[வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2007]
யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்கள இராணுவத்தினர் ஆக்கிரமித்து நின்றாலும் வன்னியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்டிலெறி வீச்சுக்குள்தான் அவர்கள் அடங்கியிருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி தெரிவித்துள்ளார்.
தமிழீழத் தேசிய தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.08.07) ஒளிபரப்பாகிய வாராந்த நிகழ்ச்சியான "நிலவரம்" ஆய்வரங்கில் கலந்து கொண்டு அவர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:
கிழக்கை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிய பின்னர், சிங்கள இராணுவத்தின் இலக்கு வடக்காக மாறிவிட்டது என்பது உண்மைதான். அதனை இன்னும் சரியாகச் கூறப் போனால் அது மகிந்த அரசினுடைய திட்டம் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாகவே சிங்களப் பேரினவாதிகளினுடைய ஒருமித்த ஆசையாக மாறிய ஒரு இராணுவப் புறச்சூழலாக அது அமைந்துள்ளது.
அதாவது விடுதலைப் புலிகளை வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் இப்போது அடக்கி வைத்திருக்கின்றோம். எனவே இந்த வன்னிப் பெருநிலப் பரப்பு மீது மிகப்பெரிய சமரை அதுவும் ஜெயசிக்குறுவைப் போன்ற அல்லது அதனைவிட பாரிய அளவிலான ஒரு பாரிய சமரை தொடுக்கலாம். இதன் மூலமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினை இல்லாது ஒழித்து தமிழர்களுடைய பிரச்சினைக்கு இராணுவத் தீர்வைக் கண்டு விடலாம் என்ற நம்பிக்கை மகிந்த ராஜபக்சவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்களப் பேரினவாதிகளுக்கே வந்திருக்கின்றது.
அதனால் தான் ரணில் விக்கிரமசிங்க கூட வடக்கில் படையெடுத்தால் தனது கட்சி அதனை ஆதரவளிக்கும் என்று முன்னர் கூறியிருந்தார். அந்த விதமாக வடக்கின் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்காக சிங்கள இராணுவம் ஆயத்தங்கள் செய்கின்றன என்பது உண்மைதான்.
ஆனால் அதேவேளையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப் புலிகளினுடைய இராணுவ பலம் எத்தகையது, இன்று அந்த அமைப்பு எத்தகைய தூரத்திற்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது. அதாவது, ஆட்பலத்திலும் சரி, ஆயுத பலத்திலும் சரி விடுதலைப் புலிகள் இயக்கம் வளர்ந்திருக்கின்றது. அது தன்னுடைய முப்படைப் பரிவாரத்துடன் இருக்கின்றது. அந்த முப்படையையும் மரபு வழிப் போரில் பயன்படுத்தக்கூடிய திறனுடன் விடுதலைப் புலிகள் இருக்கின்றனர் என்கின்ற உண்மைகளும் ஒருபக்கம் இருக்கின்றன.
எனவே சிங்கள அரசு, விடுதலைப் புலிகளினுடைய பலம், அதன் இராணுவப் புறச்சூழல் இவற்றை வைத்துக்கொண்டு அச்சமடைகின்றது.
சுருக்கமாக கூறப்போனால் ஒருபுறத்தில் ஆசையும், இன்னொரு புறத்தில் அச்சமும் கலந்த குழப்ப நிலையில் சிங்கள இராணுவம் சிக்கித் தவிர்க்கின்றன என்பதுதான் உண்மை.
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றது. அதாவது, என்ன பணி செய்வதற்கு இலங்கைக்கு வந்ததோ அந்தப் பணி அவர்களுக்கு வழங்கப்படாமல் அல்லது அதற்கான புறச்சூழல்கள் இல்லாமல், ஏதொவொரு நடக்கின்ற சம்பவவங்களை வெளித் தெரிவிக்கின்ற பத்திரிகை நிருபர்களைப் போல் பணியாற்றும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் இருக்கின்றனர்.
ஆனால் இந்த போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பிரசன்னத்துக்குள்ளே தான் சிங்கள இராணுவம் ஒரு பாரிய படையெடுப்புக்கான முன்தயாரிப்புக்களை செய்து கொண்டிருக்கின்றது. போர் நிறுத்த கண்காணிப்புக்குழு என்னதான் கூறினாலும் இந்த இராணுவ நடவடிக்கைகளை சிங்களத்தரப்பு நிறுத்தவோ, தவிர்க்கப் போவதோ இல்லை.
