[ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2007] யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணியாகிய இம்ரான் பாண்டியன் படையணியினர் களம் இறக்கப்பட்டுள்ளனர் என்றும் உக்கிர சமருக்கான பின்னிருப்பாக இப்படையணி களம் இறக்கப்பட்டுள்ளது என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. அந்த ஏட்டில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: நாகர்கோவில் முன்னணிக் களமுனைகளில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணிகளில் ஒன்றான இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த கடுமையான பயிற்சிகளை பெற்ற 30 பேர் நகர்த்தப்பட்டுள்ளனர். இம்ரான் பாண்டியன் படையணியானது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்பாதுகாப்புப் பணியினை மேற்கொள்ளும் படைப்பரிவாகும். இம்ரான் பாண்டியன் படையணி, சாள்ஸ் அன்ரனி படையணி போன்றவையே விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணிகளாகும். இந்தப் படையணிகள் தற்போது நடைபெற்று வரும் நான்காவது ஈழப்போரில் இதுவரையில் ஈடுபடுத்தப்படவில்லை. எதிர்வரும் உக்கிர சமர்களுக்காக அவை பின்னிருப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமது பாதுகாப்பு உத்திகளையும் விடுதலைப் புலிகள் மாற்றியுள்ளனர். அதாவது இராணுவத்தினரிடம் அகப்படும் போது சயனைட் வில்லைகளை பயன்படுத்துவதை விடுத்து தற்போது தற்கொலை அங்கிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்கள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்களில் இராணுவத்தினருக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்த முடியும். கடந்த வியாழக்கிழமை வவுனியாவின் குமாங்குளம் பகுதியில் இராணுவத்தினர் கைது செய்ய முற்பட்டபோது உந்துருளியில் சென்ற விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் குண்டை வெடிக்க வைத்து இறந்துள்ளார். அண்மைக்காலமாக வன்னிக் களமுனைகளில் மந்தமாக உள்ள மோதல்கள் தவறான தகவல்களை தரலாம். வன்னியின் முல்லைத்தீவின் மீதான மிகவும் பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றிற்கு இராணுவத்தினர் தம்மை தயார்படுத்தி வருகின்றனர். அதற்காக மணலாற்று பகுதியில் 58 ஆவது படையணியும் உருவாக்கப்பட்டு வருகின்றது. மணலாற்றுப் பகுதியில் விடுதலைப் புலிகளும் தமது படைபலத்தை அதிகரித்துள்ளனர். கடந்த வாரம் அவர்களின் மோட்டார் தாக்குதலில் இரு ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டிருந்தனர். எனினும் வன்னி மீதான சமர் கிழக்கில் நிகழ்ந்ததில் இருந்து வேறுபட்டதாகவே இருக்கும். ஏனெனில் வன்னியைப் போல கிழக்கின் களமுனைகள் நேரடியான வழங்கல் வழிகளை உடையதல்ல. அங்கு உதவிக்கு படையணிகளை அனுப்புவதும் சிரமமானது. ஆனால் முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் சிறப்பான பயிற்சிகளைப் பெற்ற அதிக வீரர்களை கொண்டுள்ளனர். வன்னியைக் கைப்பற்றும் எல்லா நடவடிக்கைகளையும் அவர்கள் கடுமையான எதிர்ச்சமர்கள் மூலம் முன்பு முறியடித்திருந்தனர். ஜெயசுக்குறு நடவடிக்கை இதற்கான சிறந்த உதாரணம். வன்னி மீதான இராணுவ நடவடிக்கைக்கான நேரத்தை தெரிவு செய்வதில் தற்போது பெரும் இழுபறிகள் தோன்றியுள்ளன. செப்ரம்பர்-ஒக்ரோபர் மாதங்களில் வட-கிழக்கு பருவமழைக் காலமாகும். அது இராணுவத்தினரின் நகர்வு, பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பாதிப்பை எற்படுத்தும். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு மழை காலத்தில் தாக்குதல் நடத்த அது அனுகூலமானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, August 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.