Tuesday, May 22, 2007

'இராணுவத் தளபதியுடன் கடற்படைத் தளபதி உரையாடுவதில்லை- எப்படி போரை வெல்லப் போகின்றீர்கள்?': ஐ.தே.க. கேள்வி.

[செவ்வாய்க்கிழமை, 22 மே 2007] "சிறிலங்காவின் இராணுவத் தளபதியும் கடற்படைத் தளபதியும் ஒருவருடன் ஒருவர் கதைப்பதில்லை. இந்த இலட்சணத்தில் நீங்கள் எவ்வாறு போரை துல்லியமாக நடதப் போகின்றீர்கள்?" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும், தவிசாளருமான திலக் கருணாரட்ன அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். 'லங்காதீப' ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கின்றார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: "முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை போரின் மூலம் சபூமால் அரசனாக முயன்றார். தற்போதைய தளபதி சரத் பொன்சேகா போரின் மூலம் தன்னை கதாநாயகனாக அடையாளப்படுத்த முயன்றுள்ளார். போரானது முறையாக நடத்தப்படவில்லை, இது சரத் பொன்சேகா, கோத்தபாய ராஜபக்ச போன்ற சிலரினது தேவைகளுக்கு ஏற்பவே நடத்தப்படுகின்றது. படையினரின் தரப்பில் அது நியாயமானதல்ல. சிறப்பு அதிரடிப்படையினர் கிழக்கில் படை நடைவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். மன்னாரை கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறப்புப் படையின் தளபதியான கேணல் பிரசன்ன சில்வாவை இராணுவத் தளபதி கேட்டிருந்தார். எனினும் தமது குடும்ப உறுப்பினர்களை சந்திக்காது நீண்டகாலம் பதுங்குகுழிக்குள் சிறப்புப் படையினர் முடங்கி கிடக்கின்றனர். இதனால் அவர்களது உளவியல் உறுதி வீழ்ச்சி கண்டுள்ளது. எனவே மன்னார் மீதான நடவடிக்கையில் அவர்கள் அதிகளவில் இறக்க நேரிடலாம் என்று பிரசன்ன தெரிவித்திருந்தார். ஆனால் அது தொடர்பாக எனக்கு அக்கறை இல்லை ஆனால் எனக்கு போரில் வெற்றி தேவை என்று பொன்சேகா பதிலளித்திருந்தார். எனினும் இறப்பதற்காக எனது படைவீரர்களை அங்கு அனுப்ப முடியாது என பிரசன்ன கூறியதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக பதவி விலகுமாறு பொன்சேகா பணித்திருந்தார் என்றார் திலக் கருணாரட்ன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.