Saturday, February 03, 2007

இராமேஸ்வரம் கடற்பரப்பில் தீவிர கண்காணிப்பை ஆரம்பித்தது இந்தியா.!!!

[03 - February - 2007]

தமிழகத்தில் இராமேஸ்வரத்துக்கு அப்பாலான கடற்பரப்பில் இந்திய கடற்படையினரும் கரையோர காவல் படையினரும் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களெனச் சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் வசமிருந்து இரண்டரை மெற்றிக் தொன் போல்ஸ் குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

இவை இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையிலேயே கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுவதால் இந்திய கடற்பரப்பில் கடற்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனொரு கட்டமாகவே, இராமேஸ்வரம் கடற்பரப்புக்கு அப்பால் இந்திய கடற்படையும் கடலோரக் காவல் படையினரும் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து மன்னார் வளைகுடா கரையோரப் பகுதிகள், பாக்கு நீரிணை சர்வதேச கடல் எல்லை வரை கடற்படையின் அனைத்துப் பிரிவுகளும் கரையோர காவல் படையும், சுங்க அதிகாரிகளும் தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இந்தக் கடற்பிராந்தியத்தில் கரையோர காவல் கப்பல்கள், கடற்படைக் கப்பல்கள் மிகவும் சக்திவாய்ந்த பீரங்கிகளுடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நிலைகொண்டுள்ளதாக தமிழ்நாட்டு கடற்படைத் தளபதி கொமடோர் பிலிப் வன்ஹோல்ரன் தெரிவித்தார்.

தனுஷ்கோடிக்கு அருகே முகுந்தராயர் சத்திரம் பகுதியில் முன்னரங்க கண்காணிப்பு நிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய கடல் எல்லைக்குள் நுழைபவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் கடத்தல்களை கண்காணிக்க 24 மணிநேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் இராமேஸ்வரம் மீனவர்கள் தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் போது அனுமதிப் பத்திரங்களை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டுமெனவும் கொமடோர் ஹோல்ரன் தெரிவித்துள்ளார்.