இன்றைய நிலையில் சிங்களம் படையெடுக்கும்- தமிழர்களை அழிக்கும்- இது எல்லாம் எமக்குத் தெரியும்.
ஆனால் அனைத்துலகம் இதில் பெருமளவிற்கு ஏமாற்றம் அடைந்திருக்கின்றது.
அது என்னவெனில் உலகளாவிய ஒரு உடன்படிக்கையும் அந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக உலகின் வல்லரசுகள், பொருளாதார நாடுகள் எல்லாம் சேர்ந்து சிங்கள அரசுக்கு எத்தனையோ நிர்ப்பந்தங்கள், எச்சரிக்கைகள் விடுத்தும் சிங்கள அரசு தன்னுடைய படையெடுப்பு அதாவது, இராணுவ ரீதியாக தமிழர்களினுடைய பிரச்சினையைத் தீர்ப்பது என்கின்ற கொள்கையில் சிறிதளவு கூட மாற்றத்தினை விளைவிக்கவில்லை.
அண்மையில் கூட ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து மனித உரிமைகள் அமைப்புக்கான பிரதிநிதி வருகை தந்து நேரடியாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களைப் பார்வையிட்டார். அதாவது, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் தாயகப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். அதுவும் ஆக்கிரமிக்கப்பட்ட அந்தப் பகுதிகளைப் பார்வையிடும் போது சிங்களப் படைத் தளபதிகளுடன்தான் சென்று பார்வையிட்டார். அவர் தமிழர் தரப்பினைச் சந்திக்கவே இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூட சந்தித்து தமிழரின் தரப்பை அவர் அறியவில்லை. அப்படியிருந்தும் அவர் புறப்பட்டுச் செல்லும் போது கொழும்பில் சிங்கள அரசுக்கு எதிராக காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு உலகத்தில் சூடானுக்கு அடுத்த படியாக மிக மோசமான அரசு சிங்கள அரசு என்று கூறிச்சென்றுள்ளார். இதெல்லாம் உண்மைதான்.
ஆனால் தமிழ் மக்களிடம் ஒரு கேள்வி நீண்ட நாட்களாக எழுவது என்னவெனில், இந்தப் பெரிய வல்லரசுகள் அல்லது இந்தப் பெரிய உலக நிறுவனங்கள் இதனை மட்டுமா செய்து கொண்டிருக்கப் போகின்றன?
இதனையும் இவர்கள் எத்தனை காலத்துக்கு செய்து கொண்டிருக்கப் போகின்றனர்? இதன் அடுத்த நடவடிக்கை ஒன்று இல்லையா? தமிழ் மக்களின் அல்லற்படும் வாழ்விற்கு, சிங்களத்தின் மிக படுமோசமான ஆக்கிரமிப்பிற்கு நடவடிக்கை ரீதியான வேறு பதில் இல்லையா?
நீங்கள் கூறுவதனையெல்லாம் சிங்கள அரசு நிராகரிக்கின்றது.
இப்போது போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவும் ஏதோ கூறுகின்றது.
ஆனால் சிங்களப் படை பெருமெடுப்பில் தயாரிக்கின்றது என்பதுதான் உண்மை.
வன்னிக் களத்தைச் சூழப் பார்த்தால் மிக அண்மைய மாதங்களில் இங்கே ஒரு கனத்த, பதற்ற நிலையொன்று காணப்படுகின்றது. அதேவேளை சிங்களத் தரப்பு சில ஒத்திகைத் தாக்குதல்களையும் நடத்தியிருக்கின்றது. கடந்த 3-4 மாதங்களில் வவுனியா, மன்னார் முன்னரங்க நிலைகளில் ஏறக்குறைய 12-13 வலிந்த தாக்குதல்களை நடத்தியிருக்கின்றது. ஆனால் அத்தனை தாக்குதல்களையும் நாங்கள் ஒட்டுமொத்தமாக முறியடித்திருக்கின்றோம். இவை எல்லாம் சேர்த்து சிங்கள அரசுக்கு ஒரு குழப்ப நிலை வருகின்றது.
