Friday, May 18, 2007

மாலைதீவில் கைதான நபர் மலையாளத்தில்தான் பேசினார்: அரசாங்க பேச்சாளர் தகவல்- புலிகளும் மறுப்பு

[வெள்ளிக்கிழமை, 18 மே 2007] மாலைதீவில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலிலிருந்து கைது செய்யப்பட்ட நபர் மலையாளத்தில்தான் பேசினார். அவர் பேசியது தமிழ் அல்ல என்று மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேபோல் கைது செய்யப்பட்ட நபர்கள் எமது இயக்கத்தினர் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையனும் கூறியுள்ளார். மாலைதீவு கடற்பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான கப்பலின் நடமாட்டத்தை அவதானித்த மாலைதீவு கடற்படையினர் அதனை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். எனினும் அந்த உத்தரவை மீறி அக்கப்பல் தொடர்ந்தும் சென்று கொண்டிருந்த காரணத்தால் உடனடியாக மாலைதீவு கடற்படையினர் அதன்மீது தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அக்கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. "கப்பலை மூழ்கடித்து விட்டோம். அதிலிருந்த ஐந்து பேரை கைது செய்துள்ளோம்" என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அகமெட் சகீத், தெரிவித்தார். கைது செய்யப்பட்டோரில் 4 பேர் விடுதலைப் புலிகள் என்றும் ஆயுதங்கள் அதில் இருந்தன என்றும் மாலைதீவு அரசாங்கத்தின் பேச்சாளர் கூறியிருந்தார். ஆனால் அதன் பின்னர் "இந்த விடயத்தை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள்கிறோம். ஏனெனில் கைது செய்யப்பட்ட நபர் பேசியது தமிழ் அல்ல. மலையாளம்" என்றும் பேச்சாளர் மொகமெட் சரீப் தெரிவித்தார். மாலைதீவு கப்பல் தொடர்பாக ரொய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், மாலைதீவு பகுதியில் நாம் இயங்கவில்லை. கைது செய்யப்பட்டோரும் எமது இயக்கத்தினர் அல்ல என்றார். மாலைத்தீவு அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் விளக்கம் அளித்துள்ள நிலையிலும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்றும் ஆயுதம் கடத்திய விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர் என்றும் பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.

2 comments:

  1. கண்ணை நம்பாதே. உன்னை ஏமாற்றும்..

    ReplyDelete
  2. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பயம்மா... அதான்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.