Thursday, June 21, 2007

எதிரணியில் அமர்ந்த பலனை இருவரும் விரைவில் அனுபவிப்பர்.

சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா கூறுகிறார் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் பெரும்பான்மை பலமிருப்பதாக தெரிவித்த சபை முதல்வரும், அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்ட மங்கள சமரவீர, ஸ்ரீபதி ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்றத்தில் தமக்கு 117 ஆசனங்கள் அரசுக்கு ஆதரவாக இருப்பதாகவும் விரைவில் எதிர்த்தரப்பிலிருந்து மேலும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவிருப்பதாகவும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில்; "அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலமுள்ளது. இதுபற்றி எவருமே அச்சப்படவோ அல்லது அரசாங்கம் கவிழ்ந்து விடுமோவென்று அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. எதிர்த்தரப்பில் இப்போது 107 பேர் உள்ளனர். ஆளும் தரப்பில் 117 பேர் உள்ளனர். 10 மேலதிக ஆசனங்கள் எமக்குள்ளன. இந்நிலையில் அரசாங்கம் அடுத்த பொதுத்தேர்தல் வரைக்கும் ஆட்சியில் நீடிக்கும். சுதந்திரக்கட்சி சார்பிலேயே மங்கள சமரவீர, ஸ்ரீபதி ஆகியோர் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். அவ்விருவரும் எதிர்த்தரப்பில் அமர்ந்து கொண்டதற்கான பலனை விரைவில் அனுபவிப்பர். எமது கட்சியின் ஒழுக்காற்று விசாரணைகளை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விரைவில் எதிர்த்தரப்பிலுள்ள சிலர் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளனர். இதன்மூலம் அரசின் பாராளுமன்ற பலம் மேலும் அதிகரிக்கும்" என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.