Tuesday, August 14, 2007

செஞ்சோலையில் உயிர்களைப் பறித்த சிறிலங்கா மீது அனைத்துலகம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது?: சுவிஸ் தமிழர் பேரவை

[செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007] செஞ்சோலையில் அப்பாவி பாடசாலை சிறார்களை பலிகொண்டு ஓராண்டாகி விட்ட நிலையிலும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது யுனிசெஃப் உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தினர் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைதான் என்ன? என்று சுவிசில் உள்ள 27 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டு நிறுவனமான சுவிஸ் தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. யுனிசெஃப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் எம்.வெனமானுக்கு சுவிஸ் தமிழர் பேரவை அனுப்பியுள்ள கடிதம்: வட இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செஞ்சோலை விடுதியில் தங்கியிருந்து முதலுதவிப் பயிற்சி பெற்ற பாடசாலைச் சிறுமியர் மீது சிறிலங்கா விமானப்படை நடாத்திய குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டது. இத்தாக்குதலில் 61 மாணவியர் அதே இடத்திலும் நால்வர் பின்னரும் மரணமடைந்ததுடன் 120-க்கும் மேற்பட்டோர் காயமும் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து சிறிலங்கா அரசாங்கம் வருந்தாததுடன் மட்டுமன்றி மாறாக தாக்குதலுக்கு உரிமை கோரியதுடன் கிபீர் விமானங்களின் விமானிகள் இலக்குகள் மீது துல்லியமாகத் தாக்குதல் நடாத்தியிருந்ததாகவும் பெருமையுடன் அறிவித்திருந்தது. அத்துடன் தாக்குதல் நடாத்தப்பட்ட இடம் தொடர்பாக விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டடிருந்ததுடன், அது விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் சம்பவ இடத்துக்கு நேரில் பயணம் செய்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் யுனிசெஃப் அதிகாரிகள் சிறிலங்கா அரசின் கூற்றை நிராகரித்ததுடன் செஞ்சோலை வளாகத்திலோ அன்றி அயலிலோ இராணுவ இலக்குகள் எதுவும் இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்திருந்தனர். உண்மையில், யுனிசெப் நிறுவனம் கடந்த காலங்களில் இந்த வளாகத்தில் பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை நடாத்தியிருந்தமை குறிப்படத்தக்கது. இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து யுனிசெஃப், சிறிலங்கா மோதலில் பாதிப்புக்கு இலக்காகும் சிறார்கள் எனும் தலைப்பில் விடுத்திருந்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: இந்தச் சிறார்கள் வன்முறைக்குப் பலியான அப்பாவிகள். பிள்ளைகளின் வசிப்பிடங்கள், பாடசாலைகள் மற்றும் விளையாட்டிடங்கள் என்பனவற்றைச் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் அடிப்படையில் பாதுகாக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் நாம் கேட்டுக்கொள்கிறோம். நாட்டின் வடக்கே உள்ள வளாகத்தில் குண்டு வீசப்பட்டுள்ளதில் 40 பாடசாலைச் சிறுமிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலை மோசமாக உள்ளது. அண்மையில் உள்ள முல்லைத்தீவு மற்றம் கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளில் பயிலும் மாணவியர் இங்கு தங்கியிருந்து 2 நாள் முதலுதவிப் பயிற்சி நெறியில் கலந்து கொண்டிருந்தார்கள். யுனிசெஃப் மட்டுமன்றி வேறுபல சர்வதேச மனிதாபிமான நிறுவனங்களும் சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்திருந்தன. இருப்பினும், அட்டூழியங்களும் இன அழிப்பு நடவடிக்கைகளும் தடையின்றித் தொடர்ந்த வண்ணமே உள்ளன. உலகைப் பொறுத்தவரை சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் நிற்பது யுனிசெஃப் நிறுவனமே. அதனுடைய மகுட வாசகம் கூட ஒவ்வொரு குழந்தைக்கும் சுகாதாரம், கல்வி, சமத்துவம், பாதுகாப்பு என்பதே