[ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007] {தேசியன்} இணைந்த வட, கிழக்கே எமது தாயக பூமியென இறுக்கமாக வரித்து, அதன் அடிப்படையில் தமது ஆணித்தரமான அபிலாஷைகளை வலியுறுத்தி நிற்கும் தமிழ் மக்களின் அசையாத அரசியல் கோரிக்கைகளை, ஈடாடச் செய்துவிட வேண்டுமென செயற்பட்டு வரும் அரசின் போக்கு மீண்டும் மீண்டும் அம்பலமாகியே வருகிறது. " சண்டையால் எதையும் சாதிக்க மாட்டீர்கள். சமாதான வழியில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து இனக்குழும சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்" என உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தை தொடர்ச்சியாக கோரிவருகிற நிலையிலும் கூட தமது திட்டமிட்ட தமிழின அழிப்பை நிறுத்தாமல் சன்னதமாடுகிறது பேரினவாதம். குறிப்பாக, கிழக்கை பிரித்தெடுத்து தமிழ் மக்களின் `அரசியல் ஆன்மா' வை எப்படியாவது அடக்கிவிட வேண்டுமென்ற சதித்திட்டத்தை அரசாங்கம் முழு மூச்சாக முன்னெடுக்க தொடங்கிவிட்டதை அண்மைய சம்பவங்கள் கோடிட்டு காட்டி நிற்கின்றன. தமது தாயகத்திலேயே கூடு கலைந்து வாழும் தமிழினத்தை சுத்திகரிப்பு செய்து வரும் அரசு, கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தும் முனைப்பிலும் ஈடுபட்டுள்ளது. தமது படைகள் கிழக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக விரட்டியடித்து விடுமென தெரிவித்துள்ள அரசாங்கம், விரைவில் அங்கு தேர்தல் நடத்தலாமெனவும் கூறியுள்ளது. "விடுதலைப் புலிகள் கிழக்கில் இறுதியாக தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள குடும்பிமலைப் (தொப்பிகல) பகுதியை அரச படைகள் கைப்பற்றிவிடும். அதற்கான இறுதிக்கட்ட படைப்புல நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன " எனத் தெரிவித்துள்ள அரசாங்கம், இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் கிழக்கில் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தவே மேற்கொள்ளப்படுகின்றன" எனவும் தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது . `குரு'வின் படுகொலை அரசின் இந்த அறிவிப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்மையாக எதிர்த்துள்ள நிலையில், கிழக்கில் அரசு எப்படியான தேர்தல்களை நடத்தப் போகிறது என்பதை பறை சாற்றும் விதமாக திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச சபைத் தலைவரின் படுகொலை அமைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு விநாயகபுரம் கப்புகனார் வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு வெளியே வைத்து திருக்கோவில் பிரதேச சபைத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குரு என அழைக்கப்படும் 36 வயதுடைய தில்லைநாதன் உதயகுமார் தனது வீட்டிலிருந்த சமயம் அங்கு சென்ற ஆயுததாரிகள் அவரை வீட்டிற்கு வெளியே கூட்டிச் சென்று கடுமையாக தாக்கியதுடன் கைக்குண்டை வெடிக்கவைத்து படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இரு பிள்ளைகளின் தந்தையான இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரென்பதுடன் அண்மையில் அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனை அழைத்து வந்து அம்பாறையில் கூட்டமொன்றையும் நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருக்கோவில் பிரதேச சபைத் தலைவரின் இக் கோரப் படுகொலையானது கிழக்கில் எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் இடர்களுக்கு கட்டியங்கூறுவதாக அமைந்துள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர். அபசகுனம் இலங்கை அரச படைகளினதும் அதன் துணைப்படைகளினதும் துவம்சத்துக்குள் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் கிழக்கு மக்கள், இலங்கை அரசின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை அபசகுனமாகவே பார்க்கின்றனர். கிழக்கின் மாவட்டங்களான திருகோணமலை ,மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று