Monday, May 21, 2007

மீனவச் சிறுவனின் அதிரடிச் செவ்வியால் சங்கடத்தில் ஆழ்ந்துள்ள இந்திய உளவுப் பிரிவு.!!

[திங்கட்கிழமை, 21 மே 2007] தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் 11பேர் கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இதேவேளை, மார்ச் மாத இறுதிப் பகுதியில் கன்னியாகுமரி, சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த 5 கடற்றொழிலாளர்கள் கடலில்வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இவை தவிர, கடற்றொழிலுக்குச் சென்ற தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டும், சுட்டுக் கொல்லப்பட்டும், படுகாயப்படுத்தப்பட்டும் வந்தனர். இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் விடுதலைப் புலிகளே காரணம் என, தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பதிகாரி முகர்ஜி அண்மையில் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார். இது ஊடகங்களில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்திய உளவுத்துறை, கியூ பிரிவு காவல்துறை, தமிழ்நாடு அரசு என்பன இணைந்து விடுதலைப் புலிகள் மீது வேண்டுமென்றே சுமத்திய பழியும், கபட நாடகமும் கடத்தப்பட்டவர்களுள் ஒருவரான சிறுவனின் வாக்குமூலத்தால் அம்பலத்திற்கு வந்துள்ளது. ஊடகங்களுக்கு நேற்று கருத்துக்கூறிய அனித்தன் என்ற இந்தச் சிறுவன், சிறீலங்கா கடற் படையினரே தம்மைக் கடத்தியதாகவும், வீடு ஒன்றில் தங்க வைத்து மிரட்டியதாகவும், நடந்த சம்பவங்களை விபரமாக விளக்கியுள்ளார். சிறுவனின் இந்த வாக்குமூலத்திற்கு தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான தமிழ்நாடு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருப்பதால், இந்திய உளவுத்துறை, கியூ பிரிவு காவல்துறை, தமிழ்நாடு அரசு என்பன சங்கடத்தில் ஆழ்ந்துள்ளன. 12 கடற்றொழிலாளர்களும் விடுதலை செய்யப்பட்டவுடன், அவர்களை உடனடியாக அழைத்துச்சென்ற கியூ பிரிவு காவல்துறையினரும், உளவுப் பிரிவினரும் ஊடகங்களுக்கு உண்மையைக் கூறக்கூடாதென எச்சரிக்கை விடுத்திருந்ததும் தற்பொழுது வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. தமிழ்நாடு திரும்பிய கடத்தப்பட்ட கடற்றொழிலாளர்களைச் சந்தித்த தமிழ்நாட்டின் முதல்வர் மு. கருணாநிதி, தமிழ்நாடு - தமிழீழ மக்களின் உறவு நிலையை உணர்ந்து, நடந்த உண்மையை முறையாக வெளிச்சத்திற்கு கொண்டுவரத் தவறி இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாக்கு நீரிணையில் கூட்டுக் கடற் கண்காணிப்பிற்கு இந்தியாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கு தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை சிறீலங்கா கடற்படையினர் சுட்டுக் கொன்றதுடன், தாக்குதலும் மேற்கொண்டிருந்தனர். ஆத்துடன், கடத்திச்சென்று தடுத்தும் வைத்திருந்தனர். ஆனால் இவற்றை விடுதலைப் புலிகளே செய்ததாக சிறீலங்கா அரசு கூறி வந்தது. சிறீலங்கா அரசின் பரப்புரைக்கு ஆதரவாக தமிழ் மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி, இந்திய - தமிழ்நாடு அரசுகளும், உளவுப் பிரிவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. சிறுவனின் அதிரடிச் செவ்வியால் சங்கடத்தில் ஆழ்ந்துள்ள இந்திய உளவுப் பிரிவு.

    ReplyDelete
  2. சில உண்மைச்சம்பவங்களை எப்படித்தான் மறைத்தாலும் ஏதோ ஒரு நாள் உண்மை தானாகவே வெளிப்படும்...

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.