Sunday, June 24, 2007

சிறிலங்கா இராணுவ பலம் அதிகரிப்பு: கொழும்பு ஊடகம்.!

[ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007] சிறிலங்கா இராணுவத்தினர் தமது தரைப் படை பலத்தை விரைவாக அதிகரித்து வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக பொது பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த நந்தமித்ரா பிரிக்கேட் எனப்படும் ஊர்காவல் படையினரின் எண்ணிக்கை ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 18 மாதங்களில் ஊர்காவல் படையினருக்கு 18,000 பேரை அரசாங்கம் திரட்டியுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் என்ற போர்வையில் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தற்போது 19,000 பேரைக்கொண்டுள்ள ஊர்காவல் படையினரின் எண்ணிக்கை 37,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த படைப்பிரிவு சிங்கள கிராமங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றது. மேலும் இந்த காலப்பகுதியில் இராணுவத்தினருக்கும், காவல்துறையினருக்கும் மேலதிகமாக 8,000 பேரும் திரட்டப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாளில் இருந்து இராணுவத்தினருக்கும் 50,000 பேரை திரட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த எண்ணிக்கை படையில் இருந்து தப்பியோடுவோர் மற்றும் புதிதாக கைப்பற்றப்படும் இடங்களை தக்கவைத்தல் ஆகியவற்றை ஈடுசெய்ய பயன்படும்.. புதிதாக சேர்க்கப்படும் காவல்துறை உறுப்பினர்களை சிறப்பு அதிரடிப்படையில் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கில் இருந்து வடபகுதிக்கு நகர்த்தப்படும் இராணுவத்தினரின் இடத்தை நிவர்த்தி செய்வதற்கு அவர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். மேலும் இராணுவம் தனது 11 ஆவது படையணியை (58 ஆவது படையணி) உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த தாக்குதல் படையணியானது மணலாற்றை மையமாக கொண்டு நிறுத்தப்பட உள்ளது. அண்மையில் உருவாக்கப்பட்டு வன்னியில் நிறுத்தப்பட்ட 57 ஆவது படையணியின் சிறப்பு படையினரால் பெரியதம்பனைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது கடும் சமர் நடந்தது. மேலும் 3 சிறப்புப் படையினரும் கொல்லப்பட்டிருந்தனர். இதனிடையே மட்டக்களப்பு மாவட்டத்தின் தொப்பிக்கலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கை நான்காவது மாதத்தை எட்டியுள்ளது. இந்த நடவடிக்கைகளில் மேஜர் உடிதா பண்டாரா தலைமையில் இரண்டாவது கொமொண்டோ றெஜிமென்ட், சிறப்பு படையணியின் 7 ஆவது கெமுனுவோச் படைப்பிரிவு லெப். கேணல் சேன வடுகே தலைமையிலும், 6 ஆவது கெமுனு வோச் படைப்பிரிவு லெப். கேணல் ஜயம்பதி திலகரட்ன தலைமையிலும் ஈடுபட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.