பகுதிகளிலும் ஆரவாரமாக அரச படைகள்ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் தமது படைகளின் ஆக்கிரமிப்பு வெற்றிகளை `கேக்' வெட்டியும் வீராப்பு பேசியும் கொண்டாடினார்கள். திருகோணமலையில் மாவிலாறு, சம்பூர் உள்ளிட்ட மூதூர் கிழக்கு, ஈச்சிலம் பற்று போன்றவற்றை ஆக்கிரமித்த படைகள் மட்டக்களப்பின் வாகரையை கடந்து வந்து பல அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து தனது ஆக்கிரமிப்பு வெற்றியை கொண்டாடியது. இந்த இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சமகாலத்தில் அம்பாறையிலும் படைநகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கிழக்கை வடக்கிலிருந்து பிரிக்க வேண்டு மென்பதையும்அதற்காக கிழக்கை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டு மென்பதையும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தனது அரசியல் இருப்புக்கான அடித்தளமாக கொண்டுள்ளதையே அரசாங்கத்தின் முழுமூச்சான முயற்சிகள் காட்டி நிற்கின்றன. இனவாத கூச்சல்களுக்கூடாக இடர்பட்டு ஆட்சிக்கட்டை பிடித்துக்கொண்ட மகிந்த ராஜபக்ஷவுக்கு தனது ஆட்சிப் பீடத்தையும் ஆட்சித்தளத்தையும் வலுவாக நிலை நிறுத்த சிங்கள மக்களின் தன்சார் கருத்து நிலை அவசியப்பட்டது. அந்த ஆதரவுக் கருத்து நிலை உருவாக்கத்துக்காக சிங்கள மக்களுக்கு மகிந்த ராஜபக்ஷ காட்டிய `படமே' `கிழக்கு மீட்பு' என்பதாகும். இந்த `கிழக்கு மீட்பு' நடவடிக்கை தற்பொழுது தனது இறுதிக்கட்ட பரிமாணத்தை நோக்கியதாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது, கிழக்கில் தமிழினத்தின் இருப்பை ஈடாடச் செய்வதே அரசின் இன்றைய நிலைப்பட்ட முனைப்பாகவுள்ளது. திருகோணமலையில் நிலங்களை ஆக்கிரமித்த அரச படைகள் அவற்றுக்குள் தமிழ் மக்கள் மீளச் செல்ல முடியாதவாறு அதி உயர்பாதுகாப்பு வலயத்தை அமைத்துள்ளன. அத்துடன் திருமலை மக்களின் சமூக அரசியல் ரீதியான அணிதிரள்வை தடுப்பதற்காக பல தமிழ் உணர்வாளர்கள், அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, திருமலையில் தமிழ் மக்கள் மீது நேரடியாக சிங்கள காடையர்கள் மூலம் வன்முறையை பிரயோகித்து அவர்களை தமிழகம் வரை அரசு இடம்பெயரவும் வைத்துள்ளது. அதேபோல், மட்டக்களப்பில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பித்த அரச படைகள் பல லட்சம் தமிழ் மக்களை இடம்பெயர வைத்தன. தற்பொழுது மீள்குடியேற்றம் எனும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அம்பாறையிலும் அரச படைகளின் பல்வேறு கெடுபிடிகளால் தமிழ் மக்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு கிழக்கில் தமிழ் மக்கள் சமூக அரசியல் ரீதியாக ஒன்று திரள முடியாமல் தடுமாறுகின்ற நிலையிலும் உயிர் அச்சுறுத்தல்களுக்குள் வாழ்ந்து வருகின்ற நிலையிலும் இலங்கை அரசாங்கம் தேர்தல் குறித்த பேச்சை உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளது. இது இவ்வாறிருக்க, தேர்தல் நடைபெறுமானால் தமிழ் மக்களின் வாக்குகளை தமக்கு வேண்டியவர்களுக்கு அதிகாரப் பிரயோகத்தினூடு பெற்றுக்கொடுக்கும் வகையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டுவருகின்றது. அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், தமிழ் உணர்வாளர்கள் போன்றோரை படுகொலை செய்து வருகின்றன. இதன் மூலம் தமிழ் தேசியத்தை வலியுறுத்தி எவரும் எதிர்காலத்தில் தேர்தல்களில் குதிக்க முடியாது என்பதனை அரசு கூறாமல் கூறியும் வருகின்றது. கிழக்கு மக்களுக்கு அரசின் தேர்தல் அறிவிப்பும் அதை முன்னிட்டு மீண்டும் இடம்பெறத் தொடங்கியிருக்கும் தமிழர் பிரதிநிதிகளின் பலியெடுப்பும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. கிழக்கை தமிழர்கள் தமது தாயகத்தின் தென்பகுதியென்பதை பேரினவாதிகளுக்கு இடித்துரைக்கப் போவது எப்போது? எப்படி? நன்றி - தினக்குரல்
Sunday, July 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.