என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சுவிசில் உள்ள 27 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டு நிறுவனமான சுவிஸ் தமிழர் பேரவை பின்வரும் வினாக்களை யுனிசெஃப் முன்பாகவும் அனைத்துலகத்தின் முன்பாகவும் முன்வைக்கின்றது. செஞ்சோலைத் துயரம் நடைபெற்று ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இவ்விடயத்தில் குற்றவாளி யார் என்று முழு உலகிற்குமே தெரியும். இந்நிலையில், குற்றவாளியான சிறிலங்கா அரசாங்கத்தைத் தண்டிக்க யுனிசெஃப் நிறுவனமோ அனைத்துலகச் சமூகமோ இதுவரை எத்தகைய நடவடிக்கைகைளை எடுத்துள்ளன என அறிய விரும்புகின்றோம். சிறிலங்கா தொடர்பில் யுனிசெஃப் விடுத்த அறிக்கையில், சிறார்கள் மோதலில் அதிகம் பாதிப்புக்குள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிலங்கா அரசினாலும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்கள் அடங்கலாக அதன் ஆயுதப் படைகளாலும் சிறார்களின் உரிமைகள் கடந்த காலங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதுடன் நிகழ்காலத்திலும் பாதிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், இத்தகைய நிலையைத் தடுக்க எவ்வகையான நடவடிக்கைகைள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய ஆவலாய் உள்ளோம். யுனிசெஃப் ஒவ்வொரு குழந்தைக்கும் சுகாதாரம், கல்வி, சமத்துவம், பாதுகாப்பு என்பவற்றுக்காகப் பாடுபடுகின்றது. அனைத்துலகப் புகழ்பெற்ற இந்நிறுவனத்தின் இலக்கு வெறும் வார்த்தைகளில் அல்லாது செயலில் இருக்குமாயின் சிறிலங்காவின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இருந்து தமிழ்ச் சிறார்களைப் பாதுகாக்க இதுவரை எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய விரும்புகின்றோம். இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தினாலும், துணை இராணுவக் குழுக்கள் உட்பட ஆயுதப் படைகளாலும் நிகழ்த்தப்படும் மோசமான மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐ.நா. சபையின் நிரந்தரப் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைக்குமாறு அனைத்துலக மனிதாபிமான நிறுவனங்கள் பல கோரி வருகின்றன. கள நிலவரத்தை நன்கு அறிந்ததும், கடந்க காலங்களில் தமிழ்ச் சிறார்களை சிறிலங்கா அரசு மோசமாக நடாத்துவது தொடர்பில் பல்வேறு கண்டன அறிக்கைகளை விடுத்திருந்ததுமான யுனிசெப் நிறுவனத்தின் நிலைப்பாடு இது தொடர்பில் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம். உண்மையில் வேறும் பல கேள்விகள் எம்மிடையே உள்ளன. இருந்த போதிலும், நாங்கள் ஒன்றை மட்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். அதாவது, சிறிலங்கா அரசிடமிருந்து தமிழ்ச் சிறார்களை உண்மையிலேயே பாதுகாக்க யுனிசெஃப் நினைத்தால், அது ஏனைய அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களுடனும் ஜனநாயக நாடுகளுடனும் கைகோர்த்து தீர்மானகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெற்று வார்த்தைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை. காத்திரமான நடவடிக்கைகைளால் மட்டுமே அதனைச் செய்ய முடியும். இலங்கைத் தீவிலும் ஏனைய நாடுகளிலும் வாழும் சமாதானத்தை நேசிக்கும் தமிழ் மக்கள் அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களுக்கும் ஜனநாயக நாடுகளுக்கும் தமது பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வைக் காணும் நோக்குடனேயே விண்ணப்பங்களைத் தொடர்ச்சியாகச் சமர்ப்பித்து வருகிறார்கள். அனைத்துத் தமிழ் மக்களும் தீவிரவாதத்தை நாடுவதா இல்லையா என்பது அனைத்துலக சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியரை மிகவும் கவலையுடன் மீண்டும் ஒருமுறை நினைத்துக் கொண்டு சரியான திசையில் பொருத்தமாக நடவடிக்கைளை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் மடலை நிறைவு செய்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.