[08 - February - 2007]
ராதிகா குமாரசாமியின் நியமனமும் இலங்கை அரசுக்கு எதிரானது என்கிறார் வீரவன்ச
ஐ.நா. சபை அலுவலகங்களுக்கு விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் நியமிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தூதரகங்களையும் ஐ.நா. அலுவலகத்தையும் சேர்ந்த அனேகமானவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதாரவாளர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்காக ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலக ஊடக அதிகாரி மொகான் சமரநாயக்க பழிவாங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
கொழும்பு ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் ஊடக அதிகாரி மோகன் சமரநாயக்க அநீதியை எதிர்கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சமீபத்தைய நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இது இடம் பெறுகின்றது.
அவர் எழுதிய கட்டுரைக்காக அவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட கட்டுரை ஆங்கிலத்திலும் வெளியானது. சதாம் ஹுசெனையும், பிரபாகரனையும் ஒப்பிட்டு அவர் எழுதியிருந்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை சேர்ந்த ஒர்லா கிளின்டன் இது குறித்து ஐக்கிய நாடுகளுக்கு எழுதியுள்ளார். சமரநாயக்கவிடம் விபரம் கோரியுள்ளார்.
மொகான் சமரநாயக்க வெகு விரைவில் பதவி நீக்கப்படலாம்.
ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் கருத்துச் சுதந்திரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதன் அதிகாரிகளுக்கே தெரியாது.
மொகான் சமரநாயக்க அவரது மாற்றுக் கருத்திற்காக பழிவாங்கப்படுகின்றார்.
மொகானின் கருத்திற்கும் ஐக்கிய நாடுகளின் நிலைப்பாடிற்கும் வித்தியாசமுள்ளது.
அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை கொண்டிருந்தார். தூதரகங்களையும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தையும் சேர்ந்த அனேகமானவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்.
எனினும், மொகான் சமரநாயக்க அப்படிப்பட்டவரல்ல.
விடுதலைப் புலிகளின் கௌசல்யன் படுகொலை செய்யப்பட்டவுடன் முன்னாள் செயலாளர் நாயகம் கவலையும், கண்டனமும் வெளியிட்டார். இது முன்னர் இடம்பெறாதது.
கொபி அனானை கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அது முறியடிக்கப்பட்டது. பின்னர் அவர் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் விசேட பிரதிநிதியை சந்தித்தார்.
அலன்ரொக் இராணுவத்திற்கு எதிராக குற்றச் சாட்டுகளை முன்வைத்தார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்காக ராதிகா குமாரசுவாமி ஐ.நா. உதவிக்கு நியமிக்கப்பட்டார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு மிசேல் பேர்மியோவின் இடத்திற்கு நிரப்பப்பட்டவர் மிகவும் மோசமான பின்னணியை கொண்டவர். கிழக்கு திமோருடன் தொடர்புள்ளவர்.
விடுதலைப் புலிகளில் ஆதரவாளர்களே ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு நியமிக்கப்படுகின்றனர்.
தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் தற்போது பணி புரிபவர்கள் பலர் முன்னர் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் பணி புரிந்தவர்களாவர்.
ஐக்கிய நாடுகள் சுதந்திர இலங்கையை துண்டு துண்டாக பிளவுபடுத்த முயல்கின்றன.
Thursday, February 08, 2007
ஐ.நா. அலுவலகங்களுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நியமிக்கப்படுவதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு.!!
Thursday, February 08, 2007





