்பது ஒரு என்கின்ற நிலைப்பாடு இப்போது கொழும்பு நிர்வாகத்திடம் இருக்கின்றது. இருக்க வேண்டும் அது தயார்படுத்தப்பட்ட விடயமாக இருக்கின்றது.

அந்த நிகழ்ச்சிக்குள்ளே இங்கே வந்து ஜோன் ஹோல்ம்ஸ் பலியாகிக்கொண்டாரா அல்லது இந்த விடயங்களை அவர் இங்கே வந்து இப்போது பழகிக்கொண்டிருக்கிறாரா என்பதுதான் எங்களுடைய கேள்வி.

ஏனெனில் அவர் கிழக்கிற்கும், குடாநாட்டிற்கும் சென்றிருந்தார். அங்கே உள்ள மக்கள் ஒன்றிரண்டு பேரை அவர் சந்தித்ததாகவும் கூறுகின்றார். அப்படியாக இருந்தால், கிழக்கில் அபிவிருத்திக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று அவர் என்ன அடிப்படையில் பேசினார் என்பது முதலாவது கேள்வியாக இருக்கிறது.

ஏனெனில் மனிதாபிமான நடவடிக்கைகளை செய்வதற்கான ஏதுநிலை இலங்கையில் இல்லை என்று அவர் கூறியிருக்கின்றார். பின்பு எந்த அடிப்படையில் அந்த நிதிகளை வழங்குவதற்கு அவர் ஒப்புக்கொண்டார் என்பது ஒரு பக்கம்.

இரண்டாவது பக்கம் எனனவெனில்,

மனிதாபிமானப் பணியாளர்கள் அதாவது கொல்லப்பட்டவர்களின் தொகை தொடர்புடைய வித்தியாசம் ஒன்றை அவர் வெளியிட்டது ஆளும் தரப்பினிடையே பெரிய அலையைக் கிளப்பியிருக்கிறது. அதன் விளைவாக அவர் மேல் எழுந்த விமர்சனங்கள் காட்டமானவை என்று கூறுவதனை விட ஒரு மிகவும் விளிம்பைத் தொட்டவை என்று கூறமுடியும்.

ஏனெனில்,

அவர் பயங்கரவாதி என்று விமர்சிக்கப்பட்டிருக்கின்றார்.

பயங்கரவாதிகளிடமிருந்து கையூட்டு பெற்றிருக்கின்றார் என்றும் விமர்சிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்த அறிக்கையைப் பார்த்து ஐக்கிய நாடுகள் அமைப்பு பொங்கி எழுந்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

அது பூனை போல மியாவ் என்று கூறியிருக்கின்றது. கர்ச்சிக்கவில்லை, உறுமவில்லை.

ஒரு நீளமான நிகழ்ச்சித் திட்டத்துடன் அவர் வந்திருப்பாராக இருந்தால், கொழும்பை குழப்ப விரும்பாத காரணத்தினால் அவர் அப்படி அதனை பூசி மெழுகியிருக்கலாம். இது ஒரு பார்வை.

இவ்வளவு மோசமாக விமர்சிக்கப்பட்ட பின்பும், எந்தவொரு ஐ.நா. அமைப்புக்களினுடைய செயற்பாடுகள் நிறுத்தப்படுவதாகவோ அல்லது இப்படியான ஒரு விடயம் கண்டிக்கப்படத்தக்கவை என்ற வகையில் ஐ.நா. தரப்பில் இருந்த கண்டிப்போ, ஒரு கண்டனமோ அங்கே காட்டமாகவோ, காரசாரமாகவோ வெளிவந்ததாகவோ இல்லை.

இவை எல்லாவற்றையும் பார்க்கின்ற போது, இவை எல்லாம் ஓரளவு எதிர்பார்க்கப்பட்ட விடயமே என்கின்ற தோற்றப்பாட்டை அவதானிகளிடையே கொடுக்கின்றது.

ஆனால், இந்த இடத்தில் அவ்வகையான தோற்றப்பாட்டின் பின்புலத்தில் அனைத்துலக சமூகத்தின் பார்வைதான் என்ன? மேற்குலத்தின் இங்கே உள்ள நிலைமையின் தொடர்புடைய பார்வைதான் என்ன? மனிதாபிமானம் தொடர்பில் பேசுகின்றார்கள், பேசியவர்கள் மீண்டும் பேச்சு வாங்குகின்றார்கள்.

