[ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007]
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்கா மிகக்கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
ரொய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. ஊடகங்களுக்கு அண்மையில் நேர்காணல் அளித்த கோத்தபாய, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை மிகக்கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
"இந்த நேர்காணல் குறித்து அமெரிக்கா மிக வருத்தமடைந்துள்ளது. அதேநேரத்தில் இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதில் கோத்தபாய ராஜபக்ச புகழ் வாய்ந்தவர்" என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்திருக்கும் நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைகளை மிகக்கடுமையாக உயர் பொறுப்பில் உள்ள கோத்தபாய ராஜபக்ச விமர்சித்திருந்தார். கோத்தபாய ராஜபக்சவின் விமர்சனங்கள், இராணுவ உதவி தொடர்பான விவகாரங்களில் எதிரொலிக்கக்கூடும் என்றும் அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கோத்தபாய ராஜபக்ச விவகாரம் தொடர்பாக எதுவித பகிரங்க அறிக்கையும் வெளியிடுவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அதே நேரத்தில் கோத்தபாய ராஜபக்ச நேர்காணல் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே உள்ளக விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் கூறப்படுகிறது.
மேலும் பாரிய மனித உரிமை மீறல்களுக்காக அனைத்துலக நீதிமன்றத்தின் பார்வைக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் வாரம் நடைபெற உள்ள இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்சவுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் என்றும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.