விடுதலைப் புலிகள் எவ்வாறு 2-3 நாட்களுக்குள் பெருமளவு நிலத்தை மீட்டு, பெருந்தொகையான படைக்கலங்களை மீட்டெடுத்து இராணுவ சமநிலையின் உச்சத்திற்கு வந்தார்களோ அதேபோன்று இப்போதும் உச்ச நிலைக்கு அவர்கள் போய் அனைத்துலகத்தின் பெரும் கவனத்தை அவர்கள் பெற்றுவிடுவார்கள், தாங்கள் பெருமெடுப்பில் வீழ்ந்து விடுவோம் என்ற அச்சத்துக்குள் அவர்கள் சிக்குப்பட்டிருக்கின்றனர்.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் நாங்கள் போருக்கு முகம் கொடுக்கத் தயாரான நிலையில்தான் இருக்கின்றோம். சிங்கள அரசும் போரைத் தொடங்கக்கூடிய ஒரு சூழ்நிலையில்தான் இருக்கின்றது.
இன்று யாழ். குடாநாடு என்பது, அதாவது சிங்கள இராணுவத்தினது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதும் அதேவேளையில் கிட்டத்தட்ட 35,000 - 40,000 ஆட்தொகை கொண்ட மிகப்பெரும் படைக்கல வலுவுடன் இருக்கின்ற யாழ். சிங்களப் படைத்தளம் என்பது, வன்னியில் இருக்கின்ற விடுதலைப் புலிகளினுடைய ஆட்டிலெறி வீச்சுக்குள்தான் அது அடங்கியிருக்கின்றது என்கின்ற உண்மை ஒன்றும் இருக்கின்றது.
ஒரு போரில், ஒரு படை வெற்றிகரமாக செயற்பட வேண்டுமாக இருந்தால் பாதுகாப்பான பின்புலம், தளம் ஆகியவை தேவை என்று கூறுவார்கள்.
ஆனால் யாழ். குடாநாடு சிங்களப் படைக்கு அத்தகையதொரு பாதுகாப்பான பின்புலமாக அல்லது பாதுகாப்பான தளமாக இல்லை என்கின்ற செய்தியை எமது ஆட்டிலெறி வீச்சு சுட்டிக் காட்டுகின்றது.
இது எதிர்காலத்தில் நடைபெறப் போகின்ற பெரும் போரில் மரபுச் சமர் நடைபெறும் போது, சிங்கள இராணுவத்துக்கு அவர்களுடைய கட்டளை மையத்தை தாக்கவும், அவர்களுடைய விநியோக தளங்களைத் தாக்கவும், அவர்களுடைய மருத்துவ அணிகளைத் தாக்கவும் என்கின்ற வகையில் ஒட்டுமொத்தத்தில் சிங்களப் படையின் மரபுப் போர் ஆற்றலை நினைத்த கணத்தில் சிதைக்கக்கூடிய ஆற்றலில் விடுதலைப் புலிகள் உள்ளனர் என்கின்றதொரு தகவல் அதில் மிக முக்கியமாக உள்ளது.
சிங்களப் படைகள் தமது ஆக்கிரமிப்பிற்குள் கொண்டு வந்திருக்கின்ற தமிழர் தாயகப் பகுதியில் வசிக்கின்ற மக்களை அல்லது தென்பகுதியில் உள்ள தமிழர்களை ஒரு இரும்புப் பிடிக்குள் அதாவது இதுவரை காலமும் இருந்ததனை விட மிகக் கொடூரமான இரும்புப் பிடிக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கு அவர்கள் திட்டமிட்டிருக்கின்றார்கள் என்பதனைத்தான் இது காணக்கூடியதாக இருக்கின்றது.
காவல்துறைதான் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை கைது செய்கின்றது, கொடுமைப்படுத்துகின்றது. அவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட 24 மணிநேரம் தங்களுடைய விசாரணைகள், சித்திரவதைகளுக்குப் போதாது என்று கூறிக்கொண்டு இப்போது 48 மணிநேர நேர அதிகரித்த நேர வழங்கல் என்பது மேலும், மேலும் எங்கள் யுவதிகள், இளைஞர்கள் கைது செய்யப்படவும், சித்திரவதை செய்யப்படவும், கொல்லப்படவும் போகின்ற சூழ்நிலைக்கு சிங்கள அரசாங்கம் சட்டபூர்வமான வடிவத்தை கொடுத்திருக்கின்றது என்று கூறலாம். இது ஒரு விடயம்.
