[03 - February - 2007]
இனநெருக்கடிக்கு தீர்வு காண மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக ஜேர்மனிக்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம விளக்கிக் கூறியுள்ள அதேவேளை, இலங்கைக்கு தொடர்ந்து உதவியளிப்பதாக ஜேர்மன் உறுதியளித்துள்ளது.
ஜேர்மனுக்கு இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர், ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் பிராங்வோல்டர் ஸ்ட்டன் மீரை பேர்லினில் அமைந்துள்ள வெளிவிவகார அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இக்கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன, ஜேர்மன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பலிபான ஆகியோருடன் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இங்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, இலங்கையின் சமாதான முயற்சிகளின் தற்போதைய நிலை, இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், இதற்கு தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் ஆதரவு நிலையை குறித்தும் விளக்கியுள்ளார்.
அத்துடன், இலங்கை - ஜேர்மனி ஆகிய இரு நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக நிலவிவரும் உறவு குறித்து இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இங்கு ஆராய்ந்துள்ளனர். இதன்போது, அமைச்சர் ரோஹித போகொல்லாகம இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஜேர்மனியின் பங்களிப்பு குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஜேர்மன் தலைமை வகிக்கும் நிலையில், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஜேர்மனி வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இங்கு பதிலளித்துள்ள ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் அபிவிருத்திக்கு ஜேர்மன் தொடர்ந்து உதவியளிக்குமெனவும், பொருளாதார ஒத்துழைப்புகளை வழங்குமெனவும் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதை இடைநிறுத்தியிருந்த ஜேர்மனி இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான கலந்துரையாடலை அடுத்து அந்நிதியுதவிகளை தொடர்ந்து வழங்கப்போவதாக செய்திகள் வெளியாகிய போதும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹண ஜேர்மனி இதற்கு முன்னர் இலங்கைக்கான நிதியுதவிகளை இடைநிறுத்தி வைக்கவில்லையெனவும் இது குறித்து முன்னர் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் தவறென்றும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், இன்று சனிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்புகிறார்.
Saturday, February 03, 2007
இலங்கைக்கு தொடர்ந்து உதவியளிப்பதாக போகொல்லாகமவிடம் ஜேர்மனி உறுதியளிப்பு.!!
Saturday, February 03, 2007





