Wednesday, August 15, 2007

சந்திரிகாவை கண்காணிக்க மகிந்த உத்தரவு

[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2007]


சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவை தொடர்ந்து கண்காணிக்குமாறு மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் த மோர்னிங் லீடர் நாளேடு வெளியிட்டுள்ள செய்தி விவரம்:

ரணில் விக்கிரமசிங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரினால் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படும் பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையை கண்டு கலங்கிப் போயுள்ள மகிந்த ராஜபக்ச அரசிற்கு, முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவின் வரவும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து எமிரேட்ஸ் வானூர்தியில் முன்னாள் அரச தலைவர் சந்திரி;கா குமாரதுங்கா கடந்த ஞயிற்றுக்கிழமை கொழும்பை வந்து அடைந்தார். அதனை தொடர்ந்து கட்டு நாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையத்தின் பாதுகாப்பு பிரிவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வான்போக்குவரத்து பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன சந்திரி;காவை பின்தொடருமாறு உத்தரவுகளை வழங்கியுள்ளார்.

சந்திரி;காவின் ஒவ்வொரு அசைவுகளையும் அவதானிக்கும் படியும், அவர் தீர்வையற்ற கடைகளில் கொள்வனவு செய்யும் பொருட்களையும் கண்காணிக்கும் படியும் குணரட்னா, பாதுகாப்பு பிரிவினருக்கு கட்டளையிட்டிருந்தார்.

எனினும் சிறிலங்கா திரும்பியுள்ள சந்திரிகா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவினரை மட்டுமல்லாது, சுதந்திரக் கட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்களையும் சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் சிறீலங்காவை வந்தடைந்த பின்னர் தனது பழைய நண்பரான மங்களாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதுடன் ஏறத்தாழ 90 நிமிடங்கள் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

ஐ.தே.கவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், பேரணிகளில் திரண்ட மக்கள் சக்தி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள், அரசின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள், இனப்பிரச்சனை ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக சந்திரிகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 24 ஆம் நாள் அத்தனாகலவில் நடைபெறவுள்ள மகிந்த அரசாங்கத்துக்கு எதிரான பொதுக்கூட்டம் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிதாக தோற்றம் பெற்றுள்ள தேசிய சபையுடன் சந்திரி;கா இணைந்து கொள்ளலாம் என மகிந்த தனது கவலையை தெரிவித்தாலும், சந்திரிகா தனது எதிர்கால திட்டங்களை விரைவில் தெரிவிக்கமாட்டார் எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.