Thursday, June 21, 2007

ஜனநாயகத்துக்கு இடமளிக்கும் வகையில் புதிய அரசை உருவாக்கும் சகலரும் முன்வர வேண்டும்.!!

[வீரகேசரி நாளேடு]

மனச்சாட்சிக்கு விரோதமாக ஆளுந்தரப்பில் இருக்க முடியாது என்கிறார் மங்கள சமரவீர

உள்ளக ஜனநாயகத்திற்கு இடமளிக்கும் வகையில் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு சகலரும் முன்வரவேண்டும் என ஆளுந்தரப்பிலிருந்து எதிர்த்தரப்புக்கு மாறிச் சென்ற முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாட்டு முறைமைகள் ஜனநாயக ரீதியான செயற்பாடு தொடர்பான முன்னாள் பிரதமர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் கூற்றுக்களை மேற்கோள் காட்டி உரைநிகழ்த்திய மங்கள சமரவீர மனச்சாட்சிக்கு விரோதமாக தொடர்ந்தும் ஆளுந்தரப்பில் இருக்க முடியாது என்பதனாலேயே எதிர்தரப்புக்கு மாறிவந்ததாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. எம்.பி. க்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் முடிவடைந்ததும் சபாநாயகரின் அனுமதியுடன் விசேட கூற்று ஒன்றை முன் வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.பண்டாரநாயக்கா எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை உருவாக்கியபோது கருத்து வெளிப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இந்த கட்சி ஒரு தனிநபருக்கோ அல்லது குழுக்களுக்கோ சொந்தமானதாக இருக்கக்கூடாது மக்களுக்கு குறிப்பாக வறிய மக்களுக்கு ஏற்புடையதான கட்சியாக இருக்க வேண்டுமென கூறியிருந்தார். ஆனால் சுதந்திரக்கட்சி தற்போது ஒரு குடும்பத்துக்கு மாத்திரமே சொந்தமானதாக இருக்கின்றது.

பொருட்கள் விலைஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. ஊழியர் சேமலாப நிதியை அரசாங்கம் தங்கள் தேவைக்காக பயன்படுத்துகின்றது.வறுமையை தாங்க முடியாத நிலையில் தாயும் மகளும் தற்கொலை செய்திருக்கின்றனர். வறுமைதான் அதிகமாக காணப்படுகின்றது. நாட்டில் மூன்று லட்சம் அகதிகள் உள்ளதாக யுனிசெப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.வெளியேற்றப்பட்டமைகொழும்பில் லொட்சுகளிலிருந்து தமிழ் மக்கள் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டிருகின்றனர். இந்த செயற்பாடு அரசாங்கத்தினுடைய இனவாதத்தையே எடுத்துக் காட்டுகின்றது. இதன் மூலம் புலிகளுக்கு சாதகமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது கடத்திச்செல்லப்படுதல், கப்பம் அறவிடுதல், அச்சுறுத்தல் தொடருகின்றன. வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 70 சதவீதம் ராஜபக்ஷ குடும்பத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது. நாட்டின் அரைப்பங்கு நிர்வாகம் பொலிஸ் அராஜகத்திற்கு உட்பட்டிருக்கின்றது.

உள்ளக ஜனநாயகம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை எவரும் சுதந்திரமாக பேசமுடியாது. சிறிது விமர்சனங்களை கூட அரசாங்கம் ஏற்பதாக இல்லை. எமது நாட்டு வர்த்தகர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றனர். கிராமிய அபிவிருத்திகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. கிராமத்தில் சமுர்த்தி பெறுபவர்கள் தொடக்கம் மத்தியதர அரச ஊழியர்கள் உயர்மட்ட வர்த்தகர்கள், சிறிய வர்த்தகர்கள் அனைவருமே அநீதிக்கு உள்ளாகின்றனர்.ஏகாதிபத்தியம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இந்த நாடும் ஏகாதிபத்தியத்திற்கு சிறைப்பட்டிருக்கின்றது. அரசியல் மயமாக்கலுக்கு உள்ளாகியிருக்கின்ற பொலிஸ் குழு என்னை பின் தொடருகின்றது . அதுமட்டுமல்ல ஐக்கிய தேசியகட்சிய பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பிரன்கள் எல்லோருக்குமே அச்சுறுத்தல் நிலவுகின்றது. அராஜகத்தின் வெளிப்பாடுகள் அதன் மூலம் தெரிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைமை காணப்படுகின்றது.நீதித்துறைநீதிமன்றம் பக்கச்சார்பாக செயற்படுகின்றது. பொலிசாருக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. மௌபிம பத்திரிகை நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அதன் பணிப்பாளர் துஷ்யந்த பஸ்நாயக்க 72 நாட்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நிரபராதியென விடுதலை பெற்றார். பத்திரிகையாளர் பரமேஸ்வரி குற்றங்கள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டார்.

சந்திரிக்காவுக்குஅழைப்புஇந்த அரசாங்கத்தின் பாசிசவாதத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக மக்கள் எழுச்சி போராட்டங்களை நடத்தவுள்ளோம். அதற்காக அனைவரும் ஒன்று சேருங்கள் இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தை முன்னெடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு அழைப்பு விடுக்கிறேன். தற்போது செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகி நிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நாட்டின் நலன் கருதி எங்களுடைய புதிய அணிக்கு தலைமைதாங்க முன்வரவேண்டும்.

புதிய அணியின் திட்டம் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும், ஜனநாயகம் பாதுகாக்கப்படவேண்டும், வறுமை ஒழிக்கப்படவேண்டும் .இது எமது புதிய அணியின் திட்டம். இதனை அடிப்படையாக கொண்டே மக்கள் சக்தியை உருவாக்கி எழுச்சி போராட்டங்களை நடத்தவுள்ளோம். நடைமுறை அரசியலில் இருந்து விலகி நிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எமது எழுச்சி போராட்டத்தை முன்னனெடுக்க தலைமை தாங்க வந்தாலும் நடைமுறை அரசியல் செயல்பாடுகளில் பங்கு கொள்ள அவர் ஒரு போதும் முன்வர மாட்டார்.

அமைச்சர்களுக்கும் அழைப்புஎமது எழுச்சிப்போராட்டத்திற்கு அரசாங்கத்தில் இருக்கின்ற நேர்மையாக சிந்திக்கக்கூடிய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். சர்வதேச நாடுகளை அணைத்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்தாமல் அந்த நாடுகளை பகைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றார்கள். அரச அதிகாரிகள் சர்வதேசத்தை பகைத்துக் கொள்ளக்கூடிய கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். சர்வதேசத்தை அணைத்துக் கொள்ள ரணில் விக்கிரமசிங்க எடுத்த முயற்சிகள்

பாராட்டக்கூடியவை. நன்றி தெரிவிப்பு ஆளுந்தரப்பில் நன்றாக இருந்த காலப்பகுதியில் இணைந்து செயற்பட்ட அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளோ, நிமல் சிறிபாலடிசில்வா, திணேஸ் குணவர்தன உள்ளிட்ட பலருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.அத்துடன் பதவி விலக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை செய்திகளையும் செய்தி விமர்சனங்களையும் முன்வைத்த ஊடகங்களுக்கும் மற்றும் சபாநாயகருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். சுமார் 40 நிமிடம் மங்கள சமரவீர உரை நிகழ்த்தினார். அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது சபையில் அமைதி நிலவியது. அமைச்சர் மேவின் சில்வா ஏதோ கூறி சத்தமிட எழுந்த போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கையை அசைத்து அவரை ஆசனத்தில் அமர வைத்தார். பிரதமர் ரட்ண சிறி விக்கிரமநாயக்க சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.