[வியாழக்கிழமை, 9 ஓகஸ்ட் 2007] தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரித்தானியா நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிக் குழுவினருக்கு அமெரிக்காவின் கலிபோர்ணியா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியான கரன் பாக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழுவுக்கு வேண்டுகோள் விடுத்து கரன் பாக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்தமையானது சட்ட ரீதியாகவும் உண்மையடிப்படையிலும் தவறானது. உண்மையில், அவ்வாறான தடை நடைமுறையில் உள்ள மனிதாபிமானச் சட்டத்துக்கு முரணானது. அமெரிக்காவும், சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்குமாறு பிரித்தானியாவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் தூண்டியதன் விளைவே சமாதானப் பேச்சுக்கள் தடைப்பட்டமைக்கும், தமிழ் மக்கள் இன ஒழிப்புக் கொள்கைக்கு இலக்காவதற்குமான காரணங்கள் ஆகும். இந்தத் தடையானது சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களையும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களையும் அச்சத்துக்குள் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் "தடைநீக்கம்" என்பது பேச்சவார்த்தைகளை ஊக்குவிப்பதாக அமையும் அதேவேளை, நடைமுறையில் உள்ள மனிதாபிமானச் சட்ட விழுமியங்களின் கீழ் யுத்தத்தை மீளாய்வு செய்யவும் உதவும். ஆயுத மோதல்களினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பது உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். "கொசோவா" நாட்டவரை விட தமிழ் மக்களுக்கே அதிக சுயநிர்ணய உரிமை சிறிலங்காவில் நடைபெறும் யுத்தம் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறுகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பு முறையான படைத்தலைமைக் கட்டமைப்பையும், கட்டுப்பாட்டுப் பிரதேசத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு இராணுவ சக்தி. விடுதலைப் புலிப் போராளிகள் அனைத்துலக சட்டதிட்டங்களுக்கு அமைவாக இராணுவச் சீருடை தரித்து நிலத்திலும், நீரிலும், ஆகாயத்திலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த யுத்தம் உள்நாட்டு யுத்தம் என்றோ, சுயநிர்ணயப் உரிமையைக் காப்பதற்கான தேசிய விடுதலைப் போரென்றோ கருதப்பட முடியும். எனது பார்வையில், பிரித்தானியா விடுதலை வழங்கப்பட வேண்டும் எனக் கோரும் "கொசோவா" நாட்டவரை விட தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அதிகமாகவே உள்ளது. கோசோவா மக்களிடம், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இருப்பதைப் போன்று 2,000 வருட வரலாறு இல்லை. மேலும், பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாள் முதல் தமிழ் மக்கள் அனுபவித்ததைப் போன்று அட்டூழியங்களோ, படுகொலைகளோ, உரிமை மறுப்புக்களோ கொசோவா மக்களுக்கு இல்லை. அரசியல் காரணங்களுக்காகவோ அன்றி வேறு காரணங்களுகாகவோ அரசாங்கங்கள் மக்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளாது விட்டாலும், நடைபெறுவது உள்நாட்டு யுத்தம் என்றாவது அவர்கள் குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நடைபெறுகின்ற "உள்நாட்டு யுத்தம்" சிறிலங்கா அரசை கைப்பற்ற நடைபெறுகின்ற ஒன்றல்ல. மாறாக இந்த உள்நாட்டு யுத்தம் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமிழ் மக்களை விடுவிக்கவே நடைபெறுகின்றது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது முழு நாட்டையும் கைப்பற்றும் நோக்குடன் நிக்கரகுவாவிலும், எல் சர்வடோவிலும் நடைபெற்றதைப் போன்றதல்ல இந்த உள்நாட்டு யுத்தம். மாறாக, பங்களாதேஷ் தனிநாடாக மாற பாகிஸ்தானில் நடைபெற்ற யுத்தத்துக்குச் சமனானது. அல்லது பல்வேறு சுதந்திர அரசுகள் உருவாக யூகோஸ்லாவியாவில் நடைபெற்ற யுத்தத்தைப் போன்றது. புலிகளின் சட்டப்பூர்வ அரசு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்றிருப்பது ஒரு சட்டப்பூர்வ அரசு. இது சட்டப்பூர்வ அரசு ஏனெனில், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் ஒரு குடிமக்கள் அரசு