இன்னுமொரு விடயம் என்னவெனில், சிங்கள அரசினைப் பொறுத்த வரையில் காவல்துறை என்பது சட்டம், ஒழுங்கை கண்காணிக்கும் அமைப்பாக மட்டும் இயங்கவில்லை. உலகம் எங்கும் இருப்பது போன்று அது சட்டம் ஒழுங்கை கண்காணிக்கும் பிற விடயங்களில் தலையிடுவதில்லை என்ற அந்த நிலைமை இங்கு இல்லை.
சிங்களக் காவல்துறை என்பதும் சிங்கள இராணுவத்தின் ஒரு அங்கமாகத்தான் செயற்படுகின்றது. முப்படையுடன் சேர்ந்த ஒரு நான்காவது படையாகத்தான் அது செயற்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நாம் இதனைப் பார்க்கலாம். கிழக்கு மாகாணத்தில் சிங்கள காவல்துறையினர் போரில் ஈடுபடுகின்றனர். எமது இயக்கத்துடன் மோதலில் கூட ஈடுபட்டிருக்கின்றனர். அங்கே அவர்கள் போர் வீரர்கள் போன்றுதான் செயற்பட்டு வருகின்றனர்.
கிழக்கில் நடைபெற்று வரும் கட்டாய ஆட்சேர்ப்பானது தமிழ் - முஸ்லிம் மோதலை ஏற்படுத்தும் சதித்திட்டத்துடன்தான் அதனை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
அங்கே என்னவெனில், சிங்களவர்களைக் கொண்டு காவல்துறையினருக்கான வெற்றிடங்களை நிரப்ப அவர்களால் முடியும். ஆனால் அப்படியிருந்தும் அவர்கள் முஸ்லிம்களை அதில் இணைக்கின்றார்கள் எனில் கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய குழப்பங்களை ஏற்படுத்தி தமிழ்-முஸ்லிம் இன மோதல்களை மேலும், மேலும் தீவிரப்படுத்தி அங்கே இருவரையும் பிரித்து ஆள- கிழக்கை தங்களுடைய ஆக்கிரமிப்பிற்குள் நீண்டகாலத்துக்கு வைத்திருக்கலாம் அதன் வாயிலாக அவர்கள் அதனை சிங்கள மயப்படுத்தி விடலாம் என்ற நோக்கமே இருக்கின்றது. ஆனால் உண்மையில் என்னவெனில் நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் நடவடிக்கை எடுப்பது போன்று முஸ்லிம்களுக்கு எதிராகவும் சிங்களப் பேரினவாதிகள் நடவடிக்கை எடுத்தபடிதான் உள்ளனர்.
இது அன்று மட்டுமல்ல இன்றும் நடைபெறுகின்றது.
ஆனால் முஸ்லிம் மக்கள் இதற்குள் வேண்டுமென்றோ அல்லது தெரிந்தோ, தெரியாமலோ சிங்களப் பேரினவாதிகளின் சதிவலைக்குள் வீழ்ந்து சிங்களப் பேரினவாதிகளின் இலக்கை அடைவதற்கு அவர்களும் தம்மை அறியாமல் ஒத்துழைக்கின்றார்களோ என்கின்ற ஒருநிலைதான் இன்று இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் எத்தனை இளைஞர்கள் சிங்கள காவல்துறையில் இணைந்தார்கள் என்கிற விடயம் எமக்கு தெரியாது. ஆனால் சிங்கள அரசு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் அவர்கள் சேர்கின்றார்களோ இல்லையோ தூண்டில் போடுகின்றது என்பது மட்டும் உண்மை.
கிழக்கு மாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சிங்கள காவல்துறை நிலையங்கள் அங்கே திறக்கப்பட்டு அவர்கள் இராணுவத்தினர் போன்றே செயற்பட்டு வருகின்றனர். எனவே சிங்கள காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட அதிகரித்த நேர ஒதுக்கீடு என்பது அவர்கள் தமிழர்களுககு எதிரான போரில் ஏதோவொரு வகையில் அவர்கள் நேரடியாக போர் வீரர்கள் போன்று பங்குபற்றவோ அல்லது பிற பகுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற தமிழர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி புலி அழிப்பு என்ற பெயரில் இன அழிப்பைச் செய்வதற்கான முன்னேற்பாட்டுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை சிங்கள அரசாங்கம் வழங்கியிருப்பதாகவே நாம் கருத வேண்டும் என்றார் அவர்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.