Tuesday, June 12, 2007

சிறிலங்கா அரசால் விடுதலைப் புலிகளை யுத்தத்தால் வெல்ல முடியாது : பிரிட்டிஷ் பிரதமர்.!!

[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007]

சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி சகல மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் வெல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பிரிட்டிஷ் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமை நிலைவரம் மோசமடைந்து வருவதால் ஐக்கிய நாடுகள் தலையிட வேண்டும் என்ற சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் சூழ்நிலையிலேயே பிளயரின் இந்தக்கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சிறிலங்கா இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நம்பகத்தன்மை வாய்ந்த அரசியலமைப்பு கட்டமைப்பொன்றை உருவாக்குவது அவசியமானது என்றும் பிரிட்டிஷ் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கான இராணுவ நடவடிக்கை காரணமாக சிறி லங்காவில் பாரிய மனிதாபிமான துயரம் ஏற்பட்டுள்ளமை மற்றும் இலங்கையின் சர்வதேச கௌரவத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதை பிரிட்டிஸ் அரசாங்கம் இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக தெரியப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரிட்டிஸ் உறுப்பினர்களுக்கு கடந்த 4 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ள விசேட விளக்கவுரையில் சிறிலங்காவுக்கு ஐக்கிய நாடுகளின் தூதுக்குழுவொன்றை அனுப்புவதற்கான சர்வதேச முயற்சிகள் சாத்தியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் தொடர்வது விசாரணைக் குழுக்கள், சிறிலங்கா யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு போன்றவை பயனற்றுப் போயிருப்பது போன்றவற்றினால் சிறிலங்காவுக்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஐரோப்பிய பாராளுமன்றம் இம்மாதம் சிறிலங்காவுக்கு எதிராக கடும் தீர்மானமொன்றை நிறைவேற்றவுள்ளதாக தெரிவிக்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.