Monday, May 28, 2007

உச்சநிலையில் உள்ளக மோதல்: கருணாவுக்கு பிள்ளையான் இறுதி எச்சரிக்கை.

[திங்கட்கிழமை, 28 மே 2007]


சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உள்ளக மோதல் உச்சநிலையை அடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகத்தின் செய்தி விவரம்:

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் குழுவிலிருந்து கருணா விலக வேண்டும் அல்லது பலவந்தமாக வெளியேற்றப்படும் அவமதிப்பான நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று அக்குழுவைச் சேர்ந்த பிள்ளையான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருணா குழுவின் உள்ளக மோதலை முடிவுக்கு கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி மற்றும் பிள்ளையானுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றால் அக்குழுவுக்குள் உள்ளக மோதல் வலுத்தது.

கிழக்கில் தொப்பிக்கலவை மீள எடுக்கவும் வடக்கில் ஆனையிறவை மீள எடுக்கவும் கருணாவும், பிள்ளையானும் தேவைப்படுவதால் சிறிலங்கா இராணுவத்தால் எதுவித நிலைப்பாடும் எடுக்க இயலவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் உயர்நிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கில் இராணுவம் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தள தகவல்களை பிள்ளையான் குழு வழங்கியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே நேரத்தில் ஆனையிறவிலிருந்து புலிகளை வெளியேற்ற கருணாவை பயன்படுத்திக்கொள்ளவும் இராணுவம் விரும்புகிறது.

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ பேச்சாளர் அசாத் மௌலானா, பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோருடன் உடனிருந்த முக்கியமானவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர்.

திருகோணமலை பகுதியில் தூயவன், மார்க்கன், ஜெயம், சீலன் மற்றும் அஜித் ஆகியோரை உள்ளடக்கிய பிள்ளையான் குழுவில் 800 பேரும் மங்களன் மாஸ்ரர், பாரதி, திலீபன், சின்னத்தம்பி ஆகியோரை உள்ளடக்கி கருணாவிடம் 400 பேரும் உள்ளனர்.

அண்மையில் நடந்த சமரச முயற்சிகளை பயன்படுத்தி பிள்ளையானின் சகாக்கள் பலரை கருணா குறி வைத்ததாகவும் இதில் முன்னாள் பேச்சாளர் தூயவன் தப்பியதாகவும் கூறப்படுகிறது. அக்குழுவின் இராணுவப் பிரிவு பொறுப்பிலிருந்து பிள்ளையான் விடுவிக்கப்படுவதாகவும் கருணா தொடர்ந்து தலைவராக இருப்பார் என்றும் அந்தக் குழுவின் கொழும்பு அலுவலகம் தெரிவித்திருந்தது.

"அம்பாறை மற்றும் மட்டக்களப்பில் பெண்கள் உட்பட பிள்ளையானின் சகாக்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கருணா குழு ஒழுங்கற்று குழப்பமாக உள்ளது. பிள்ளையானின் சகாக்களை கருணா கொல்லத் தொடங்கியதையடுத்து கருணா கட்டுப்பாட்டு முகாம்களை கைப்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது" என்று அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட அளவான 1.5 மில்லியனுக்கு அப்பால் 4 மில்லியன் பணத்தை ஒதுக்கிக் கொண்டதைத் தொடர்ந்து இந்த உள்ளக மோதல் உருவானது.

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளுக்கு மாதம் ரூ. 160 மில்லியன் வருமானம் வருவதாகவும், இதில் 80 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு இதர தொகை சேமிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அண்மையில் தனது சகாவான இனிய பாரதியை நிதிப் பொறுப்பாளராக கருணா நியமித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிள்ளையான் இது குறித்து கேள்வி எழுப்ப பிளவு ஏற்பட்டது. தன்னை பலப்படுத்திக்கொள்ள கடத்தல் மற்றும் சிறார்களை சேர்க்கும் நடவடிக்கையை கருணா மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நன்றி:புதினம்

2 comments:

  1. கருணாவைத் தூக்கி மடியில் கட்டிய இராணுவம் அவஸ்தைப்படுகிறது.
    மனித உரிமை மீறல் போன்ற பல பிரச்சனைகளை கருணா உருவாக்கியுள்ளான்.

    ஆனையிறவை மீட்பதற்கு கருணா பயன்படுவான் என்ற பகல் கனவுவேறு.

    ReplyDelete
  2. கிழக்கில ஒரு சிறுபகுதியைகூட பிடிக்க கருனாவால் முடியாது.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.