[சனிக்கிழமை, 16 யூன் 2007]
இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பல அரச அதிகாரிகள் மீது அனைத்துலக சமூகம் பயணத்தடையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது, நாட்டில் அதிகரித்துள்ள கடத்தல்கள் போன்றவற்றை மனித உரிமை மீறல்கள் என பல மேற்குலக நாடுகள் கூறி வருவதனால் அந்த நாட்டு அனைத்துலக வானூர்தி நிலையங்களில் கோத்தபாய ராஜபக்சவுக்கான அனுமதி மறுக்கப்படலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோத்தபாய ராஜபக்சவுக்கு நுழைவு அனுமதி தேவைப்படும் போது அதனை வழங்குவதற்கு தமது நாடுகள் விரும்பப் போவதில்லை என கொழும்பில் உள்ள பல மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவின் குடியுரிமையை வைத்திருப்பதால் அவருக்கு உலகின் சில பகுதிகளுக்கு செல்வதற்கு நுழைவு அனுமதி தேவையற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் தமது அனைத்துலக வானூர்தி நிலையங்களில் கோத்தபாய ராஜபக்சவை அனுமதிப்பதில்லை என்ற மேற்குலக நாடுகளின் தெரிவுகள் இன்றுவரை நிலுவையில் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போது மேற்குலக நாடுகளை சாடியும், கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியதையும், மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தியும் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்துக்களே மேற்குலக நாடுகளின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாகும்.
யார் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டாலும் சிறிலங்காவில் உள்ள தூதரகங்கள் அதனை வரவேற்கப் போவதில்லை. சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளின் விபரங்களை சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் சேகரித்து வருகின்றன. இதில் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்னவினால் தெரிவிக்கப்பட்ட அதிகாரிகளின் விபரங்களும் அடக்கம்.
இலங்கையில் இடம்பெற்று வரும் கடத்தல்களில் தொடர்புபட்டவர்கள் எனக்கருதப்படுவோரின் தகவல்களை லக்ஸ்மன் செனிவிரட்ன அண்மையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே தமிழ் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியது மற்றும் கடத்தல்கள் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள பல பொது அமைப்புக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு வந்த பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த அமைப்புக்கள் காத்திருப்பதாகவும் அதற்குரிய சட்ட ஆலோசனைகளை தற்போது அவர்கள் பெற்று வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்: புதினம்






மகிந்த மேலும் கொண்டு வர வேண்டும்.
ReplyDelete