[புதன்கிழமை 20 யூன் 2007] தமிழ் மக்களின் தாயக பூமியான திருகோணமலையை சிங்களம் ஆக்கிரமிக்கிறது என்று திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா வர்த்தமானியில் கடந்த 10.06.2007 அன்று தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சம்பூரை உள்ளடக்கிய மூதூர் கிழக்குப் பிரதேசங்களை அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்றும் அங்கே மக்கள் மீளக்குடியேற முடியாது என்றும் மீறி அப்பகுதிகளிற்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்களை கடந்த 25.04.2006 அன்று சிறிலங்கா அரசு தனது வான் படையின் மூலம் குண்டுத் தாக்குதலை நடத்திய சம நேரத்தில் எறிகணைகள், பல்குழல் தாக்குதல்கள் என்பவற்றையும் மேற்கொண்டு இப்பகுதியில் வாழ்ந்த பதின்மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியதுடன் இத்தாக்குதலில் பதினைந்து பொதுமக்கள் கொல்லப்பட, ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வாறு தனது கோரத்தாண்டவத்தை ஆடிமுடித்த சிறிலங்கா அரசு தொடர்ந்தும் அப்பகுதிக்கு மக்கள் திரும்பிவராது தடுப்பதற்காக நாளாந்தம் இப்பிரதேசங்கள் மீது தாக்குதலை நடத்தி வந்தது. இதன் உச்சக்கட்ட நடவடிக்கையாக 29,30,31 ஓகஸ்ட் 2006 இல் சிறிலங்காப் படைகள் இப்பிரதேசங்களை ஆக்கிரமிப்புச் செய்தது. இதனால் வாகரை நோக்கி இடம்பெயர்ந்து சென்ற மக்கள் சொல்லணாத் துன்பங்களுடன் வாழ்ந்ததுடன், தங்கள் பிரதேசங்களிற்கு மீள முடியாத நிலையிலிருந்த போது, அந்த மக்கள் மீது சிறிலங்காப் படைகள் குண்டுகளை வீசி மிகப்பெரும் உயிரழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டது. வாகரையும் ஆக்கிரமிக்கப்பட்டதன் பின்னர் தற்போது இந்த மக்கள் திக்கற்றவர்களாக உறவுகளைப் பிரிந்து அலைந்து திரியும் நிலையிலுள்ளார்கள். இந்நிலையில் தங்களது சொந்த நிலங்களிற்குப் போகலாம் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களுக்கு சிறிலங்காவின் வர்த்தமானி அறிவித்தல் பேரிடியாக விழுந்துள்ளது. மரத்தில் ஏறி விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல, திசை அற்றவர்களாக இந்த மக்களின் நிலை உருவாகியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்புக்காக இப்பிரதேசம் பாதுகாப்பு வலயம் எனக் கூறப்பட்டுள்ளமைதான். திருமலைத் துறைமுகத்திலிருந்து இக்கிராமங்கள் 12 கடல் மைல்களைத் தாண்டியேயுள்ளது. துறைமுகத்திற்கு அருகேயுள்ள கிராமங்கள் அப்படியேயிருக்க, தமது கட்டுப்பாட்டிலுள்ளது என்று கூறப்படும் இக்கிராமங்களை ஏன் ஆளரவமற்ற சூனியப் பிரதேசம் ஆக்கப்பட்டது. தமிழ் மக்களைத் திருகோணமலையிலிருந்து வெளியேற்றவேண்டும் என்ற பேரினவாதச் சிந்தனையின் வெளிப்பாடே இது. இந்தப் பகுதியினைப் பொருளாதார வலயமாக்கப்போகிறோம் என தற்போது, இந்த நடவடிக்கைக்கு இன்னுமோர் புதிய விளக்கமளிக்கப்படுகிறது. தமது காணியில் விவசாயம் செய்து, தமது வயலில் நெல் விதைத்து, தமது கடலில் மீன்பிடித்து தமது பொருளாதாரத்தினை ஈட்டிக்கொண்டிருந்த மக்களை ஏதுமற்றவர்களாக வெளியேற்றிவிட்டு, நாட்டினது பொருளாதாரத்தினைப் பெருக்குவதற்கான வலையமாக்கினேன் என்கிறது அரசு. மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது இக்கிராமங்களைச் சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஒரு பொருளாதார மையத்தை உருவாக்குவதற்காக மக்களுக்கு இவ்வளவு அழிவையும் இழப்புக்களையும் ஏற்படுத்தும் வரலாறு சிறிலங்காவில்தான் நடைபெறுகிறது. எனவே எமது மக்கள் தங்களது சொந்த இடங்களில் வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதோடு இந்த அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக மீளப்பெறவேண்டும் எனக் கோருகிறோம். தனது நாட்டு மக்களைப் பாதுகாக்கிறேன் என்று கூறிக்கொள்றுளும் அரசும் அதனது படைகளும் தமது பாதுகாப்பிற்காக மக்களை வெளியேற்றும் அவல நிலையினை ஒருகணம் சிந்தியுங்கள் என நாங்கள் அனைத்துலகத்திற்கு ஓர் வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழ் மக்களது வாழ்விடங்களைப் பறித்து, அவர்களை அம்மண்ணிலிருந்து வெளியேற்றுவதே சிறிலங்கா அரசின் நீண்டகாலத் திட்டம். எனவே தமிழருக்கென்றொரு தாயகம் இல்லாதவரை இந்த மண்ணில் தமிழன் எங்கும் வாழமுடியாது என்பதையே இந்த நடவடிக்கை மூலம் சிறிலாங்கா அரசு மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, June 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.