Sunday, July 01, 2007

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் கேலிக்கூத்து.!!

[ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007] ஒன்றரை மாதகால இடைவெளிக்குள் அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை மீண்டும் ஒரு தடவை அதிகரித்திருக்கிறது. ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 5 ரூபாவாலும் ஒரு லீற்றர் டீசலின் விலை 4 ரூபாவாலும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை முன்னென்றும் இல்லாதவகையில் 16 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த அதிகரிப்பின் பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோலின் தற்போதைய விலை 111 ரூபா. டீசலின் விலை 71 ரூபா, மண்ணெண்ணெயின் விலை 67 ரூபா. அதேவேளை, சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கும் ஷெல் காஸ் சம்பெனிக்கு அனுமதியை வழங்கியிருப்பதாக பாவனையாளர் விவகார அதிகாரசபை நேற்று முன்தினம் அறிவித்திருக்கிறது. சமையல் எரிவாயுவின் விலையை 174 ரூபாவால் அதிகரிப்பதற்கே கம்பெனி அனுமதி கோரியிருந்தது. ஆனால், பாவனையாளர்களின் நலன்களையும் உலகச்சந்தையில் எரிவாயு விலையையும் பரிசீலனைக்கு எடுத்த பின்னர் 87 ரூபா அதிகரிப்பைச் செய்வதற்கு அனுமதிக்கத் தீர்மானித்ததாக அதிகாரசபை தெரிவித்திருக்கிறது. 13 கிலோகிராம் சிலிண்டர் சமையல் எரிவாயுவின் புதிய விலை 1085 ரூபாவாக இருக்கும். தனது கட்டுப்பாட்டை மீறிய காரணிகளினாலேயே எரிபொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக அரசாங்கம் வழமையான காரணத்தையே இப்போதும் தெரிவித்திருக்கிறது. உலகச் சந்தையில் பெற்றோலியம் உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டு போவதால் எரிபொருட்களை இதுகாலவரை விற்பனை செய்த விலைகளில் வழங்க முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயகா வெள்ளியன்று செய்தியாளர்கள் மகாநாட்டில் தெரிவித்தார். உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு இறக்குமதியாகும் எரிபொருட்களில் தங்கியிருக்கும் சகல நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கிறது. இந்த யதார்த்தத்துக்கு இலங்கையும் முகம் கொடுத்தேயாக வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. `உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்து வந்த போதிலும், இலங்கையில் அதற்கேற்ப விலைகளை அதிகரிக்காததன் விளைவாக கடந்த இருமாதங்களில் அரசாங்கத்துக்கு 350 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டிருந்தது. உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை தற்போது 70 டொலர்களாக இருக்கிறது. ஒவ்வொரு லீற்றர் பெற்றோலுக்கும் 4 ரூபா 38 சதத்தையும் ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் 4 ரூபா 80 சதத்தையும் ஒவ்வொரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கும் 17 ரூபா 26 சதத்தையும் அரசாங்கம் இழக்க வேண்டியிருக்கிறது. விலைகளை அதிகரிக்காத பட்சத்தில் அரசாங்கத்துக்கு வருடாந்தம் 1500 கோடி ரூபா நஷ்டம் ஏற்படும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்திருக்கிறார். எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தரப்பிலிருந்து இத்தகைய `நியாயங்கள்' கற்பிக்கப்படுவதை நாட்டுமக்கள் நெடுகிலும் கண்டு வந்திருக்கிறார்கள். மக்களுக்கு மேலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாதவகையில்தான் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு வீதங்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் கூட அரசாங்கத்தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவினால் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அநேகமாக ஒவ்வொரு மாதமும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட வண்ணமிருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. எரிபொருட்களின் விலை அதிகரிப்பு என்பதை அத்தியாவசியப் பாவனைப் பொருட்களினதும் அத்தியாவசிய சேவைகள் கட்டணங்களினதும் அதிகரிப்பாகவே கருதவேண்டும், இறுதியாக செய்யப்பட்டிருக்கும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிக்கப் போகிறது. நாளைய செலவுக்கு என்ன செய்யப் போகின்றோம் என்று கலங்கிய வண்ணமே ஒவ்வொரு நாளையும் கழித்துக்கொண்டிருக்கும் சாதாரண மக்களினால் இனிமேல் ஏற்படப்போகின்ற வாழ்க்கைச்செலவு அதிகரிப்பை எவ்வாறுதான் தாங்கிக்கொள்ள முடியுமோ? அதை நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருக்கின்றது. பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எரிபொருட்களின் புதியவிலை அதிகரிப்பினால் எவ்வாறு மாற்றப்படுமோ என்பதும் சிந்தனைக்கு எடுக்க வேண்டிய ஒரு விடயமாக இருக்கின்றது. மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து அடிக்கடி அச்சுறுத்தும் பாணியில் மின்சக்தி அமைச்சர் பேசிவருகின்றார். ஆனால், வெள்ளியன்று எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பிலான தீர்மானத்தை அறிவிப்பதற்காக கூட்டிய செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய பிரதமர் விக்கிரமசிங்க மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என்று தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தற்போதைக்கு மக்களை ஆசுவாசப்படுத்தும் நோக்குடனானது என்றுதான் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. உண்மையிலேயே நாடு இன்று எதிர்நோக்கியிருக்கின்ற பாரதூரமான நெருக்கடிகளை உணர்ந்தவர்களாக அரசாங்கத் தரப்பினர் செயற்படுகின்றார்களா? மக்களைத் திணறடித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஓரளவுக்கேனும் சமாளிப்பதற்கு அவர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய ஏற்பாடுகள் குறித்து அரசாங்கத் தரப்பினர் மானசீகமாக அக்கறை காட்டுகிறார்களா? வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் சிபார்சுகளை அறிவித்த பிரதமர் விக்கிரமநாயக்க அமைச்சர்களின் சம்பளங்களை குறைப்பது தொடர்பான ஒரு யோசனையை முன்வைத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாளைய தினம் அரசாங்க பாராளுமன்றக் குழு கூடும்போது அமைச்சர்களின் சம்பளக் குறைப்பு குறித்து இறுதி முடிவு ஒன்று எடுக்கப்போவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். சில மாதங்களுக்கு முன்னர் தான் எம்.பி.க்களினதும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்களினதும் சம்பளங்கள் கிட்டத்தட்ட 100 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருந்தன. அமைச்சர்களின் சம்பளங்களைக் குறைப்பதன் மூலமாக நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையை குறைப்பதென்பது ஒரு அரசியல் கேலிக்கூத்தேயாகும். அதன் மூலமாக ஒருபோதுமே வாழ்க்கைச் செலவைக் குறைத்துவிட முடியாது. இன்று உலகிலே மிகப்பெரிய அமைச்சரவை இலங்கையிலேயே இருக்கின்றது போலத் தெரிகிறது. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் என்று 107 பேர் இப்போது அதிகாரத்தையும் வரப் பிரசாதங்களையும் அனுபவித்துக்கொண்டு மக்களின் முதுகில் சவாரிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சவாரி மேலும் தொடருவதற்கான அறிகுறிகள் தான் தாராளமாகத் தென்படுகின்றன. எதிரணியில் இருந்து மேலும் சில எம்.பி.க்கள் அரசாங்கத்தின் பக்கம் வரவிருப்பதாகவும். அவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்படவிருப்பதாகவும் கடந்தவாரம் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கூறியிருந்தார். இவர்களின் சொல்லும் செயலும் மக்களின் நலன்களில் எந்தவிதமான அக்கறையும் இவர்களுக்குக் கிடையாது என்பதையே பறைசாற்றுகின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.