(திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2007)
சிறீலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சாவினால் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் துறைமுகங்கள் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் மங்களா சமரவீரா சிங்கப்பூரில் இருந்து நேற்று கொழும்பு திரும்பினார். அவரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்றதுடன் மகிந்தவை கண்டித்து சுலோகங்களும் எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவிநீக்கப்பட்ட மற்றுமொரு அமைச்சரான சிறீபதி சூரியாராச்சி, விமானநிலையம் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து சபைத் தலைவரான ரிரான் அலஸ் ஆகியோர் மங்களாவை விமானநிலையத்தில் வரவேற்றதுடன். உள்ளுராச்சித் தலைவர்கள் உட்பட பெரும் திரளான மாத்தறை மாவட்ட கட்சி உறுப்பினர்களும் மங்களாவை வரவேற்றுள்ளனர். இந்த வரவேற்பு கூட்டத்தினால் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும் குறிப்படத்தக்கது.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான சாலையில் உள்ள 18 ஆவது மைல்கல்லடியில் ஒன்று திரண்ட ஆதரவாளர்கள் மகிந்தாவை கண்டிக்கும் சுலோகங்களை கூறியபடி விமானநிலையம் நோக்கி செல்லமுற்பட்ட போது குண்டான் தடிகள், கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் வந்த காவல்துறையினர் அவர்களை விமானநிலையத்திற்கு செல்லவிடாது தடுத்துள்ளனர்.
தன்னை வரவேற்க வந்த தனது ஆதரவாளர்களுக்கு நன்றி கூறிய மங்களா ஊடகங்களுக்கு கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. எனினும் இதற்கு மேலும் அரசுடன் சேர்ந்திருப்பதை தாம் அவமானமாக கருதுவதாக மங்களாவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேசமயம் நாடு திரும்பிய மங்களா அனுரா பண்டாரநாயக்கா, சிறீபதி சூரியாராச்சி மற்றும் தொகுதி ஆதரவாளர்களுடன் தமது அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக ஆராய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினம்.கொம்.
Monday, February 12, 2007
நாடுதிரும்பிய மங்களாவிற்கு விமானநிலையத்தில் பெரும் வரவேற்பு.!
Monday, February 12, 2007





