Wednesday, August 15, 2007

யாழிலிருந்து பெருமளவில் வெளியேறும் பொதுமக்கள்

[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2007]


யாழ். குடாநாட்டில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாலும் அதிலும் குறிப்பாக இளைஞர்களின் பாதுகாப்பு பெரும் ஆபத்தான நிலையை அடைந்து வருவதையும் அடுத்து குடாநாட்டை விட்டு வெளியேறி வரும் பெருமளவான குடும்பங்கள் கொழும்பில் தஞ்சமடைந்து வருவதாகவும் தமது பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப முயற்சித்து வருவதாகவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் வெளியாகி உள்ள செய்தி:

தமது விடுதியில் தங்கியிருப்பவர்களில் அரைப்பங்கிற்கும் மேற்பட்டவர்கள் யாழ். குடாநாட்டில் இருந்து வந்தவர்கள் எனவும் அவர்களில் பலர் தமக்கும் தமது இளம் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு தேடி வந்துள்ளதாகவும் வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த விடுதி உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போர், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார முடக்கம், குடாநாட்டிற்கான போக்குவரத்து நெருக்கடி, அதிகரித்து வரும் இராணுவ சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல்கள், வீடு வீடான தேடுதல்கள், புத்திஜீவிகளின் வெளியேற்றம், மீன்பிடித்தடைகள் ஆகிய இதற்கான காரணங்கள் என்று போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் வெள்ளவத்தை \"ஐடியல்\" விடுதி உரிமையாளர் தெரிவித்ததாவது:

ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்ட பின்னர் யாழ். குடாநாட்டில் இருந்து மக்கள் கப்பல்கள் மற்றும் வானூர்திகளில் கொழும்புக்கு வருகின்றனர். நாங்கள் நாள் ஒன்றிற்கு 300 ரூபாய் தொடக்கம், 1,700 ரூபாய்கள் வரை அறவிடுகின்றோம். இருந்த போதும் உணவுகள் வழங்கப்படுவதில்லை. விடுதி அறைகளில் வசதிகள் குறைவாக இருப்பதனால் அங்கு சமைப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

தற்போது 50 அறைகளில் 120 பேர் தங்கியுள்ளனர். நாம் எமது விடுதிகளுக்கு வருவோர், அங்கிருந்து செல்வோர் தொடர்பான தகவல்களை தினம்தோறும் வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு தெரிவித்து வருகின்றோம். சிலர் கடவுச்சீட்டுக்கள் அல்லது அடையாள அட்டைகளை பெறுவதற்காக வந்து சில நாட்கள் தங்கிச் செல்கின்றனர். ஏனையோர் மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் தங்கியிருக்கின்றனர் என தெரிவித்தார்.

இது தொடர்பில் சுவீடன் நாட்டுக்குச் செல்ல விடுதியில் ஒன்றரை வருடத்திற்கு மேலாக தங்கியிருக்கும் 23 வயது நிரம்பிய இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

யாழ். குடாநாட்டின் பயங்கரமான சூழலை தொடர்ந்து நான் எனது உயர்தரக் கல்வியை இடையில் கைவிட்டு விட்டு வந்துள்ளேன். சுவீடனுக்கான எனது விசா விண்ணப்பம் இருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன. தற்போது நான் முகவர்களின் மூலமாக மேற்கு ஆசிய நாடு ஒன்றிற்கு செல்ல முயற்சி எடுத்து வருகின்றேன். எனது பெற்றோரும் இளைய சகோதரரும் அங்கு இருக்கும் போதும் தற்போதைய சூழலில் நான் யாழ்ப்பாணம் திரும்பிச் செல்ல முடியாது.

யாழில் உள்ள குடும்பத்திற்கு பணத்தை அனுப்புவதற்கு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் வெளிநாட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். யாழ். குடாநாட்டில் வாழ்க்கைச்செலவு வானைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசி 200 ரூபாய், கோழி இறைச்சி 1,500 ரூபாய்கள்.

அதேசமயம் என்னை சந்தேகத்தின் பேரில் மூன்று முறை கைது செய்து விடுவித்துள்ளனர். அதனால் எனது வேலையை விட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனால் தற்போது வேலை தேடுவது கடினமான ஒன்றாகிவிட்டது. எனக்கு தொடர்ந்து படிக்க விருப்பம். ஆனால் அதிகளவான எனது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. எனினும் நான் இங்கு தங்கியிருந்து முயன்ற வண்ணம் உள்ளேன், இதை விட்டால் எனக்கு வேறு வழிகள் இல்லை என்றார் அவர்.

இதனிடையே 64 வயதான இராசம்மா தனது மகனுக்கான காவல்துறை பாதுகாப்பு அனுமதி பத்திரத்திற்காக காத்திருக்கின்றார். இவர் கடந்த 9 மாதங்களாக விடுதியில் தங்கியுள்ளார். காவல்துறை பாதுகாப்பு அனுமதி பத்திரம் பெறுவதற்கான முழு வேலைகளும் முடிவதற்கு இரு மாதங்கள் எடுக்கும் என அவர் தெரிவித்தார். அவர் கனடாவில் உள்ள தனது மகனிடம் செல்வதற்காக காத்திருக்கின்றார்.

இந்த மேலதிக தாமதம் கடந்த ஜுலை மாதம் 7 ஆம் நாள் கொழும்பு விடுதிகளில் இருந்து 385 மக்களை பலவந்தமாக வெளியேற்றியதனால் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் போது இராசம்மாவும் அவரது மகனும் வெளியேற்றப்பட்டு பின்னர் திரும்பிவர அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர் மீண்டும் காவல்துறை பாதுகாப்பு அனுமதி பத்திரம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் இராசம்மா கூறியதாவது:

அந்த சமயத்தில் என்னிடம் எல்லா ஆவணங்களும் தயாராக இருந்தன. ஆனால் தற்போது நாம் மீண்டும் காத்திருக்க வேண்டியுள்ளது. எனது வீடு இரு இராணுவ முகாம்களுக்கு மத்தியில் உள்ளது. நான் மோதல்களுக்கு நடுவில் அகப்பட்டிருந்தேன். தற்போது விடுதியில் நிம்மதியாக இருப்பதாக நான் உணருகின்றேன். நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என தெரிவித்தார் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.