Tuesday, May 29, 2007

ஓமந்தை சோதனைச்சாவடி ஊடான ஏ9 நெடுஞ்சாலை 48 மணித்தியாலத்தினுள் திறக்கப்படும் சாத்தியம்.!!

[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007] [virakesari.lk] ஓமந்தையூடான ஏ9 நெடுஞ்சாலை 48 மணித்தியாலத்தினுள் மீண்டும் பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விடயம் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் (ஐ.சி.ஆர்.சி) அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளுடன் நேற்று தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் ஓமந்தை சோதனைச்சாவடியை திறத்தல் அல்லது நாளொன்றுக்கு மூன்று மணிநேரம் என்ற ரீதியில் ஞாயிறு தவிர்ந்த ஆறு நாட்களுக்கு சோதனைச் சாவடியை திறத்தல் ஆகிய இரு யோசனைகளை ஐ.சி.ஆர்.சி. முன்வைத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக நேற்று நண்பகலளவில் ஆராய்ந்த பாதுகாப்பு அமைச்சு ஐ.சி.ஆர்.சி.யின் முதலாவது யோசனையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வாரத்தில் 3 நாட்கள் பாதையை திறக்கும் யோசனையை அரசாங்கம் ஏற்றுகொண்டுள்ளது. அந்த வகையில் நாளை அல்லது நாளை மறுநாள் ஓமந்தை சோதனைச்சாவடி போக்குவரத்துக்காக திறக்கப்படுமென தாம் நம்புவதாக தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.