ஓரளவுக்கு நிலைமையை சமாளித்துக்கொண்டே சிறிலங்கா அரசை கைவிடாத சூழ்நிலையை அவர்கள் காட்டிக்கொள்கிறார்கள்.

ஆகவே இந்தப் பின்னணிகளை உற்றுப்பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், பாதிப்புக்குள்ளான தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்பதுதான் இன்றைய நிலமை.

மனிதாபிமான உதவிகளுக்கு ஏற்ற நாடாக இலங்கை இல்லை என்று ஜோன் ஹோல்ம்ஸ் கூறிவிட்டு பின்னர் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தங்களால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என்று கூறியிருக்கும் மாறுபட்ட கருத்தில்தான் பன்னாட்டு நகர்வுகளின் சூட்சுமமே இருப்பதாக பலர் கருதுகின்றனர்.

மக்களைப் பொறுத்த வரையில் மக்களின் வேதனைக்காக குரல் கொடுக்கின்ற அமைப்புக்களை அவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் அபிமான கண்ணோட்டத்துடனும் பார்க்கின்றார்கள் அதனை தவிர்க்கவும் முடியாது.

இந்த மக்கள் வேதனைப்படுகின்றார்கள். அந்த மக்களுக்காக ஐ.நா. அமைப்பின் பிரதிநிதிகள் குரல் கொடுக்கின்றார்கள். ஆனால் அந்த குரல்களின் விளைவுகள் என்ன என்பதனை தமிழ்மக்கள் உற்றுப்பார்க்க வேண்டும்.

அந்தக் குரல்களின் விளைவுகள் என்ன?

அவை எந்தவகையான தாக்கத்தினை செலுத்தக்கூடும். எங்களுடைய இலட்சியப் பயணத்தில் அல்லது எங்களுக்கு இருக்கின்றதான தமிழ்மக்களுக்கு இருக்கின்றதான துன்பத்தை தீர்ப்பதில் அவர்களுடைய வருகைகளும், அறிக்கைகளும், செயற்பாடுகளும் எவற்றைச் சாதிக்கப் போகின்றது என்கின்ற கேள்வி இப்போது வருகின்றன.

அதிக அறிக்கைகளை நாங்கள் கண்டுவிட்டோம்.

அந்த அறிக்கைகளுக்கான பதில் அறிக்கைகளையும் கண்டுவிட்டோம்.

ஆனால் யாராவது, அந்த அமைப்பில் உள்ள யாராவது இவ்வளவு கொடுமைகளைச் செய்கின்ற சிறிலங்கா அரசுக்கு படைத்துறை ரீதியான ஆதரவை வழங்க மாட்டோம் என்றோ, பயிற்சிகளை வழங்க மாட்டோம் என்றோ அல்லது ஆயுதங்களை வழங்க மாட்டோம் என்றோ எவருமே கூறியது கிடையாது.

நிதிகளை மட்டுப்படுத்துவோம் என்கிற வகையில் அறிக்கைகள் வந்தாலும் கூட அந்த மட்டுப்படுத்தல்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பூ என்று ஊதிவிடுகின்றது இன்றைய கொழும்பு நிர்வாகம்.

இந்த நிலையில் இத்தகைய வருகைகள் எங்களுடைய மக்களுக்கு எவற்றைப் பெற்றுக்கொடுக்கப் போகின்றது என்கின்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றன.

அந்தப் பக்கத்தை இப்போது உற்றுப் பார்க்கின்றவர்கள், உன்னித்து நோக்குபவர்களின் தொகை, ஆர்வம், நாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில்தான் அவருடைய வருகையும் அமைந்திருக்கின்றது சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. அந்த சர்ச்சை ஐ.நா. சபையின் மிக முக்கியமான அதிகாரியை நோக்கிய சொல்வீச்சுக்கள், குற்றச்சாட்டுக்கள் ஐ.நா. சபையினால் கிட்டத்தட்ட சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்ளப்பட்டதோ என்கிற தொனியில் சமாளிப்பு அறிக்கைதான் வந்திருக்கின்றதே தவிர ஐ.நா. சபை தன்னை அங்கே நெஞ்சை நிமிர்த்தி, தலையை நிமிர்த்தி பேசியதாக தெரியவில்லை.

