Tuesday, June 12, 2007

மகிந்தவின் சகோதரரான சமல் ராஜபக்ச மீது சிங்களவர்கள் தாக்குதல்.!!

[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007] சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சரும், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்சவின் வாகன அணி மீது சிங்கள பொதுமக்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன் அமைச்சரை கற்களை வீசி துரத்தியுள்ளனர். சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தாதுறு ஓயா நீர்த்தேக்க திட்டத்தில் தமது காணிகளை இழந்த பொதுமக்களே அமைச்சரின் வாகனத் தொடரணி மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குருநாகல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் உள்ள வாரியபொலப் பகுதியில் நடைபெறும் நிர்மாண வேலைகளை அமைச்சர் பார்வையிடச் சென்ற போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுமக்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்ததுடன் காவல்துறையினரின் வாகனம் ஒன்றும், அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் ஒன்றும் சேதமடைந்தன. நீர்த்தேக்க திட்டத்திற்காக அரசினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீடுகளை பெறாத மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியதுடன், தமக்கு வழங்கப்பட்ட நிலங்கள் உபயோகம் அற்றவை எனவும் தெரிவித்துள்ளனர். நீர்பாசன, துறைமுகங்கள், பொது வானூர்தி சேவை அமைச்சரான சமல் ராஜபக்ச காணிகளை இழந்த மக்களுக்கான இழப்பீடுகளையும் புதிய வதிவிடங்களுக்கான அடிப்படை சேவைகளையும் ஒரு மாதத்திற்குள் வழங்குவதாக உறுதியளித்தார். எனினும் இதே போன்ற உறுதிமொழிகள் பல முறை வழங்கப்பட்டுள்ளதாக கூறிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் திட்டத்தை பார்வையிட்ட அமைச்சர் மக்களை சந்திக்காது திரும்பிச் செல்ல முற்பட்ட போது பொதுமக்கள் இத்தாக்குதலை நடத்தி உள்ளனர். இதனிடையே அமைச்சரின் வாகனத் தொடரணி மீது தாக்குதலை நடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாம் 15 பொது மக்களை கைது செய்திருப்பதாகவும், மேலும் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய இருவரை தேடி வருவதாகவும் வாரியபொல காவல் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.