Tuesday, August 14, 2007

நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இரு தமிழ்க் குழுக்களுக்கு இடையில் மோதல் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

[செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007]

நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இரு தமிழ்க் குழுக்களுக்கு இடையில் இடம் பெற்ற மோதலில் தமிழர் ஒருவர் உயிரிழந் தார். மற்றும் இருவர் துப்பாக்கிச் சூடு மற்றும் வாள் வெட்டுக்காயங்களுடன் மிக ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று செய்திகள் தெரிவித்தன.

முல்லைத்தீவைச் சேர்ந்த சிலிகா ரஞ்சன் என்பவரே தமக்கு ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்தார். கண்ணன், குகன் ஆகிய இருவரும் சூட்டுக்காயம் மற்றும் வாள் வெட்டுக் காயங்களினால் ஏற்பட்ட அதிக இரத்தப் பெருக்குடன் மிக ஆபத்தான நிலையில் உளவல் பல்கலைக்கழக வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய சிலர் வாகனங்களில் தப்பிச் சென்றனர் என்றும், அவர்களின் வாகனத்தினால் மோதுண்டு மற்றொருவர் காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கொடூரச் சம்பவத்தில் சுமார் பத்துப்பேர் கொண்ட குழு ஒன்று ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற மைதானப் பகுதியில் இருந்து ஒரு பிஸ்டலையும் ஒரு வாளையும் மீட்டுள்ள பொலிஸார் பெற்றோல் நிலையம் ஒன்றில் வைத்து பி.எம். டபிள்யூ. கார் ஒன்றில் வந்த மூன்று தமிழர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றவை எனக் கருதப்படும் இரு வாகனங்களைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தோர் ஜேர்மனியிலிருந்தும், பிரான்ஸிலிருந்தும் ஒஸ்லோவுக்கு வந்தவர்கள் என்றும் ஒரு தகவல் தெரிவித்தது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.