Sunday, July 01, 2007

புலிகளின் தாக்குதலில் 820 ஆட்டிலெறி எறிகணைகள் அழிப்பு.

[ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007] தமிழீழ விடுதலைப் புலிகளுடனான முள்ளிக்குளம் சமரில் சிறிலங்கா இராணுவத்தின் 820 (130 மி.மீ.) ஆட்டிலெறி எறிகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: வன்னியில் கடந்த ஜூன் 2 ஆம் நாள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர். இதில் இராணுவத்தின் 130 மி.மீ. ஆட்டிலெறி சேமிப்புக் களஞ்சியம் தாக்குதலுக்குள்ளானது. விடுதலைப் புலிகள் 130 மி.மீ. ஆட்டிலெறி எறிகணைகள் கொண்டு நடத்திய இத்தாக்குதலில் பம்பைமடு அருகே அமைக்கப்பட்டு இருந்த ஆட்டிலெறித் தளம் அழிக்கப்பட்டது. அத்தளத்தில் 820 எறிகணைகள் அழிக்கப்பட்டு விட்டதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவிலிருந்து 9 கிலோ மீற்றர் தொலைவில் மன்னார் வீதியில் பம்பைமடு உள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகள் மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கியுள்ளனர். செல்லிடப்பேசியின் ஊடாக யாரேனும் அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்களா? செக்டர் 2-க்குப் பின்னால் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஆட்டிலெறி களஞ்சியம் உள்ளது. விடுதலைப் புலிகளின் முதல் இரண்டு 130 மி.மீ. ஆட்டிலெறி எறிகணைகள் பாதுகாப்பு நிலைகளுக்கு அப்பால் வீழ்ந்துள்ளன. அவற்றில் ஒன்று 40 இராணுவத்தினர் பதுங்கியிருந்த பதுங்குகுழிக்குள் வீழ்ந்தது. அதன் பின்னரான ஆட்டிலெறி எறிகணைகள்தான் களஞ்சியம் மீது சரியாக வீழ்ந்தன. அழிக்கப்பட்ட 130 மி.மீ ஆட்டிலெறி எறிகணை ஒன்றின் விலை 30 ஆயிரம் ரூபாய். மொத்தமாக இராணுவத்துக்கு 24.6 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.