Monday, May 21, 2007

பயங்கரவாத்தை எதிர்க்கும் போராட்டத்தில் ஜி-11நாடுகள் ஒன்றிணைய வேண்டும்-ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.!!

[திங்கட்கிழமை, 21 மே 2007]

ஜி11 நாடுகளின் அங்கத்தவர்களாகிய நாங்கள் ஒரேவகையான பிரச்சினைகளுக்கு புரிந்துணர்வுடன் முகம் கொடுத்து வருகின்றோம். இந்நிலையில் பயங்கரவாதத்தினால் ஏழை மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அம்மக்களை பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை எதிர்க்கும் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குரலில் அவரவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அங்கத்துவ நாடுகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன். முடியுமானவரை நம் ஒவ்வொருவரையும் நாம் பலப்படுத்த வேண்டும் அதன் மூலமே ஜி11 நாடுகள் உலகிலேயே பலமான அமைப்பாக செயல்பட முடியும் இதுவே அபிவிருத்திக்கு ஒரே வழி என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஜோர்தான் டெட்சீ நகரத்தில் அமைந்துள்ள கிங் ஹுசைன் மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான ஜி11 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;நியூயோர்க் நகரத்தில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 61 ஆவது கூட்டத்தொடரின் பின்னர் எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் செயல்பட்டு குறுகிய காலத்திற்குள் மீண்டும் ஒரு தடைவை சந்திப்பதையிட்டு பெருமைகொள்கின்றேன் .அதற்கு பின்னர் தயாரிக்கப்படுகின்ற அறிக்கையே இந்த வருடம் ஜுன் மாதம் ஜேர்மனில் நடைபெறுகின்ற ஜி8 நாடுகளின் கூட்டத்தொடரில் சமர்ப்பிப்படும்.

இதேவேளை பயங்கரவாத அச்சுறுத்தல்கள், அதிகரித்து செல்கின்ற எரிபொருட்களின் விலையேற்றம், இயற்கை அனர்த்தங்களுக்கு நாம் இன்று முகம் கொடுத்து கொண்டு மத்திய வருமானத்தை பெற்று அபிவிருத்தியில் ஒரு மட்டத்தில் இருக்கின்றோம் என்பதனால் ஒரு மட்டத்தில் இருக்காத நாடுகளுக்கு கிடைக்கின்ற உதவிகள் எமக்கு தேவையில்லை. அதேபோல மத்திய வருமானத்தை பெறுகின்ற நாடுகளுக்கும் நாங்கள் உள்வாங்கப்படமாட்டோம்.

அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளுக்கு தேவையான எரிபொருட்கள் கிடைக்காவிடின் தேவையான வகையில் வீதிகளை அபிவிருத்தி செய்ய முடியாது. வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு கூட எம்மிடம் தனிமனித வருமானம் இல்லை . எனினும் ஜி8 நாடுகளின் முன் நிற்பதற்கு ஜி11 நாடுகளின் மாநாடு ஒரு ஆரம்பமாகும். எமது பிரச்சினைகளை அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு எடுத்து கூறுவதற்கு ஜி11 நாடுகளின் மாநாடு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. எங்களுக்கு பொருத்தமான, இலக்கை அடையக்கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு இச்சந்தர்ப்பத்தில் கோருகின்றோம் . அபிவிருத்தித்துறையில் நாங்கள் பொதுவான மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். சுதந்திர பொருளாதார கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளோம். பாரிய பொருளாதார கட்டமைப்பில் குறிப்பிடக்கூடிய சில முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம் கிராம மட்டங்களில் நலன்புரி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளக்கூடிய பொருளாதார அபிவிருத்தியை கொண்டு நடத்துவதற்கான உதவிகள் எமக்கு தேவைப்படுகின்றன.

