Sunday, June 24, 2007

சிறிலங்காவில் 2 வருடங்களில் 10,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தப்பியோட்டம்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007] கடந்த 2005 ஆண்டு ஐனவரி 1 ஆம் நாளில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து 93 அதிகாரிகளும் 10,060 இராணுவத்தினரும் தப்பியோடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது: படையினர் தமது படைவலுவினை 50,000 பேரினால் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இராணுவத்திற்கு 25,000 பேரும், கடற்படைக்கு 15,000 பேரும், வான்படைக்கு 10,000 பேரும் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். ஒவ்வொரு பிரிவும் தமது படைக்கு ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளை தமது சொந்த இணைப்புக் குழுவினூடாக மேற்பார்வை செய்ய உள்ளது. இராணுவத்தின் தரவுகளின் படி 100,000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த பலம் காகிதத்தில் இருந்தாலும் பிரித்தானியாவின் இராணுவத்தின் தொகையை விட அதிகம். இருந்த போதும் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாளில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் இராணுவத்தில் இருந்து 93 அதிகாரிகளும் 10,060 இராணுவத்தினரும் தப்பியோடியுள்ளதாக இராணுவத்தினரின் பதிவேடுகள் கூறுகின்றன. சிலர் தொடர்ச்சியான பொது மன்னிப்புக்களின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த ஜனவரி 20 ஆம் நாள் முதல் பெப்ரவரி 12 ஆம் நாள் வரை இறுதியான பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதன் போது 3,979 பேர் மீண்டும் சேவைக்கு திரும்பியிருந்தனர். இதனுடன் சமர்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த படையினரின் வெற்றிடங்களும் உள்ளன. படையினரின் பலத்தை அதிகரிப்பதில் அதிகாரிகள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ளன. சாதாரணமாக ஒரு பற்றாலியன் 855 பேரைக்கொண்டதாக இருத்தல் வேண்டும். ஆனால் சிறிலங்காப் படையில் உள்ள சில பற்றாலியன்கள் 400 - 500 துருப்புக்களை கொண்டாகவே உள்ளது. எனவே நலிவடைந்த பற்றாலியன்களை இணைத்து உரிய எண்ணிக்கை கொண்ட பற்றாலியன்களை உருவாக்கினால் தான் முழுமையான பலனை அடைய முடியும் என சிலர் கருதுகின்றனர். எனினும் மற்றவர்களின் கருத்து வேறாக உள்ளது. அதவது நலிவடைந்த பற்றாலியன்களை அவ்வாறே பேணவேண்டும் அப்போது தான் அவர்கள் சரியாக இயங்க முடியும். முக்கியமாக படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு விரைவான பதவி உயர்வுகளுக்கான வாசலை திறந்துவிடும். தற்போது நடைபெறும் படைச்சேர்ப்பு முடிந்ததும் இராணுவத் தளபதியின் பதவி நிலை லெப். ஜெனரல் தரத்தில் இருந்து நான்கு நட்சத்திர ஜெனரல் தரத்திற்கு உயர்ந்து விடும். இதே போன்ற பதவி உயர்வுகள் கடற்படை மற்றும் வான்படையிலும் ஏற்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.