[புதன்கிழமை, 20 யூன் 2007] ஐக்கிய நாடுகள் சபையால் அனைத்துலக அகதிகள் நாள் கடைபிடிக்கப்படும் இன்றைய நாளில் நெளரு தீவில் (அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு) "இலங்கை அகதிகள் தடுப்பு முகாம்"-இலிருந்து தமிழீழ உறவுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் கண்ணீர் வேண்டுகோள்: இலங்கை அகதிகள் தடுப்பு முகாம், நெளரு 20.06.2007 எமது உறவுகளுக்கு, நீங்கள் எங்களுக்கான உதவிகளை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதனை நாம் அறிவோம். அதற்காக முதலில் உங்களுக்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் உங்களுக்கு எழுதிக்கொள்வது யாதெனில், எமது நாட்டில் இருந்து போர்ச் சூழல் காரணமாக சொல்லில் அடங்காத வேதனைகளை அனுபவித்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவென ஆழ்கடலூடாக பயணம் செய்து மூன்று மாதங்களாக நெளரு இலங்கை அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். இந்நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ- எங்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறதோ என்று தெரியாமல் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்தும் இந்த நாட்டில் அசாதாரண சூழ்நிலையில் இருந்து கொண்டிருப்பதால் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எமது குடும்ப உறவுகளுடன் நீண்டகாலமாக எந்தவிதத் தொடர்புகளும் இல்லாமல் தவித்த நிலையில் இருக்கிறோம். எனவே இந்த அனைத்துலக அகதிகள் நாளில் எங்களுக்காக உங்களது உரிமைக் குரல்களை உரத்து தெரிவிப்பதுடன் எங்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டு எங்களுக்கு மறு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு உரியவர்களுடன் கதைத்து அழுத்தங்களைக் கொடுக்குமாறு உறவுகள் என்ற உரிமையில் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வண்ணம் இலங்கை அகதிகள்- நெளரு நெளரு தீவில் "அகதிகள் நாள்" அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நெளரு தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடம் கோரும் தமிழ் பேசும் இலங்கையர்களும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 7 பேரும் அனைத்துலக அகதிகள் நாளை கடைபிடித்து வருகின்றனர். இலங்கை கொடூரங்களை அனைத்துலகம் கண்டித்து வரும் நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் புகலிடம் கோரியுள்ள தங்களுக்கு எதுவித முடிவும் தெரிவிக்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். "எங்களது மன விக்ரதியை அனைத்துலக அகதிகள் நாளில் அமைதியாக வெளிப்படுத்தி வருகிறோம்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Wednesday, June 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.