Tuesday, August 14, 2007

அவலத்தில் மணற்காடு இடைத்தங்கல் முகாம்

[செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007] வடமராட்சி கிழக்கில் மணற்காட்டில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் எதுவித வசதியுமற்ற அவலச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர். ஆழிப்பேரலையால் வீடுகள் மற்றும் சொத்துகளை இழந்த 210 குடும்பங்களைச் சேர்ந்த 759 பேர் கடந்த 3 ஆண்டுகளாக இடைத்தங்கல் முகாமில் வாழ்ந்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தற்காலிக கொட்டில்களிலேயே அந்தக் குடும்பங்கள் தற்போதும் வாழ்ந்து வருகின்றன. அந்தத் தற்காலிக கொட்டில்கள் முற்றாகச் சேதமடைந்துவிட்டன. உணவு உண்ணக்கூட முடியாத அளவு காற்றினால் மணலும் கொட்டப்படுகிறது. அரச சார்பற்ற நிறுவனங்கள் நிர்மாணித்த வீடுகளும் நிறைவு செய்யப்படவில்லை. அப்பகுதிக்கு அரச சார்பற்ற நிறுவனத்தினர் எவரும் செல்லக்கூடாது என்று சிறிலங்கா இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். கடற்றொழிலை நம்பி வாழும் அந்தக் குடும்பத்தினரை கடற்றொழிலுகும் சிறிலங்கா கடற்படையினர் அனுமதிப்பதில்லை. கடற்றொழிலுக்குச் சென்றாலும் காலை 9 மணிக்குச் சென்றுவிட்டு பிற்பகல் 12 மணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். உறவினர்களின் வீட்டுக்குச் செல்லவும் கூட சிறிலங்கா இராணுவத்தினரின் அனுமதி பெற வேண்டுமாம். மலசல கூடங்களைச் சீர் செய்யவும் உரிய பிரதேச சபையின் நடவடிக்கை எதனையும் மேற்கொள்வும் இல்லை. குடிநீர்க் கிணறு மோசமாக பாதிப்படைந்துள்ளது. அந்த முகாமுக்கு சுகாதார அலுவலர்களும் மாதம் இருமுறைதான் வருகின்றனர். இது தொடர்பாக மணற்காட்டுப் பங்குத் தந்தை மூலம் பொது மக்கள் கையொப்பமிட்டு யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மனு கையளிக்கப்பட்டது. புனித அந்தோனியார் கிராம அபிவிருத்தச் சங்கமும் இது தொடர்பிலான முறைப்பாட்டைக் கையளித்தனர். இதனைத் தொடர்ந்து யாழ். மனித உரிமைகள் ஆணைக் குழுவினர் அந்த முகாமுக்குச் சென்று அவல நிலையைப் பார்வையிட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.