உள்ளது. தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாரம்பரிய தமிழ்ப் பிரதேசத்தில் சிறிலங்கா அரசு ஒரு நடைமுறைக் கட்டுப்பாட்டையே கொண்டுள்ளது. மாறாக அந்தப் பிரதேசங்களை ஆட்சி செய்யும் சட்டபூர்வ உரிமை அற்றது. எனவே இந்த நடைமுறை ஆட்சி நிலை இறைமையாக மாறாது. விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தல் காரணமற்ற நடவடிக்கை மாத்திரமன்றி நீடித்த முரண்பாட்டுக்கு அமைதிவழித் தீர்வுக்கான சாத்தியத்தையும் மறுத்து நிற்கின்றது. இது மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பில் அரசுக்கு வாய்ப்பாகிவிட்டது. ஏனெனில், முரண்பாட்டை மனிதாபிமானச் சட்டத்தின் அடிப்படையில் பார்க்காமல், சூனியப் பிரதேசத்தில் நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளாகப் பார்க்க வாய்ப்பை வழங்குகின்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைப்பது முறையற்றது ஏனெனில், பயங்கரவாத அமைப்புக்கள் சீருடை அணிந்து சண்டையிடுவதோ, விடுதலைப் புலிகளைப் போன்று மரபுவழிச் சமரில் ஈடுபடுவனவோ இல்லை. பயங்கரவாத அமைப்புக்கள் மறைமுகமாகச் செயற்படுகின்றன. அத்துடன் அவர்கள் இராணுவச் சக்தியாக மாறமுடியாத நிலையில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றன. இவ்வாறு கூறும் போது ஆயுத மோதலில் பயங்கரவாதமே இல்லை என்று கூறமுடியாது. குடிமக்கள் மத்தியில் பயங்கரத்தைத் தோற்றுவிக்கும் நடவடிக்கைகள் ஜெனீவா சாசனத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளன. யுத்தமே "அச்சமூட்டும்" ஒன்றாக உள்ள நிலையில், ஈராக்கில் அமெரிக்க இராணுவம் மேற்கொள்ளும் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகள் போல், ஆபிரிக்காவில் நடைபெறும் சில மோதல்களில் நடைபெற்றது போன்று, குடிமக்களை அங்கவீனர்களாக்குதல், சிறிலங்காவில் அரச படைகள் செய்வதைப்போன்று குடிமக்களை நேரடியாக இலக்குவைத்து, அவர்களை தம் வாழ்விடங்களிலிருந்து ஓடச்செய்து, பின்னர் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளைத் தடைசெய்தல் என்பவற்றிற்கூடாக யுத்த மோதல்களில் பயங்கரவாதம் இருக்கவே செய்கின்றது. உண்மையில், சிறிலங்காவில் அரசு செய்ததைப் போன்று ஏ-9 வீதியை மூடி மக்களுக்கான உணவு மற்றும் மருந்து கிடைப்பதைத் தடைசெய்வதென்பது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் சட்டவிதிகளின் நிரல்படுத்தப்பட்டுள்ள ஒரு விடயம். (ச.கு.நீதிமன்று. ரோம் பிரகடனம், சரத் 7(1) மற்றும் 7(2)(டி). புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் முழுக்க முழுக்க சட்டபூர்வமானவை பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் ஹோவெல் அவர்களால், விடுதலைப் புலிகள் "வன்முறைகளைக் கைவிட்டால் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்குதல்" பற்றி ஆராயப்படும் என வெளியிடப்பட்ட அறிக்கை முட்டாள்தனமானது. இவ்வாறு வன்முறைகளைக் கைவிடல் என்பது சரணடைவதற்கு ஒப்பானது. வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா அரசு வன்முறையைக் கைவிட என்று கோரவில்லை. இது பிரித்தானியா அரசானது தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களின் பக்கம் சார்ந்திருப்பதைப் புலப்படுத்துகின்றது. யுத்தம் என்பது வன்முறையானது. ஆனால் அது குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் வன்முறையோ பயங்கரவாதமோ அல்ல. மேலும், பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரும், ஒரு சில அதிகாரிகளும் மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் ஏற்புடைத்தான விடுதலைப் புலிகளின் சில இராணுவ நடவடிக்கைகளை பயங்கரவாதம் என வரையறுக்கின்றனர். உதாரணமாக தெற்கிலே அரச வான்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலைக் குறிப்பிடலாம். மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் முழுக்க முழுக்க சட்டபூர்வமானவை. உண்மையில், பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்ததானது மோதலில் அனைத்துலகத்தின் அவதானத்தைப் பாதித்துள்ளதுடன், சிறிலங்கா அரசானது போர் நிறுத்த உடன்படிக்கையைப் புறந்தள்ளி விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக ஒடுக்கும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்குத் துணிவை வழங்கியுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை நோர்வே மற்றும் ஐஸ்லாந்து நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை பலமிழக்கச் செய்யும் திட்டம் நிறைவேறியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதானது ஜெனீவா சாசனமான "சகல சந்தர்ப்பங்களிலும் (மக்களுக்கு) மதிப்பளித்தல்) எனும் கடப்பாட்டை நிறைவு செய்வதற்கு மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு உதவும். சிங்கள - தமிழ் யுத்தம் அதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகின்றது. எனவே தடைநீக்கல் என்பது நடைமுறையில் பயனளிக்கக் கூடியது." இருப்பினும், தடை நீக்கல் என்பது "தடையானது மனிதாபிமானச் சட்டத்துக்கு முரணான ஒரு தவறு" என ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்திலேயே சாத்தியமாகும். இது மனிதாபிமானச் சட்டம் தொடர்பிலான பிரித்தானியாவின் கடப்பாட்டை வலுப்படுத்துவதுடன் ஏற்கனவே பூகோள அரசியல் நலன் காரணமாக மனிதாபிமானச் சட்டத்தை மீறியமைக்கான பரிகாரமாகவும் அமையும். பிரித்தானியாவுக்கு இலங்கை விவகாரத்தில் தலையிடுவதால் இலாபமெதுவும் இல்லாத நிலையில், சிறிலங்காவில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு வலுச்சேர்க்கும் ஒரு நாடாகத் தான் கருதப்படுவதை பிரித்தானியா விரும்பாதென நினைக்கிறேன். இந்த நிலைப்பாட்டில், தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கும் ஒரு நாடாகவும், உலகெங்கும் அமெரிக்காவின் நாட்டுக்கு வெளியேயான தளங்களை உருவாக்குவதில் உதவும் நாடாகவும் நோக்கப்படும், டியாகோ கார்சியாவின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் அமெரிக்காவுக்கு சிறிலங்காவின் தமிழ்ப் பிரதேசங்களைத் (திருமலைத் துறைமுகம் பற்றும் பலாலி வான்படைத் தளம்) தவிர பர்மா முதல் மலாங்க் குடாநாடு வரையான உபகண்டத்தில் வேறு இடம் இல்லை. உங்கள் நாடாளுமன்றக் குழுவைப் பொறுத்தவரை தடைநீக்கம் முக்கியமானது. இரண்டாவதாக தமிழர் பிரதேசங்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள பாதைகளைத் திறத்தல், வடக்கு - கிழக்கு பிரதேசத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் திட்டத்துக்கு சிறிலங்கா ஏற்படுத்தும் தடைகளால் உலக உணவுத் திட்டம் நாட்டை விட்டு வெளியேறுவதை நீங்கள் அறிவீர்கள். இதன் விளைவாக சிறிலங்கா அரசின் கட்டுப்பாடுகளுக்கு இலக்காகியும் தனது ஊழியர்களைப் படுகொலையில் இழந்ததுமான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மாத்திரமே எஞ்சியுள்ளது. ஆழிப்பேரலை நிவாரணம் ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு நிதி சமனாகப் பங்கீடு செய்யப்படாத நிலையில் மனித அவலமொன்று காத்திருக்கின்றது. சிங்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்ப் பகுதிகளுக்கு ஆழிப்பேரலை நிவாரணம் வழங்குவதற்கு முடியாதுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்துக்கு கூறியதை நீங்கள் அறிவீர்கள். இது மனிதாபிமான நிவாரணச் சட்டத்தை மீறுவதாகவும், இனவாத நடவடிக்கையாகவுமே உள்ளது. உங்கள் குழு எதனைச் செய்யாவிட்டாலும், மனிதாபிமான உதவிக்கான பாதைகளையாவது திறந்துவிட வேண்டும். இது தமிழ் மக்களைப் பட்டினிச் சாவில் இருந்து தடுப்பதுடன், போர் நிறுத்த உடன்படிக்கை அமுல் தொடர்பாக இரண்டு தரப்பினரிடையேயும் கலந்துரையாடல்களைத் தோற்றுவித்து, முரண்பாட்டுத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கும் வழி ஏற்படுத்தலாம். அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு இந்த ஆயுத மோதல் மனிதாபிமானச் சட்டத்தினடிப்படையில் மீளாய்வு செய்யப்படுவதை உறுதி செய்வதுடன், தமிழ்மக்களை இனப்படுகொலையில் இருந்து தடுக்கவும் முடியும். உங்கள் நடவடிக்கைகளை நான் தொடர்ந்தும் நுணுக்கமாக அவதானிப்பேன் என்று அதில் கரன் பாக்கர் தெரிவித்துள்ளார். மூலம்: புதினம்
Thursday, August 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.