[ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007]
வன்னியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் மனிதாபிமான பணிகளுக்கான அலுவலகங்களின் வாகனங்கள், மின் பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முடக்கியுள்ளது.
தொடர்ச்சியான மின்வெட்டினாலும் எரிபொருள் பற்றாக்குறையினாலும் உயிர்காப்பு மருந்துகளைப் பாதுகாப்பது என்பது பாதிப்புக்குள்ளாகும் அபாயம் இருப்பதாக மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடிதம் அனுப்பியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியும் மனிதாபிமான பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளருமான ப்ரெற்றிக் லியோன்ஸ் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.
"ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டுக்கு அத்தியாவசிய சேவைகள் திணைக்கள ஆணையாளர் ஒப்புதல் கடிதம் கொடுத்தும் எரிபொருட்கள் வழங்கப்படவில்லை" என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
"அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாட்டால் வன்னிப் பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்கள் தமது பணிகளை படிப்படியாக குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் மின் பிறப்பாக்கிகள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது" என்றும் கோத்தபாய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 15ஆம் நாளிட்டு எழுதப்பட்ட அக்கடிதத்தில், கிளிநொச்சியில் உள்ள உலக உணவுத் திட்ட அலுவலகத்தில் 4 அல்லது 5 நாட்களுக்கான எரிபொருட்கள்தான் கையிருப்பில் உள்ளதாகவும் இரவு நேரங்களில் மின் பிறப்பாக்கிகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய செயற்பாட்டினால் ஐக்கிய நாடுகள் சபை பணியாளர்களினது பாதுகாப்பும் பாதிக்கப்படுவதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம், உலக உணவுத் திட்டம், சிறார் நிதியம், அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் வன்னியில் இயங்கி வருகின்றன.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.