Sunday, February 11, 2007

இலங்கை ஒமந்தை ஏ9 வீதியில் இராணுவ சோதனைச்சாவடி மூடப்பட்டுள்ளது.!!!

[ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2007]


இலங்கையின் வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் ஓமந்தையில் ஏ9 வீதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச்சாவடி மேலிடத்து உத்தரவுக்கமைய மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருப்பதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை முன்னறிவித்தல் இன்றி மூடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்திலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்குச் செல்லும் உயிலங்குளம் பாதையில் உள்ள இராணுவ சோதனைச்சாவடி கடந்த ஒரு வார காலமாக இராணுவத்தினரால் மூடப்பட்டுள்ளதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், வடக்கே வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுகிழமையன்று ஒரு சிங்களவர் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் நிலாவரை பகுதியில் ஞாயிற்றுகிழமை காலை இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிசார் தெரிவிததுள்ளனர். இவர்கள் இருவரும் சனிக்கிழமை சிறுப்பிட்டி பகுதியில் அவர்களது வீடுகளில் இருந்து அடையாளம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டவர்கள் எனவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BBC.com