சிறிலங்காவின் முக்கிய பொருளாதார கேந்திர நிலைகளைத் தாக்குவோம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மிரட்டல்களை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்று அந்நாட்டு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "சிறிலங்கா அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில்" ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியதாவது:
வடக்கும் கிழக்கும் இணைந்த ஈழத்தில் திருகோணமலையை தலைநகராக்குவதே புலிகளின் கனவாகும். எனினும் எமது இராணுவத்தினர் அளப்பரிய தியாகங்களைப் புரிந்து கிழக்கில் புலிகளின் இறுதி முகாமான குடும்பிமலை பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளின் இந்தக் கனவை சிதறடித்துள்ளனர்.
தமது உயிர்களைப் பணயம் வைத்து இராணுவத்தினர் நடத்திய இந்த வெற்றிப் போராட்டத்துக்கு நாட்டு மக்களின் நன்றியைத் தெரிவிக்கவே நாளை சுதந்திரச் சதுக்கத்தில் மாபெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு நகருக்குள் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் இப்போது குறைவடைந்துள்ளன. தலைநகருக்கு ஆயுதங்களையும் வெடி குண்டுகளையும் புலிகள் கடத்தி வருவதை இராணுவத்தினர் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். இதற்கான தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சகல இராணுவத் தரப்பினருக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
எனினும் கொழும்பில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் ஓய்ந்துவிட்டதாகக் கருத முடியாது. மீண்டும் அவை தலை தூக்கலாம். இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சிறிலங்காவின் முக்கிய பொருளாதார கேந்திர நிலைகளைத் தாக்கப்போவதாக தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதே போன்றுதான் சம்பூர் மற்றும் வாகரைப் பிரதேச படுதோல்விகளின் பின்னர் தெற்கில் இரத்த ஆறு ஓடும் என்று அவர் மிரட்டியிருந்தார். அவரது மிரட்டல்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்றார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றும் சகல முயற்சிகளிலும் அரசாங்கம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இதற்காக அரச தூதுக்குழுவொன்று விரைவில் சவூதி செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைக்காக அந்தப் பெற்றோருக்கு நட்டஈடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அத்தொகையை வழங்கவும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்றார் அவர்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.