[புதன்கிழமை, 27 யூன் 2007]
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி பிரிவான சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கொள்கை அறிக்கையை வெளியிட்ட அப்பிரிவின் அமைப்பாளர் மங்கள சமரவீர கூறியதாவது:
மகிந்த அரசின் தவறான நிர்வாகத்தினால் நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. நாம் நாளைய நல்வாழ்வுக்கான சிறந்த அபிவிருத்தித் திட்டங்களையும் கொண்டுள்ளோம்.
சிறிலங்காவில் 103 அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்களை என்கிற நிலையை மாற்றி அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்க வேண்டும்.
சிறிலங்காவில் புதிய தேர்தல் முறையை கொண்டு வர விரும்புகின்றோம். புதிய திட்டத்தின் படி அமைச்சரவை 30 ஆக குறைக்கப்படுவதுடன் அதில் 5 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்படும்.
நாட்டின் அபிவிருத்திக்கு தமது அறிவுத்திறனை உபயோகிக்கும் பொது மக்களில் இருந்தும் மூவர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கட்சி தாவுவதை தடுக்கும் பொருட்டு இந்த வல்லுநர்கள் தேசியப்பட்டியல் மூலம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
தேர்தல் வாக்குறுதிகளை கண்காணிப்பதற்காக ஒரு நிரந்தர தேர்தல் ஆணையம் நியமிக்கப்படும். தரமான அரச நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டு சுயாதீனமான நீதித்துறை அமைக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரத்தை உறுதியாக பேண மகிந்த தவறிவிட்டார். காவல்துறை மா அதிபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு தலைவர், குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் ஆகியோர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் தனிப்பட்ட வழிநடத்தலில் இயங்கி வருகின்ற போதும் கடந்த 17 மாதங்களாக மனித உரிமை மீறல்கள் மோசமாக அதிகரித்து சென்றுள்ளன என்றார் மங்கள சமரவீர.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.