Monday, February 12, 2007

சிறீலங்கா அரசு நேர்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்: அலன் றொக்.!

[திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2007]

சிறீலங்கா அரச படைகள் துணை இராணுவக்குழுவான கருணாகுழுவினருடன் இணைந்து மேற்கொள்ளும் சிறார் கடத்தல்கள் தொடர்பாக அரசு இதயசுத்தியுடன் முழுஅளவிலான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நாவின் சிறுவர்களும் ஆயுதமோதலுக்குமான விசேட பிரதிநிதியான அலன் ரொக்கினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு சில பரிந்துரைகளை சிபார்சு செய்துள்ளது. மேலும் விடுதலைப்புலிகள் மற்றும் கருணா குழுவினர் மீதும் சிறார் படைசேர்ப்பை நிறுத்துவதற்கு ஏதுவாக சில அழுத்தங்களை ஏற்படுத்துமாறும் பரிந்துரை செய்துள்ளது.

அலன் றொக்கின் அறிக்கையில் அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், விடுதலைப்புலிகள், கருணாகுழு என்பன மேற்கொள்ள வேண்டியவை தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு மேற்கொள்ள வேண்டியது:

கருணா குழுவின் சிறார் படைசேர்ப்பில் அரச படையினரின் பங்களிப்பு தொடர்பான முழுமையான, நம்பகத்தன்மையான விசாரணைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். எந்தப் பிரிவினரின் பழிவாங்கும் தாக்குதல்களில் இருந்தும் முறைப்பாடு செய்பவர்கள், சாட்சிகள் ஆகியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல். விசாரணைகளை வெளிப்படையாக நடாத்துதல். அரசினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் உண்மைத்தன்மை, நேர்மை ஆகியவற்றில் சர்வதேச சமூகம் திருப்தி அடையவேண்டும் என்பன இதில் அடங்கும்.

சிறார் கடத்தல்களில் ஈடுபடும் எல்லா தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கருணா குழுவினால் கடத்தப்பட்ட சிறுவர்களை பாதுகாப்பாக விடுவித்து அவர்களின் பெற்றோருடன் சேர்ப்பிக்க வேண்டும்.

சிறீலங்கா காவல்துறையினரும், படையினரும் அவர்களிடம் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக பூரண விசாரணைகளை நடாத்துவதுடன், கடத்தலில் ஈடுபடும் எந்த தரப்பானாலும் தக்க நடவடிக்கை எடுப்பதுடன் கடத்தப்பட்ட சிறுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்.

சிறுவர் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்டங்களை சிறீலங்கா அரசு கொண்டுவர வேண்டும்.

மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கு உதவிகளை வழங்கவேண்டும்.

சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் சமூகத்தின் நலன்களும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக சிறுவர்களின் பாதுகாப்பு முக்கியமானது.

விடுதலைப்புலிகள் கருணாகுழு ஆகியன மேற்கொள்ள வேண்டியவை:

18 வயதிற்கு குறைந்தோரை படையில் சேர்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

சிறார்களை தமது படைகளில் இருந்து விடுதலை செய்வதுடன், யுனிசெப்ஃ உடன் இணைந்து அவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

தமது தளபதிகளுக்கு சிறார் படைசேர்ப்பு தொடர்பான பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

சிறுவர்கள் படையில் உள்ளனரா என சோதனை செய்வதற்கு முகாம்களுக்கு யுனிசெப்ஃ மற்றும் சர்வதேச சிறார் பாதுகாப்பு அமைப்புக்களை அனுமதிக்க வேண்டும்.

கடந்த வெள்ளிக்கிழமை நியூயோர்க் சென்றிருந்த சிறீலங்கா அரசின் பிரதிநிதியான பெரேரா றொக்கின் அறிக்கை தொடர்பாக சிறீலங்கா அரசின் விளக்கங்களை தெளிவுபடுத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.