Sunday, August 19, 2007

பொருளாதார நெருக்கடியால் சிறிலங்கா அரசின் படை நடவடிக்கை பாதிப்பு: "லக்பிம" வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007]


பொருளாதாரப் பின்னடைவு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், மூத்த படை அதிகாரிகள் மீதான நம்பிக்கையீனம் போன்ற காரணிகள் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளதாக "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

மடு தேவாலய திருவிழாவை முன்னிட்டு இரு தரப்பினரும் உத்தியோகபூர்வமற்ற போர் நிறுத்தத்திற்கு இணங்கியதனால் கடந்த வாரம் வன்னி களமுனை அமைதியாக இருந்தது. எனினும் இந்த அமைதி ஆபத்தானதாக இருக்கலாம்.

இரு தரப்பும் தாக்குதலுக்கு தயாராக உள்ளபோதும் யார் முதலில் தாக்குதலை ஆரம்பிப்பது என்பதே கேள்வியானது என மூத்த படை அதிகாரி ஒருவர் களநிலைமை தொடர்பான தகவல் தருகையில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளைக் கைப்பற்றுவதே படையினரின் நோக்கம் என்பது வெளிப்படையானது. இதற்காக மணலாறு பகுதியில் 58 ஆவது படையணியை இரணுவம் உருவாக்கி வருவதுடன் அதற்கான தயாரிப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. குடும்பிமலை பகுதியில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படை ஒன்று (Task Force - 1) என்ற சிறப்புப் படையணியும் இந்த படையணியின் உருவாக்கத்திற்காக மணலாறுக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

எனினும் எல்லையின் மறுபுறம் உள்ள விடுதலைப் புலிகளின் பகுதியில் வடபோர் முனையான நாகர்கோவில் முகமாலை அச்சிலும், ஓமந்தை, மணலாறு போன்ற வன்னிப் போர்முனைகளிலும் பெரும் சமருக்கான ஆயத்தங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மணலாறில் உள்ள அதவெடுவவேவா கிராமத்தின் மீது விடுதலைப் புலிகள் மீண்டும், மீண்டும் மோட்டார் பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இது அதிகளவான படையினரை மணலாறு நோக்கி நகர வைப்பதற்கான தந்திரமாகும். மணலாற்றுப் பகுதியை நோக்கி படையினரின் கவனத்தை திருப்புவதன் மூலம் ஓமந்தை, மடுவின் கிழக்குப் பகுதிகளில் உள்ள படையினரின் அழுத்தங்களை குறைப்பதே அவர்களின் உத்தி. அந்தப் பகுதிகளில் தற்போது விடுதலைப் புலிகள் கடும் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

தற்போது மணலாறுப் பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் படையினர் முல்லைத்தீவை நோக்கி முன்னேறும் போது பெரும் மோதல்கள் வெடிக்கலாம் என்பதற்கான முகவுரையாகும். "ஜெயசுக்குறு" படை நடவடிக்கையின் போது இராணுவத்தின் ஒரு பிரிவு மணலாறுப் பகுதியில் இருந்து முன்நகர்ந்து ஒட்டுசுட்டானை கைப்பற்றியிருந்தனர். இது விடுதலைப் புலிகளின் பலம் மிக்க தளமான முல்லைத்தீவில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கிராமமாகும்.

பின்னர் படையினர் ஒட்டுசுட்டானில் இருந்து மாங்குளத்திற்கான இணைப்பை மேற்கொண்டிருந்தனர். எனினும் விடுதலைப் புலிகளின் "ஓயாத அலைகள்" படை நடவடிக்கையில் அவை வீழ்ச்சி கண்டுவிட்டன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்குப் பகுதிகளை கைப்பற்றியதனைத் தொடர்ந்து எப்போது படையினர் முல்லைத்தீவையும், கிளிநொச்சியையும் கைப்பற்றப் போகின்றனர் என்ற கேள்வி சிங்கள மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தென்னிலங்கையில் உள்ள கடும் போக்காளர்களிடம் இருந்து போர் தொடர்பான அறைகூவல்கள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளன. போரை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வண்ணம் அரசாங்கத்திற்கு ஆபத்தானவர்களாக அவர்கள் மாறியுள்ளனர்.

இவர்களது நடவடிக்கை வன்னி மீதான படை நடவடிக்கையை ஒரு மிக இலகுவான நடவடிக்கை என எண்ணுமளவிற்கு சிங்கள மக்களை தூண்டியுள்ளது. ஆனால் உண்மை நிலை அப்படியானதல்ல.

இதற்கு ஆதாரமாக பல கடந்தகால அனுபவங்கள் உள்ளன. களமுனைகளில் பெற முனைந்த அரசியல் இலாபங்களால் பேரழிவுகள் நிகழ்ந்ததுடன், துரதிர்ஸ்டவசமாக பெரும் உயிர் மற்றும் பொருள் அழிவுகளும் ஏற்பட்டன. இதற்கு "ஜெயசுக்குறு" படை நடவடிக்கை சிறந்த உதாரணம்.

வடகிழக்கு பருவமழை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்க உள்ளது. கடுமையான மழை நேரடியற்ற சுடுவலுவை செயற்திறனற்றதாக்கி விடும். இது வான்படையினரின் நடவடிக்கைகளையும் கடுமையாக பாதிக்கும். மேலும் டாங்கிகள், கவச வாகனங்கள் என்பவற்றையும் நகர்த்துவது கடினமானது. இவை எல்லாம் படையினருக்கு எதிரானவை.

படை நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு குறிப்பிடத்தக்களவு அதிகாரங்களை படைத் தளபதிகளுக்கு மகிந்தவின் நிர்வாகம் வழங்கியுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்கள் போரை அரசியல் மயப்படுத்துவதற்கு எதிரான நடவடிக்கை இது.

எனினும் பொருளாதாரப் பின்னடைவு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், மூத்த படை அதிகாரிகள் மீதான நம்பிக்கையீனம் போன்ற காரணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவுத் திட்டங்களுக்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையையே ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்கால இராணுவ வெற்றிகள் அரசாங்கத்திற்கு அனுகூலமானவை என்பது உண்மை. எனவே ஆதரவுகளை திரட்டும் முகமாக அதனை தொடரும் அழுத்தங்கள் அரசுக்கு ஏற்படலாம். பிரதானமாக ஜே.வி.பி போன்ற கட்சிகளால் இது ஏற்படலாம். அது அரசில் இருந்து தள்ளியே உள்ளது. இதுவும் வன்னி மீதான படை நடவடிக்கைக்கான முன்னறிவித்தலாகும்.

எனினும் மன்னாரில் உள்ள தற்போதைய அமைதி பிரதானமாக மடு தேவாலயத்தின் உற்சவத்தினால் ஏற்பட்டது. ஆலயத்திற்குச் செல்லும் மக்களின் நலன் கருதி விடுதலைப் புலிகளும் அரச படையினரும், போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டிருந்தனர்.

ஆனால் மடு வீதி திறக்கப்படவில்லை. அரசும் விடுதலைப் புலிகளும் மடு வீதியை மூடியது தொடர்பாக ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை சுமத்தியிருந்தனர். எனவே மக்கள் உயிலங்குளம் சோதனைச் சாவடியினூடாகவே பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இது அதிக தொலைவான பயணம் என்பதுடன், வீதியும் மிகவும் மோசமானதாகும்.

இருந்த போதும் அந்த பகுதியின் நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் மடு திருவிழா நேர்த்தியாக நடைபெற்றுள்ளது. ஆனால் தென்பகுதியில் இருந்து சென்ற மக்கள் மிகவும் குறைவானவர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.