Friday, May 18, 2007

வரவு-செலவு திட்டத்தில் 75 வீதம் மகிந்த சகோதரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது: ஐ.தே.க.!!

[வெள்ளிக்கிழமை, 18 மே 2007] பொது வானூர்தித்துறை மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சராக சமல் ராஜபக்சவை நியமித்ததன் மூலம் ராஜபக்ச சகோதரர்கள் நாட்டின் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் 75 வீதத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் முன்னணி உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல ஊடகத்துறையினருக்கு தெரிவித்துள்ளதாவது: இதற்கு முன்னர் அவர்கள் வரவு-செலவுத் திட்டத்தில் 65 வீதத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர். ஏனெனில் அதிக எண்ணிக்கையான திட்டங்கள், நிறுவனங்கள் அரச தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தன. மகிந்தவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சவை நியமித்ததன் மூலம் இந்த விகிதாசாரம் 75 ஆக உயர்ந்துள்ளது. அரசின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் மக்களின் வாழ்க்கைச்செலவு மேலும் அதிகரிக்கலாம் என அவர் அங்கு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளதாவது: உலகில் பால்மாவின் உற்பத்தி 38 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. எனவே உள்ளுர் சந்தைகளில் அதன் விலையேற்றத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் அரசு மாதாந்தம் 110 மில்லியன் ரூபாய்களை வாடகையாக செலுத்தி மிகின் லங்கா நிறுவனத்திற்கு இரண்டாவது வானூர்தியை பெற்றுள்ளது. தனது பணவீக்கத்தை இந்தியா 3.8 விகிதமாக பேணிவருகின்றது. சிங்கப்பூரில் இது 1.3 வீதமாகவும், இந்தோனேசியாவில் 6.0 வீதமாகவும், தாய்லாந்தில் 1.2 விகிதமாகவும் இருந்து வருகின்றது. மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் துன்பப்படும் போது ஜே.வி.பி வாயை மூடிக்கொண்டு இருக்கின்றது என அவர் அங்கு தெரிவித்தார். நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.