Monday, June 11, 2007

தமிழீழத்தை" அங்கீகரிக்கக் கோரி பாரிய எழுச்சியுடன் நடந்த "வெல்க தமிழ்" பேரணி.

[திங்கட்கிழமை, 11 யூன் 2007]

"இலங்கைத் தீவில் தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி" என்ற முழக்கத்தை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய உலகத் தமிழர்களின் "வெல்க தமிழ்" எழுச்சிப் பேரணியால் சுவிசின் ஜெனீவா நகரமே திணறியது.

பிரமுகர்கர்களின் உரை, ரிவிஜ தொலைக்காட்சி, நிகழ்வின் இறுதி விபரம்

ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலுக்கு முன்பாக 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொடரூந்து நிலையம் அருகே ஐரோப்பிய நேரம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்தப் பேரணி தொடங்கியது.

பேரணியின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

- சிறிலங்கா ஆட்சியாளர்களால் நடத்தப்படும் தமிழின அழிப்பை நிறுத்துக

- போர்க்குற்றம் புரியும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றக் கூண்டில் நிறுத்துக

- தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்கா ஆக்கிரமிப்புப்படையே வெளியேறு

- தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக

- தமிழர் விடுதலைக்கான குரலை அங்கீகரி

- தமிழீழத் தமிழகளின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி

- எங்கள் தலைவர் பிரபாகரன்! எங்கள் தலைவர் பிரபாகரன்!

- எங்கள் தேசம் தமிழீழம்! எங்கள் தேசம் தமிழீழம்

என முழக்கங்கள் பல்வேறு மொழிகளிலும் எழுப்பப்பட்டன.

தமிழீழத் தமிழர்கள் முகம் கொடுத்து வரும் ஒவ்வொரு அவலத்தையும் வெளிப்படுத்தும் வகையிலான ஊர்திகளும் பேரணியில் இடம்பெற்றிருந்தன.

பேரணியில் இடம்பெற்றிருந்தோர்

தமிழீழத் தேசியக் கொடி ஏந்தி-

தமிழீழத் தேசியத் தலைவரின் உருவம்

தமிழீழ இராணுவமான "விடுதலைப் புலிகளின்" படையணிகளின் இலச்சினைகள்

ஆகியவற்றை பதாகைகளாக ஏந்திச் சென்றனர்.

பேரணிகளில் பங்கேற்றோர் மஞ்சள்- சிவப்பு உடைகள் அணிந்திருந்தனர். பல்வேறு தமிழர் நிறுவனங்கள்- அமைப்புகள் தங்களது நிறுவனம் மற்றும் அமைப்பின் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

கைக்குழந்தைகளை தொட்டிலில் ஏந்தியவாறு பெண்கள் பேரணியில் பங்கேற்றனர்.

விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்தோர் அந்த கழகங்களுக்குரிய சீருடைகளை அணிந்திருந்தனர்.

சிவப்பு, மஞ்சள் வர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்ட நிலையில் ஜெனீவாவின் வீதிகள் திணறியது.

பல அடுக்கு மாடிக் கட்டடங்களின் நடுப்பகுதி ஊடே பேரணி நகர்ந்த போது ஊர்திகளில் இடம்பெற்றிருந்த பாரிய அவலங்கள் சுவிஸ் நாட்டவரின் கவனத்தை பாரிய அளவில் ஈர்த்தது.

பிரான்ஸ், யேர்மனி, பிரித்தானியா, இத்தாலி, டென்மார்க், சுவீடன், நோர்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்.

தனி வானூர்திகளை அமர்த்தியும் பெருந்தொகையான பேரூந்துகளிலும் தொடரூந்துகளிலும் தாங்கள் ஜெனிவாவுக்கு வந்ததாக பேரணியில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

தாயகத்தில் புலிகளின் குரலிலும் புலம்பெயர் வானொலிகளான ஐபிசி தமிழ் வானொலி, கனடிய தமிழ் வானொலி, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஜேர்மனியிலிருந்து ஒலிபரப்பாகும் ஐரோப்பிய தமிழ் வானொலியும், தொலைக்காட்சி ஒளிபரப்பினை தாயகத்திலிருந்து ஒளிபரப்பாகும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சி, கனடாவிலிருந்து ரிவிஐ, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் ஒலிபரப்பாகும் "தரிசனம்" தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒலி, ஒளிபரப்பப்பட்டன.

ஐ.நா. முன்றலை பேரணியின் முன்பகுதியினர் சென்றடைந்த பின்னர் அரங்க நிகழ்வுகள் தொடங்கின. பேரணியில் பங்கேற்றோர் தொடர்ந்து அரங்கை வந்தடைந்த வண்ணம் இருந்தனர்.

இந்தப் பேரணியில் பங்கேற்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் (தமிழ்நாடு) பழ. நெடுமாறன் கருத்து தெரிவிக்கையில், வெள்ளம் போல் தமிழர் கூட்டம் திரண்டிருக்கிறது. தமிழீழப் பிரச்சனையை சிங்கள இராணுவ அட்டூழியங்களை மனித உரிமை மீறல்களை உலக சமுதாயத்துக்கு எடுத்துக்காட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்றார்.