தமிழ் மக்களின் பார்வையில் இது மிகவும் நம்பிக்கை பெறமுடியாத ஒரு செயன்முறை என்பதாகவே காணமுடிகின்றது.

உண்மையில், காலம் காலமாக தொடர்ச்சியாக ஆட்சியமைத்த கொழும்பு ஆட்சியாளர்கள், அரசாங்கங்கள் ஒரு நச்சுப்பாம்பை ஊட்டி வளர்ப்பதனைப் போன்று தென்னிலங்கை சிங்களவர்களிடையே தமிழர்களுக்கு எதிரான குரோதத்தை வளர்த்து வைத்திருக்கிறார்கள்.

அதனுடைய ஒரு பயன்விளைவாகத்தான் இந்த விடயம் அமைந்திருப்பதாகவே நாங்கள் காணக்கூடியதாக இடம் உண்டு.

யார் மனித உரிமைகளை மீறினாலும் இங்கே மனித உரிமைகள் என்று உரையாடப்படுவது, தமிழர்களினுடைய உரிமைகள். ஏனெனில் இங்கே ஒடுக்கப்படுவது தமிழர்களினுடைய மனித உரிமைகள்தான். தமிழர்களினுடைய மனித உரிமைகள் தொடர்பில் யார் கதைத்தாலும் சிங்களவர்கள் அத்தனை பேருக்கும் சீற்றம் வருகிறது.

அவர்களை எதிர்ப்பவர்கள்தான் சிங்கள மக்களின் கதாநாயகர்களாக கருதப்படுவது மாதிரியான மிகவும் அதாவது நாகரீகத்துக்கும் ஒத்துவராத அரசியல் பண்பாட்டை, அரசியல் பண்பியலை சிங்களம் தனக்குத்தானே வளர்த்து வைத்திருக்கின்றது. இது ஒருபக்கம்.

அதனைத்தவிர இப்போது இருக்கின்ற ஒரு பன்னாட்டுச் சூழலில் கூட, அவ்வகையான எதிர்ப்பு உணர்வுகள் இருந்தாலும் கூட பன்னாட்டுச் சமூகமானது கொழும்பு நிர்வாகத்தை எப்போதும் அரவணைத்துச் செல்கின்ற ஒரு தோற்றப்பாட்டினை மறுபக்கத்தில் காண்கின்றோம். தொடர்புடைய ஐ.நா. அதிகாரிகள் மிக உயர் அதிகாரிகளாக இருந்த போதும் கூட அவர்கள் மிகவும் இலகுவாக அவமானப்படுத்தப்பட்டார்கள்.

அதுபற்றிய பின்விளைவுகள் கூட இங்கே உள்ள அரசுக்கு இருக்கவில்லை. அப்படியான ஒரு சூழ்நிலையில் கூட

அவர்களுடைய குற்றச்சாட்டுக்கள் கொழும்பை மையப்படுத்தி இயங்குகின்ற

அதாவது,

பன்னாட்டுச் சமூகத்தினுடைய அல்லது அந்த வகையில் வருகின்ற பிரதிநிதிகளினுடைய குற்றச்சாட்டுக்கள் கூட கொழும்பை மையப்படுத்தி இயங்குகின்ற அரசாங்கத்தை அதாவது, ஆட்சியில் இருப்பவர்களைச் சாடுகின்ற தன்மை உடையதே தவிர

கொழும்பினுடைய ஆட்சியை தமிழர்களை மட்டும் ஒடுக்குகின்ற இனவாதக் கட்டுமானத்தை

சிங்கள அரசியல் பெரும்பாகச் சிந்தனையை

சாடுவதாகவோ

அதனை குறை காண்பதாகவோ இல்லை.

இந்தச் சூழ்நிலையை எங்கள் மக்கள் இந்த சம்பவங்கள் ஊடாக புரிந்து கொள்வதன் மூலம் இன்றைய சூழ்ச்சிகளும், சுழிகளும், சூறாவளிகளும் நிறைந்த பன்னாட்டு இராஜதந்திர நகர்வுகளை புரிய வேண்டும்.

