Saturday, February 03, 2007

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பு வெகுவாக அதிகரிப்பு.!!!

[03 - February - 2007] நாட்டின் 59 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பாதுகாப்பு வெகுவாக அதிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் இடம்பெற்று வரும் படை நடவடிக்கைகளையடுத்து, ஏற்கனவே கொழும்பின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி அதன் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. வீதிச் சோதனை நிலையங்கள் அதிகரிக்கப்பட்டும் வீதித் தடைகள் போடப்பட்டும் 24 மணி நேர கண்காணிப்பில் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஏனைய மாவட்டங்களிலிருந்து ஆயிரக் கணக்கான படையினரும் பொலிஸாரும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு இந்தப்பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாளை நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக, பாதுகாப்பு கருதி பல வீதிகள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளன. நாளைய தினம் பாதுகாப்பு அதி உச்சமாயிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் படைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.