ஐ.நா. முன்றலின் முன்பாக உள்ள திடலின் மையத்தில் தமிழீழத் தேசியக்கொடி வாழ்த்துடன் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தமிழீழத்தின் விடியலைச் சொல்லும் வகையில் தமிழீழத் தேசியக் கொடி ஐ.நா. முன்றலின் முன்பாக பட்டொளி வீசிப் பறந்தது.

அரங்க நிகழ்வுகளை சுவிசின் அல்பேர்ட் தொகுத்து வழங்கினார்.

அதே நேரத்தில் சிவப்பு, மஞ்சள் வர்ணத்திலான பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. ஐ.நா. மன்ற முன்றல் வான் முழுமையும் அந்த பலூன்கள் பறந்தன.

பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் அமைப்பின் பொறுப்பாளர் கிருபாகரன் ஈகச் சுடரேற்றினார்.

தாயகத்துக்காக உயிர்களை அர்ப்பணித்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் அமைப்பின் பொறுப்பாளர் வி.கிருபாகரன் பேசுகையில், அடக்கப்பட்ட மக்கள் சீருடைகளுடன் போராடினால் அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் வலியுறுத்துகின்றது என்றார்.

முன்னாள் சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் நெருங்கிய உறவினரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளரான மருத்துவ கலாநிதி பிறையன் செனிவிரட்ன தனது உரையில்,

இலங்கையில் யுத்தம் நடைபெறவில்லை. இனப்படுகொலைதான் நடைபெறுகிறது.

பொருளாதாரம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுகிறது. இனப்பிரச்சனையின் மற்றொரு பக்கத்தையும் அனைத்துலக ஊடகங்கள் முன்னிலைப்படுத்த வேண்டும்.

ஒரு தரப்பை தடை செய்துவிட்டு பேச்சு வார்த்தையை எப்படி நடத்துவது? தடைகள் மூலம் கொழும்பு பேரினவாதத்துக்கு ஆதரவளிக்கின்றன.

ராஜபக்ச சகோதரர்கள் விடுதலைப் புலிகளத் தோற்கடித்தாலும் உலகத் தமிழர்களின் உறுதியான அரசியல் போராட்டத்தை தோற்கடிக்க முடியாது. சிறிலங்காவை சிங்கள பௌத்த அரசாங்கமாக சிங்களவர்கள் கருதினால் தமிழ் மக்களும் தமிழீழத்தை தங்களது தேசமாகக் கருதும் உரிமை உண்டு என்றார்.

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த ஊடகத்துறையைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் பேசுகையில்,

அடிபடுபவன் தீவிரவாதி அல்ல. அடிக்கிறவன்தான் தீவிரவாதி. கொழுப்பேறி சுதந்திரம் கேட்கவில்லை கொடுமைகளால் கேட்கிறார்கள். நாடுகள் இரண்டாகப் பிளவுபட்டிருக்கின்றன. மக்கள் மடிவதைத் தடுக்க ஒரு நாடு இரண்டாக பிளவுபடுவது தவறா? உலகக் கிண்ணக் கோப்பையில் கூட ஒரு சிங்களவன் தான் ஆட வேண்டும்- சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் ஆடக்கூடாது என்று கருதுகிற சிங்களத்திடத்தில் நீதி கிடைக்காது என்றார்.

தமிழீழத்திலிருந்து வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பேசுகையில்,

இந்த வெல்க தமிழ் நிகழ்வு ஒரு வரலாற்று திருப்பம். 1983 இல் பல விடுதலை இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தினாலும் போராட்டங்கள்- குழப்பங்கள்- சிக்கல்கள் மோதல்கள் இருந்தபோதும் அனைத்தையும் மறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் ஒரே தலைவர்- ஒரே கொடி என மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்து நிற்கிறோம்.

அனைத்துலக கண்டனங்களால் மகிந்த ராஜபக்ச பைத்தியம் பிடித்தது போல் ஆகியிருக்கிறார். இலங்கைக்குள் தீர்வு இல்லை என்று நிலைமை உருவாக்கப்பட்ட பின்னர் எமது தேசத்தை வென்றெடுப்பதைத தவிர வேறு தீர்வு இலை. எங்களை நாங்களே ஆள்வதன் மூலம் நிம்மதியான சமாதானம் இலங்கைத் தீவில் ஏற்படும். இலங்கைத் தீவில் இரு நாடுகள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். புலம்பெயர் தமிழர் ஆதரவு மற்றும் உறுதுணையுடன் நாம் எமது தேசத்தை அமைப்போம். இறுதிக் கட்டத்திலாவது பிரிந்து நிற்பவர்களே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். இதுவே கடைசிச் சந்தர்ப்பம் என்றார்.

வணக்கம் என்று தமிழில் தொடங்கி தனது உணர்வுரையை ஆற்றினார் அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கரென் பார்க்கர்.

அதன் பின்னர் தமிழ்நாட்டிலிருந்து வந்து பங்கேற்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார்.


மேலும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் நிகழ்வில் உரையாற்றினர்.

அதன் பின்னர் "வெல்க தமிழ்" எழுச்சிப் பிரகடனம் பாரிய உணர்வெழுச்சியுடன் வாசிக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்றபோதும் பாரிய அளவில் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டதற்காக ஜெனீவா காவல்துறையினர் பாராட்டுத் தெரிவித்தனர்.

நிகழ்வுகளை ஒருங்கிணைப்புச் செய்த சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" பாடலுடன் தமிழீழத் தேசியக் கொடி இறக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தன.

மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.