Thursday, August 30, 2007

வடபகுதியில் வலிந்த தாக்குதல் நடவடிக்கை இல்லை: சிறிலங்கா அமைச்சர்

[வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007]


தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வடபகுதியில் வலிந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் ஏதும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

மலேசியப் பயணத்தின் போது கோலாலம்பூரில் ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளரிடம் ரோகித போகல்லாகம கூறியதாவது:

24 ஆண்டுகால இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து வருகிறது. வடபகுதியில் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் ஏதும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வைக்க வேண்டும் என்பதுதான் எமது விருப்பம்.

எதிர்வரும் சில வாரங்களில் சிறிலங்கா அரசாங்கம் அமைத்த அனைத்து கட்சிக்குழுவானது அரசியல் தீர்வுப் பரிந்துரைகளை வெளியிடத்தயாராகும். அரசியல் தீர்வுக்கான பரிந்துரைகளை சிறிலங்கா நாடாளுமன்றம் ஏற்க வேண்டியதுள்ளது. வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டால் அதனை மக்கள் மன்றத்தில் முன்வைப்போம்.

சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகள் மெதுவாக நடத்தப்படுவதாக கூறப்படுவது உண்மையில்லை.

மனிதாபிமான பணியாளர்கள் பாதுகாப்பில் சிறிலங்கா மிக மோசமான இடமாக உள்ளது என்று ஐ.நா. அதிகாரி கூறியமைக்கு எதிராக அரசாங்க கொறாடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்த கருத்துகளுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. ஐ.நா. அதிகாரி ஜோன் ஹோல்ம்சை "பயங்கரவாதி" என்று ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே விமர்சனம் செய்தமையானது அவரது தனிப்பட்ட கருத்தாகும். அரசாங்கத்தின் கருத்து அல்ல. ஆகையால் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையில்லை என்றார் அவர்.

வடபகுதியில் வலிந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அண்மையில் அறிவித்திருந்தமையானது அனைத்துலக அளவில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது ரோகித அதனை மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.