[08 - February - 2007] இலங்கையின் வட மேற்குப் பகுதியில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ள இந்தியாவும் சீனாவும் தனித்தனியே தலா 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்புப்பணமாக செலுத்த வேண்டுமென்று இலங்கை கேட்டுள்ளது. " இப்பகுதியில் 8 எண்ணெய் வளப்பிரதேசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தேர்வு அடிப்படையில் கொடுக்கப்பட்டிருப்பதாக பெற்றோலியம், பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளும் எண்ணெய் வளப்பகுதி பாதுகாப்புக்காக தலா 10 மில்லியன் டொலர்களை வழங்கவேண்டுமெனவும் ஏற்கனவே நாம் கேட்டுள்ளோம். வைப்பு தொகையான 100 மில்லியன் டொலர்களுடன் மேலதிகமாக பாதுகாப்பு தொகையான 60 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட வேண்டும். மன்னார் பரப்பிலுள்ள ஒரு எண்ணெய் வளத்துண்டு இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனத்துக்கு (??எஇ) வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடம் ஆய்வுக்காக நோர்வேயின் ரீ.ஜி.எஸ் . நிறுவனத்துக்கு 10.5 மில்லியன் டொலர்களை இலங்கை வழங்கியது. இந்த எண்ணெய்வள ஆய்வு வெற்றியளித்தால் அடுத்து வரும் மூன்று வருடங்களுக்குள் எண்ணெய் வளமிக்க நாடாக இலங்கை திகழும் என்றும் பௌசி தெரிவித்தார். அரசாங்கமானது பெற்றோலிய வள அமைச்சினூடாக வெளிநாட்டு நிறுவனங்கள், சர்வதேச அமைப்புக்களுக்கு பெற்றோலிய ஆய்வு சம்பந்தமாக விளம்பரப்படுத்தியுள்ளது. கடந்த 1970 மற்றும் 1980 காலப்பகுதிகளிலும் எண்ணெய்வளமிக்க இடங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் நடை பெற்றாலும் அது சாத்தியப்படவில்லை எனவும் பெற்றோலியம், பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.