பொருளாதார அபிவிருத்தி என்று பார்க்கின்ற போது கிராமப்புற மக்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியது கட்டாயமானதாகும்.எமது பொருளாதார அபிவிருத்தியில் கிராமப்புற மக்கள் புறந்தள்ளப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது. நாட்டில் அபிவிருத்தி செயல்பாடுகளில் இடைவெளி இருக்கக்கூடாது. கடந்த காலங்களில் பொருளாதார அபிவிருத்தியில் கிராமிய பிரதேசங்களில் கண்டுகொள்ளப்படவில்லை.

இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள 10 வருட அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கிராமப்புற மக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களின் வீதி.மின்சாரம், நீர்ப்பாசனம், வீடமைப்பு போன்ற துறைகள் அபிவிருத்தி செய்யப்படும். கிராமபுறங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவே அதிகமாக முதலீடு செய்ய வேண்டியுள்ளது.

ஸ்திரமான அரசியல் சூழ்நிலை நிலவினால் மட்டுமே தடங்கல்கள் அற்ற அபிவிருத்தி மட்டத்தை பேணலாம். அந்தவகையில் மிகவும் பயங்கரமான பயங்கரவாதத்தை ஒழிப்பது மிகவும் முக்கியமானது.பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள அழிவு முழு உலகத்தாலும் உணரக்கூடிய ஒரு விடயமாகும். இலங்கை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடாகும். அதற்கெதிராக முழு உலகத்துடன் இணைந்து முகம் கொடுத்துள்ளோம்.

அனுதாபமற்ற பயங்கரவாதத்திற்கு பல தடவைகள் முகம் கொடுத்துள்ளோம். பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டும் எமது நோக்கமல்ல. பயங்கரவாதத்திடம் சிக்கியுள்ள மக்களை மீட்டெடுக்க வேண்டும். இந்த நோக்கங்களை அடைந்து கொள்ளும் போது மனித உரிமையையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றோம் . அனைத்து இன மக்களின் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதுடன் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் கடந்த வருடம் 7 வீதத்திலான பொருளாதார வளர்ச்சியையும் அடைந்துள்ளோம். வேலையின்மை வீதம் குறைந்துள்ளது. ஏற்றுமதி துறையில் 8 சதவீதம் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் 600 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளுக்கெல்லாம் வியாபித்துள்ள பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பாக அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகள் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும் .அம்மான், லண்டன், இஸ்லாமாபாத், கொழும்பு அல்லது வேறு எந்த நாட்டிலாவது பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெற்றால் அதனை ஜி11 நாடுகள் வன்மையாக கண்டிக்கவேண்டும். இடங்கள் வேறுபட்டாலும் பயங்கரவாதம் பயங்கரவாதமே.

முன்னேற்றம் அடைந்த நாடுகள் பயங்கரவாத அமைப்புக்களை கடுமையான அமைப்பாக நோக்காமை துரதிஷ்டவசமான நிலையாகும். தமது நாட்டில் பயங்கரவாதம் இல்லாவிடின் அந்நாடுகள் பயங்கரவாதிகளை விடுதலைக்காக போராடும் விடுதலைவாதிகளாக நோக்குகின்றன. சில நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு அலுவலகங்களை அமைத்து நிதி சேகரிப்பதற்கும் ஜனநாயகம் என்ற பெயரில் இடமளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்நாடுகள் பயங்கரவாதம் தொடர்பாக அக்கறை செலுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. புரிந்துணர்வுடன் ஒரேவகையான பிரச்சினைகளுக்கு ஜி11 நாடுகளின் அங்கத்தவர்களாகிய நாங்கள் முகம் கொடுத்து வருகின்றோம் இந்நிலையில் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தினால் ஏழை மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அம்மக்களை பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

பயங்கரவாதத்தை எதிர்க்கும் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குரலில் அவரவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அங்கத்து நாடுகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன். முடியுமானவரை நம் ஒவ்வொருவரையும் நாம் பலப்படுத்த வேண்டும். அதன் மூலமே ஜு11 நாடுகள் உலகிலேயே பலமான அமைப்பாக செயல்பட முடியும். அபிவிருத்திக்கு இதுவே ஒரே வழியாகும் என்றார்.

virakesari.lk

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.