கிழக்கில் "படையாட்சி" நிர்வாகம்

கிழக்கு மாகாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் அல்லது வேறு நிறுவனங்களின் உதவிகள் பெறப்பட வேண்டுமாக இருந்தால் கிழக்கில் படை அதிகாரங்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற இராணுவத் தளபதி பராக்கிரம பன்னிப்பிட்டியவின் கட்டளையின் பேரில் அல்லது அனுமதியின் பேரில்தான் கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் அல்லது எந்த மாற்றங்களையும் செய்யலாம்.

இந்தக் கட்டத்திற்கு சிறிலங்கா அரசியல் மாறியிருப்பதும், அங்குள்ள மக்கள் படை அதிகாரியின் கீழ் மாற்றப்பட்டிருப்பதும், உண்மையில் அதுவொரு கொடுமையான சூழ்நிலைதான்.

எப்போதுமே ஒரு சுதந்திரமான, சுயாதீனமான ஒரு இயங்குமுறைக்கு கீழ் வாழ விரும்புகின்ற மக்கள் கூட்டத்தை அடிமைப்படுத்தி, அவர்களை ஒரு படை நிழலின் கீழ் அதாவது, படையின் கொடிய கரங்களின் கீழ் கொண்டுவந்து, அங்கே ஜனநாயகம் நடைபெறுவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தப்படுகின்ற சூழ்நிலைதான் அங்கே இப்போது இடம்பெறுகின்றது.

உதாரணத்துக்கு, கொக்கட்டிச்சோலையில் இராணுவத்தினரின் படையெடுப்பு முடிவுற்ற கையோடு அங்கே ஒரு இராணுவ கட்டவிழ்ப்பு நடைபெற்றது. இது வழக்கமாக அந்நிய நாடொன்றை ஒரு எதிரி நாடு கைப்பற்றும் போது அங்கே இராணுவத்தை கட்டவிழ்த்து விடுவார்கள். அவர்கள் ஆடவேண்டிய மட்டும் ஆடலாம். கொள்ளையடிக்கலாம், கொலை செய்யலாம், தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்ளலாம். அதுபோல்தான் கொக்கட்டிச்சோலையிலும் பொருட்களை எடுத்துக்கூடச் சென்றார்கள். வாகனங்களில் வீட்டுக் கதவுகளின் நிலைகள் கூட சில இடங்களில் இடித்து ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. தளபாடங்கள், கோயில்கள் கூட கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் பண்பாட்டுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது.

இப்போது மார்சல் லோ என்று கூறப்படுகின்ற அந்த "படையாட்சி" ரீதியாக அதாவது வெளிப்படையாக சொல்லப்படாது விட்டாலும் நடைமுறையாக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே இருக்கின்ற சட்டங்களான அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், சிறப்பாக இராணுவத்தினருக்கு கொடுக்கப்படுகின்ற சில சலுகை விதிகள், அவ்வப்போது தரப்படுகின்ற சில விதி ஒழுங்குகள். அத்தோடு சேர்ந்து இந்த உயர்பாதுகாப்பு வலயம் எல்லாம் "படையாட்சி" ஒன்றை சட்டபூர்வமாக்கின்ற அதாவது, அதற்கு சமனாக செயற்பாடுகளை செய்யக்கூடிய ஏதுநிலையை அந்த ஆற்றலை, அந்த அதிகாரத்தை படையினருக்கு வழங்கியிருக்கிறது.

