திருகோணமலை மாவட்டம் மூதூர் அரபாத் நகர் முஸ்லிம் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா இராணுவம் எச்சரித்துள்ளது.
சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க இது தொடர்பில் கூறியுள்ளதாவது:
திருகோணமலையின் சில பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக்க அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் அரபாத் நகரும் அடங்கும். இங்கிருந்து 1985 ஆம் ஆண்டு அனைத்து முஸ்லிம் மக்களும் வெளியேறியிருந்தனர். அப்போது 53 குடும்பங்களே இப்பகுதியில் இருந்ததாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் இப்போது 84 குடும்பங்கள் இப்பகுதிக்கு உரிமை கொண்டாடுகின்றன.
இதுவரை காலமும் இந்த பகுதிகளை திரும்பிக்கூட பார்க்காமல் இருந்த இவர்கள் இப்போது எதற்காக வருகிறார்கள்?
கிழக்கின் பாதுகாப்பு தான் எமக்கு அவசியம். எனவே உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் மக்களின் நடமாட்டத்துக்கோ அல்லது குடியேற்றத்துக்கோ அனுமதி வழங்கப்படமாட்டாது. அவர்களுக்கு வேறு இடங்களைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மூதூரில் நிகழ்ந்த மோதல்களைத் தொடர்ந்து அப்பகுதி முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். தற்போது மீளக்குடியேற முயற்சிக்கும் நிலையில் சிறிலங்கா இராணுவம் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஏற்கனவே மூதூர் கிழக்கு உள்ளிட்ட சம்பூர் பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயாமக்கப்பட்டு அங்குள்ள தமிழ்மக்களின் காணிகளும் சிறிலங்கா இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.