Friday, June 01, 2007

தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஐ.தே.க. கடுமையான கண்டனம்.!!

[வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலுள்ள விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் அங்கிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலைக்குள் வெளியேற்றுமாறு காவல்துறையினரால் விடுக்கப்பட்ட உத்தரவை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கும், அவர்களைக் கைது செய்வதற்கும் தேவையான சட்டதிட்டங்கள் அதிகளவில் உள்ளன. அதனைப் பயன்படுத்தாது அப்பாவித் தமிழர்களை நெருக்கடிக்குள் தள்ளுவது பாரிய குற்றமாகும். இதன் மூலம் பயங்கரவாதத்தைத் தடுக்க முடியாது. அது மேலும் பலமடையும் நிலைமைதான் ஏற்படும். எதுவிதமான அனுபவமும் இல்லாத பாதுகாப்பு அமைச்சின் தன்னிச்சையான செயற்பாடுகளால் தெற்கிலும், வடக்கிலும் வாழும் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். எல்லைக்கிராமங்களில் வாழும் சிங்கள மக்களும், வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் தாம் வாழும் கிராமங்களைவிட்டு வெளியேறிச் செல்கின்றார்கள். குண்டுவெடிப்புக்களினாலும் பாதிப்படைகின்றார்கள். மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பாதுகாப்பற்ற நிலைமையே உருவாக்கப்பட்டிருக்கின்றது. அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குட்படாது மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் . வடக்கு - கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை முன்னெடுக்காது ஊடகப் பிரச்சாரத்தையே ராஜபக்ச சகோதரர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.