அது உயர்மட்டத் தளபதிகளுக்கு மட்டுமல்ல, அடிமட்ட சிப்பாய்கள் வரைக்கும் மக்களை அடக்கி, ஒடுக்கி ஆட்சியை வலுப்படுத்தி உறுதியாக வைத்திருப்பதற்கான அதிகாரம் அங்கே அவர்களுக்கு தரப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் நாங்கள் நோக்குவோமாக இருந்தால், அதுவொரு 100 வீதமான "படையாட்சி" ஆகும். கிராம மட்டத்திலான அபிவிருத்திகளில் கூட, படை அதிகாரி ஒருவர் அல்லது சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த குழுக்களை தலைமை தாங்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக முறுகல்களும், முரண்பாடுகளும் போருமாக இரண்டு இனங்களுக்கு இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அந்த எதிரி இனத்தைச் சேர்ந்தவன் ஆயுதங்களுடன் வந்து இந்த ஊரில் அபிவிருத்தி செய்வானாம் என்று கூறுவது எவ்வளவு கேலிக்கூத்தான விடயம், எவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

அங்கே குழுக்களில், கிராம மட்டங்களில் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறப்படுகின்றவர்கள் இருந்தாலும் கூட அங்கே அவர்களால் எதனையும் சாதிக்க முடியாது. ஏனெனில், அங்கே தலைமையில் இருப்பது அந்த படை அதிகாரிகள். இவ்வாறாக அந்த மக்களை இரும்புப் பிடிக்குள் கொண்டு வந்து அவர்களுடைய உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்கின்ற முயற்சியை கொழும்பு நிர்வாகமும், படைத்துறையும் அங்கே செய்து வருகின்றன.

அவ்வகையான கொடிய சூழலினை எதிர்கொண்டுதான் எங்கள் மக்கள் அங்கே உணர்வுடனும், விழிப்புடனும் வாழ்ந்து வருவதனைத்தான் நாம் கிழக்கில் காணக்கூடியதாக இருக்கின்றது.

சிறிலங்கா அரசு எந்தப் படை நடவடிக்கைகள் எடுத்தாலும் அது மனிதாபிமான நடவடிக்கை என்றுதான் கூறுகிறது.

கொழும்பிலிருந்து வெளிவருகின்ற அந்த செய்திகள் யாவும் உண்மையில் செய்திகள்தானா அல்லது ஏதாவது நகைச்சுவைப் பத்திரிகை படிக்கின்றோமா என்கின்ற உணர்வுகள் ஏற்படுவது வழக்கம்.

லட்சக்கணக்கான மக்களை பலவந்தமாக இடம்பெயர வைத்து, அவர்கள் இடம்பெயர முடியாது எங்களுடைய இல்லங்களை விட்டுப் போகமாட்டோம் என்று கூறிய சூழ்நிலையில் அவர்கள் மீது எறிகணைகளை வீழ்த்தி தொகை, தொகையாக கொன்றொழித்து இடப்பெயர்வை நடத்தி இன்று அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் அவலப்படவிட்டிருக்கின்ற அந்தப் படை நடவடிக்கைக்கு பெயர் மனிதாபிமான படை நடவடிக்கை என்றால் அதனைவிட நகைச்சுவை நடவடிக்கை இந்த உலகத்தில் நீங்கள் கண்டுபிடிக்க மாட்டீர்கள். இதில் அதனை விடப் பெரிய விடயம் என்னவெனில், சில பன்னாட்டு அமைப்புக்கள் அதனைப் பார்த்து ஆமாம் போடுவதுதான். அவ்வகையான சூழல்தான் அங்கே இருந்து வருகின்றது. அதற்குரிய காரங்கள், பின்னணிகள் வேறாக இருக்கலாம்.

அப்படியிருந்தும் கூட அங்கு இப்போது ஒரு சூழ்நிலை அதாவது அபிவிருத்தி சார்ந்த ஒரு சூழ்நிலை அங்கே இருக்குமா அது எப்படி அங்கே நடைபெறப் போகின்றது? மிகவும் அவலமான சூழ்நிலைக்;கு அந்த மக்களை இட்டு வந்தவர்கள் எவ்வாறான ஒரு கரிசனையை அந்த மக்கள் மீது கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்விகள் எல்லாம் இங்கே எழுந்து நிற்கின்றன.

அவற்றுக்கான நியாயமான பதில்கள் அடையப்படாமல், மக்களின் குரல்களின் நியாயப்பாடுகள் புரியப்படாமல் அங்கு எந்த முயற்சியாவது செய்வது சாத்தியம் இல்லை என்றே பெரும்பாலான நடுநிலை அவதானிகள் கருதுகின்றனர் என்றார் அவர்.

நன்றி : புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.