Sunday, February 11, 2007

நீக்கப்பட்ட அமைச்சர்களின் பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டுள்ளன.!!!

[ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2007]

கடந்த வெள்ளிக்கிழமை சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சாவினால் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்களின் உயர் பாதுகாப்புக்களும் அரசினால் விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தமது பாதுகாப்பை அதிகரிக்கும் படியும் அனுரா பண்டாரநாயக்கா, மங்களா சமரவீரா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் அரசிடம் வேண்டுகோள் விடுத்த 48 மணிநேரத்தில் அவர்களின் பாதுகாப்புக்கள் விலக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவுடன் இந்த மூன்று மூத்த அமைச்சர்களினதும் பாதுகாப்புக்கள் விலக்கப்பட்டதுடன் அவர்களின் பாதுகாப்பிற்கு இரு காவல்துறை உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று அமைச்சர்களின் பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினரும், மேலதிகமாக பின்தொடர்ந்து செல்லும் வாகனங்களும் முன்னர் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவினால் தான் மேற்படி அமைச்சர்களின் பாதுகாப்பு உறுப்பினர்கள் மீளப்பெறப்பட்டதாகவும். தமது அறிவித்தல்கள் இல்லாது இந்த அமைச்சர்களின் பாதுகாப்பில் தலையிட வேண்டாம் என்று இராணுவத்தினரும் பணிக்கப்பட்டுள்ளனர்.

எனது பிரச்சாரங்களால் தான் விடுதலைப்புலிகளின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்தது, எனவே எனக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து ஏற்படலாம். எனது பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என மங்களா பெப்ரவரி 7 ஆம் நாள் சிறீலங்கா காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேரா மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்த மங்களாவின் பாதுகாப்பு உறுப்பினர்களை நீக்கிவிட்டார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் தனது உயிருக்கு வேறு அரசியல் கட்சிகளாலும் ஆபத்து நேர்ந்துள்ளதாகவும், அரச அதிபர் தேர்தலின் போது மகிந்தவின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தான் பிரதான இணைப்பாளராக இருந்ததாலும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அதனால் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் அனுரா பண்டாரநாயக்கா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அவரது பாதுகாப்பை அதிகரிக்கும்படி கடந்த வாரம் உத்தரவிட்ட மகிந்த தற்போது பாதுகாப்பை விலக்கிவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு உள்வாங்கியதற்கு எதிர்ப்புக்களை தெரிவித்தால் தான் இந்த மூன்று அமைச்சர்களும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதுடன் அவர்களது பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.